சமாதானப்படுத்தி மறுபடியும் உட்கார வைப்பதற்குள் வசந்திக்கும் அவள் தந்தைக்கும் போதும் போதுமென்றாகி விட்டது.
விசுவேசுவர சர்மாவுக்கு மனத்தில் அழுத்தமான சந்தேகமே விழுந்து விட்டது. வேணு மாமாவும், அவர் பெண் வசந்தியுமே இந்தக் காதல் பிரச்சனையில் ரவியின் நிலையைத் தீவிரமாக ஆதரிக்கிறார்களோ என்று எண்ணினார் சர்மா.
உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி அவர் நிதானப்படுகிற வரை ஒரு மாறுதலாக வேறு எதையாவது பற்றி அவரிடம் பேசலாம் என்று தோன்றியது வேணு மாமாவுக்கு!
"ஆத்தங்கரை நத்தத்துத் தென்னந் தோப்பை யாருக்குக் குத்தகை பேசியிருக்கேள் சர்மா? இந்த வருஷம் தென்னை, மா, பலா எல்லாமே நல்ல காய்ப்பாமே..."
"குத்தகை எதுவுமே சரியாத் தெகையலெ, நல்ல குத்தகை அமையலேன்னா ஒரு காவல் ஏற்பாடு பண்ணிட்டு நானே சொந்தமாக் கவனிக்கலாம்னு தீர்மானம்."
"மடத்து நிலமெல்லாம் என்ன செய்யப் போறேள்...?"
"அதெல்லாம் எப்படியும் நல்ல மனுஷாளாப் பார்த்துக் குத்தகைக்கு அடைச்சுத்தான் ஆகணும். நெல விஷயம் வேறே. தோப்புத் துரவு விஷயம் வேறே. நிலத்துக்கு எப்படியும் நல்ல குத்தகை அமையும்."
"தெக்குத் தெரு சங்கரசுப்பன் இரண்டு பெண்ணுக்கும் கல்யாணம் பண்றத்துக்காக நெலம், தோப்புத் துரவு எல்லாத்தையும் கிரயம் பேசிட்டானாமே; தெரியுமா?"
"அப்படித்தான் யாரோ பேசிண்டா... எங்காதிலேயும் விழுந்தது."
இந்த விதமாகச் சிறிது நேரம் ஊர் விவகாரம் பேசிய பின் மறுபடி பழைய பேச்சை மெதுவாக ஆரம்பித்தார் வேணு மாமா.
"ஆத்திரப்பட்டு ரவியை இங்கே வரவேண்டாம்னு எழுதிடாதீங்கோ...கொஞ்சம் பெருந்தன்மையா