தலைகளைக் குவித்தார்கள். சிறிது நேரத்தில் அந்தம்மா சிறிது, முன் நடந்து, சரோசாவின் தோளில் கை போட்டபடியே அபயம் அளித்தாள். அவன் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் பிரச்சினைக்கு, விடையளித்தாள்:
"எங்க அமைப்புக்கு ஒன்ன மாதிரி பல அபலைப் பெண்கள் வராங்க. பெரிய இடத்து அபலைகள், சிறிய இடத்து அபலைகள்னு... இதில் சாதி பேதமோ, அந்தஸ்து வித்தியாசமோ கிடையாது. அபலைங்க என்கிற ஒரோயொரு அந்தஸ்துதான். இவங்களுக்காக பல இடங்களில் பல ஆபீசர்களுக்கு லட்டர் எழுதுறோம். அதுகளை கொண்டு கொடுக்கணும். எங்க சங்கத்துக்கு பல கிளைகள் இருக்குது. அவங்களுக்கு சர்க்குலர் கொண்டு போகணும். அவங்க எழுதுற லட்டர்ங்களை கொண்டு வரணும். ஆபீசையும் பார்த்துக்கணும். ஆபீசுக்கு இப்போ கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்குறோம். அதுல ஒரு குடியிருப்பும் கட்டுறோம். அது தயாரானதும், நீ அங்கேயே ஒன் தாத்தாவோட தங்கிக்கலாம். நான் சொன்ன வேலையெல்லாம் செய்யறதுக்கு ஒனக்கு மாசம் 700 ரூபா தாறோம். உன்ன வேலைக்காரியா கூப்பிடல. எங்களில் ஒருத்தியாகத்தான் கூப்பிடுறோம். நானே இப்படி வந்தவள்தான். உன்ன, பணிவிடைக்காகக் கூப்பிடல. எங்க பணிகளைப் பங்கிட்டுக்கத்தான கூப்பிடுறோம். எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை, 'தோழர்', 'தோழியர், என்கிறதுதான்; வேலைக்காரன், வேலைக்காரி என்கிறதில்லை. என்ன சொல்றே சரோசா?''
பல பொதுக்கூட்டங்களை இஷ்டத்துக்கு விரோதமாகக் கேட்டுப் பழகிய ருக்குமணி, தன்னையும் அறியாமலேயே கை தட்டினாள். சரோசாவை தூக்கிப் பிடித்து அவள் கன்னத்திலும், உச்சியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.
சரோசாவுக்கு உச்சி முதல் பாதம் வரை எதோ ஒன்று, பூப் பூவாய் விழுவதுபோல் இருந்தது. மனதிற்குள் இதயம் என்று சொல்லுகின்ற இடம் பிரபஞ்சம்போல் விரிவது மாதிரி தோன்றியது. இதுதான் மகிழ்ச்சி என்று ஏதோவொன்று முதன்முறையாய் அவளிடம் உணர்த்திக் கொண்டிருந்தது. இதயத்தை யாரோ பூவால் வருடிவிடுவது போல் இருந்தது. அங்கிருந்து வாய்க்குள் சிரிப்புச் சிரிப்பாய் ஏதோவொன்று வந்தது. அதுவே அழுகை அழுகையாயும் நின்றது. அவள் தன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள ஆள் தேடுபவள் போல் இளங்கோவையும், பாமாவையும் ஒருசேரப் பார்த்தாள். ருக்குவை தனித்துப் பார்த்தாள். பின்பக்கமாய் நின்ற நாயினாவை முன்பக்கமாய் நகர்த்திக் கொண்டாள். பின்னர் அந்தம்மாவை கண்ணீரும் கம்பலையுமாகப் பார்த்து, "நான் சேரிக்காரிம்மா. படிக்காத முண்டம்மா” என்றாள். இப்படிச்