மகாபாதகத்தைப் பண்ணிட்ட மாதிரியும் அதுனாலே உம்ம குடும்பமே முழுகிடறாப்பிலேயும் பேசறதை முதல்லே விட்டுடும். இது இருபதாம் நூற்றாண்டுங்கறதை ஞாபகப்படுத்திக்கணும் நீர். இந்த நூற்றாண்டிலே இரயில் பிரயாணம், விமானப் பிரயாணம், தேர்தல், ஜனநாயகம், சோஷலிஸம் இதெல்லாம் போலக் காதலிப்பதும் சகஜமான விஷயம்."
"இந்தச் சங்கரமங்கலம் மாதிரியும், பூமிநாதபுரம் மாதிரியும் ரெண்டுங்கெட்டான் கிராமங்கள்ளே அது இன்னும் சகஜமான விஷயமாகல. விசேஷமா என் குடும்ப பாரம்பரியத்துக்கு ஒட்டாதது அது. அதனாலே தான் படிப்பைப் பாதியிலே நிறுத்தினாலும் பரவாயில்லேன்னு இந்தப் பாருவுக்கு ஒரு நல்ல இடமாகப் பார்த்து உடனே கல்யாணத்தைப் பண்ணிட்டா என்னன்னு தோணறது... அவன் இங்கே அந்தப் பிரெஞ்சுக்காரியோட வந்து கூத்தடிக்கிறதுக்குள்ளே இந்தப் பொண்ணு கல்யாணத்தைப் பண்ணி இவளைப் புருஷனோட புக்காத்துக்கு அனுப்பிச்சுட்டா ரொம்பச் சிரேஷ்டமாயிருக்கும். இந்த நிமிஷத்திலே இது தான் என் மனசிலே படறது."
"இதென்ன பொம்மைக் கல்யாணமா...?அல்லது மரப்பாச்சிக் கல்யாணமா...? பச்சைக் குழந்தையைப் போய்ப் படிப்பையும் கெடுத்துட்டு மணையிலே உட்காத்தித் தாலி கட்டச் சொல்றேங்கறீரே...? உமக்கு ஈவு இரக்கமே கிடையாதா ஓய்; கேக்கறேன்?"
"பால்ய விவாகம் ஒண்ணும் விநோதமில்லியே...? எனக்கும் அப்படித்தான் கல்யாணம் ஆச்சு. உமக்கும் அப்படித்தான் ஆச்சு..."
"அதனாலே இவளுக்கும் அப்படித்தான் ஆகணும்னு நிர்ப்பந்தமா அல்லது தலையெழுத்தா...?"
"என்னோட பிள்ளையாண்டான் இப்போ பண்ணியிருக்கிற கூத்தைப் பார்த்து அப்படித் தோணித்துன்னு தானே சொன்னேன்."
"அதெல்லாம் ஒண்ணும் தோண வேண்டாம். மேலே ஆகவேண்டிய காரியத்தைக் கவனியும். முதல்லே சுமூகமா அவனுக்கு ஒரு பதில் எழுதும், அப்புறம் அவா ரெண்டு பேரும் இங்கே வந்தால் தங்கறத்துக்குத் தகுந்த மாதிரி நீர் சில ஏற்பாடுகளைப் பண்ணணும்..."
"என்ன பண்ணணும்கறேள்...?"