பார்வதிக்கு. வசந்தி பார்வதியை விசாரித்தாள்:
"ஏண்டி...? அதுக்குள்ளேயே ஸ்கூல் விட்டாச்சா...? இன்னும் மணியாகலியே?"
"நாலஞ்சு டீச்சர் லீவு மாமி! அதுனாலே லாஸ்ட் பீரியட் கிடையாதுன்னு விட்டுட்டது."
பார்வதியைத் தழுவினாற்போல உள்ளே அழைத்துச் சென்றாள் வசந்தி.
"இவ இந்த வருஷம் ஸ்கூல் ஃபைனல் முடிக்கிறா. குமார் பி.ஏ முதல் வருஷம் படிக்கிறான். காலேஜூக்காக அவன் தினசரி இருபது மைல் இரயில் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கு. நாள் தவறாமே இருட்டி ஏழு ஏழரை மணிக்குத்தான் வீடு திரும்பறான். பொண்ணை நான் காலேஜ் படிப்புக்கு அனுப்பப் போறதில்லே. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் கல்யாணத்துக்கு வரன் பார்க்கறதாத் தான் உத்தேசம்..."
"உள்ளூர்லியே காலேஜ் இருந்தாப் படிக்க வைக்கலாம். பெண் குழந்தைகள் - வெளியூர் போய் வர்றது சாத்தியமில்லே. பக்கத்து டவுன்லே இருக்கிற ஒரே காலேஜூம் கோ-எஜுகேஷன் காலேஜ்... ஆணும் - பொண்ணும் சேர்ந்து படிக்கிற காலேஜ். உமக்குப் பிடிக்காது."
"எனக்குப் பிடிக்கும் பிடிக்காதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். வித்தைங்கிறது ஞானத்தையும் விநயத்தையும் வளர்க்கணும். இன்னிக்கு அது பெரும்பாலும் அஞ்ஞானத்தையும், முரட்டுத்தனத்தையும் தான் வளர்க்கிறது. ஒவ்வொரு பையனும் தன்னைச் சினிமாவிலே வர்ற ஹீரோவா நினைச்சிண்டு முக்காவாசி நாழி ஏதோ ஒரு தினுசான சொப்பனத்துலே வாழறான். ஒவ்வொரு சின்ன வயதுப் பெண்ணும் தன்னைச் சினிமா ஹீரோயினா நினைச்சிண்டு சீரழியறா. நிஜமா? இல்லையா...? என்ன நான் சொல்றது...?"
"நீர் சொல்றதெல்லாம் இன்னிக்கு எடுபடாது சர்மா! ஒரே வார்த்தையிலே 'சுத்த மடிசஞ்'சீன்னு உம்மை ஒதுக்கிடுவா!"
"அது தான் இல்லை! நீங்க தான் அப்பிடிச் சொல்றேள்! நம்மூர்ப் பகுத்தறிவுப் படிப்பகம் இறை முடிமணி இருக்கானே அவனும் இந்த விஷயத்திலே என்னோட ஒத்த அபிப்பிராயம் உள்ளவனா இருக்கான். எதிர்காலத்தை மறந்த - உழைப்பாற்றலை இழந்த - வெறும் போலி