விளம்பரங்களை வாங்கி அனுப்புவதன் மூலம் பத்திர்கைகளின் விற்பனைக் கமிஷன் தவிர விளம்பரக் கமிஷனாகவும் அவனுக்கு ஏதாவது கிடைக்கும். ஏஜெண்டைப் பொறுத்தவரை அந்த மாத விளம்பரங்களில் ஒன்று இப்போது போய்விட்டது. நஷ்டம்தான்.
"ஐரோப்பிய நகரம் ஒன்றில் சில ஆண்டுகள் வசித்துவிட்டுத் தாயகம் திரும்பும் மேற்படிப்பும் உயர்கல்வித் தகுதியும் உள்ள முப்பத்திரண்டு வயது மணமகனுக்கு மணமகள் தேவை. கௌசிக கோத்திரம் அல்லாத கோத்திரத்தைச் சேர்ந்தவர் எழுதவும். மணமகள் அழகாகவும் இலட்சணமாகவும் குடும்பப் பாங்காகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பி.ஏ. வரை படித்திருந்தால் நல்லது. குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.சி.யாவது பாஸ் செய்திருக்க வேண்டும். புகைப்படம் முதலிய விவரத்தோடு ஜாதகமும் அனுப்ப வேண்டும்" - என்னும் பொருள்பட ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய விளம்பரம் வேணு மாமாவின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டவுடனேயே பாரிஸூக்கும் ஒரு காப்பி அனுப்பப்பட்டது. விசுவேசுவர சர்மாவின் பிள்ளை ரவிக்கு அதை முதலில் அனுப்பச் சொன்னதே வேணு மாமாதான்.
வேணு மாமாவின் பிள்ளை சுரேஷுக்குப் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்தில் பெரிய உத்தியோகம். சுரேஷ் முதலில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நியூயார்க்கில் இருந்தான். அப்புறம் பாரிஸுக்கு மாற்றப்பட்டு இப்போது சில ஆண்டுகளாகப் பாரிஸில் இருக்கிறான். பாரிஸில் குடும்பத்தோடு வசித்து வந்த சுரேஷ் அங்கு வந்ததிலிருந்தே தன் தந்தையையும் ஒரே தங்கையையும், வரச்சொல்லிச் சங்கரமங்கலத்துக்கு எழுதிக் கொண்டே இருந்தான். வேணு மாமாவும் அவர் பெண்ணும் அசையவே இல்லை. கடைசியாக நாலைந்து மாதங்களுக்கு முன்பு சுரேஷ் இரண்டு பேருக்குமாக அங்கிருந்து விமான டிக்கட்டையே வாங்கி அனுப்பிவிட்டான். வேணு மாமாவும் அவர் பெண்ணும் பாரிஸ், லண்டன் எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய பின்புதான் பாரிஸிலிருக்கும் தன் பிள்ளை ரவியைப் பற்றிய சில விவரங்கள் விசுவேசுவர சர்மாவுக்குத் தெரிந்தன.
வேணு மாமா அந்த விபரங்களைத் தெரிவித்த போது, முதலில் விசுவேசுவர சர்மாவால் அவற்றை நம்பக் கூட முடியவில்லை. வேணு மாமா என்னவோ மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் தான் சர்மாவிடம் அதைச் சொல்லியிருந்தார். புறங்கூறுவது போலவோ குறை கூறுவது போலவோ அவர் சர்மாவிடம் அதைக் கூறவில்லை.