சர்மா ஆல்பத்தில் அடுத்த பக்கத்தைப் புரட்டினார்.
"இது வெனிஸ்-அவா ரெண்டு பேரும் போட்லே போறா. வெனிஸை மிதக்கும் நகரம்னு இத்தாலியிலேயே சொல்லுவா மாமா. பாரிஸிலேயிருந்து ஜெனிவா, ரோம் எல்லாத்துக்கும் ரயில்லேயே போயிடலாம் மாமா... நானும் அப்பாவும்கூட ரயில்லேயேதான் அங்கெல்லாம் போனோம். அவா ரோம்'னு சொல்றதில்லே 'ரோமா'ன்னு தான் சொல்றா..."
ஆல்பத்தில் மற்றொரு பக்கம் புரள்கிறது. சர்மாவின் கைவிரல்கள் சுபாவமாக இயங்காமல் மெல்ல நடுங்குவதையும், பதறுவதையும் வசந்தி கவனித்தாள். வேணு மாமா சர்மாவைக் குஷிப்படுத்த முயன்றார்.
"நான் பாரிஸிலே அவகிட்டப் பேசிண்டிருந்தப்போ, 'சௌந்தர்ய லஹரி'யைப் பற்றி-என்னை ஏதோ இவன் ரொம்பத் தெரிஞ்சவனாக்கும்னு அவளா நெனைச்சுண்டு என்னமோ சந்தேகம் கேட்டாள். "கமலீ! இதெல்லாம் நீ சங்கரமங்கலத்துக்கு வர்றப்போ உன் எதிர்கால மாமனாரிட்டக் கேளு. அவர் பெரிய சான்ஸ்கிரிட் ஸ்காலர்"னு அவகிட்டச் சொல்லியிருக்கிறேன்..."
"ஏன் ரவியையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமே?" என்று அமுத்தலாகப் பதில் வந்தது சர்மாவிடம் இருந்து.
வேணுமாமா தளரவில்லை. சர்மாவின் மன நிலையை இளகச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
"கமலியோட விநயம், அடக்கம், பணிவு, இதையெல்லாம் பார்த்தால் அவ அத்தனை பெரிய பிரபுத்துவக் குடும்பத்துப் பெண்கிறதை எப்பேர்க் கொத்தவாளாலேயும் ஊகிக்கக் கூட முடியாது சுவாமி! அவ்வளவு நல்ல சுபாவம்...!"
சர்மா பட்டென்று ஆல்பத்தை மூடி வசந்தியிடம் நீட்டி விட்டு எழுந்து நின்றார். புறப்படத் தயாரான நிலையில் நின்று கொண்டு, "எனக்கு மனசு சரியில்லை, அப்புறமா இன்னொரு நாள் வரேன். மத்ததைப் பேசலாம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பத் தயாராகி விட்டார். அவரைச்