கவனிக்கிறார்கள் என்பதற்காகப் பாடியது போல் தெரியவில்லை. பித்தளைப் பந்துகளில் ஒன்றுகூடக் கீழே விழுந்து விடாமல் விரைந்து மாற்றி மாற்றிப் பிடிக்கும் சிரமமான செயலில் இருந்து வழுக்கி விடவோ தவறிவிடவோ செய்யாமல், தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வதற்காகத் தன்னுள் இலயித்துப் பாடிய மாதிரியே இருந்தது. பாடலை ரெக்கார்டரிலும் பாடிய மாமியின் தோற்றத்தைக் காமிராவிலும் பிடித்துப் பதிவு செய்து கொண்டாள் கமலி. உள்ளே அதிக வெளிச்சமில்லாத அந்தக் கர்நாடகமான பழைய கிராமாந்தரத்து வீட்டின் சமையல் கட்டு முகப்பில் புகைப்படம் எடுக்க ஃபிளாஷ் தேவைப்பட்டது. கழங்காடல், பல்லாங்குழி, சோழி விளையாட்டு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவற்றுக்குரிய கிராமீயப் பாடல்களுடன் ஆடிக் காட்டினாள் காமாட்சியம்மாள். சில பாடல்களில் அந்தப் பிரதேசத்துக் கொச்சை மொழி நிரம்பி வழிந்தது.
"இந்த விளையாட்டுக்களோட சேர்த்துப் பாடறதுக்குன்னே நிறையப் பாடல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கு. கமலீ! அம்மானை ஆடற்ப்போ மாமி பாடிய பாட்டு பக்கத்திலே இருக்கிற பிரம்மபுரம் சிவன் கோவில் அம்மன் 'பவளநாயகி' மேலே யாரோ பாடினது. இந்த விளையாட்டோட இப்படிப் பாட்டெல்லாம் சேர்ந்த காரணம் தான் எனக்குப் புரியலே! சில பாட்டு கொச்சையாகவும், தப்பாகவும் கூட இருக்கு!"
"அசாதாரணமான திறமையைக் காட்டி முழு கான்ஸெண்ட்ரேஷனோட செய்யற விளையாட்டுக்கு 'ஸெல்ஃப் சப்போர்டிங்' ஆகவும் உற்சாகமாகவும் சோர்வு தெரியாமல் இருக்கிறதற்காகவும் தான் இப்படிப் பட்ட பாடல்கள் எல்லாம் உண்டாகியிருக்கணும். காட்டு வழியிலே தனியா நடந்து போகிறவன் தனக்கு ஒரு துணையும் தைரியமும் உல்லாசமும் உண்டாக்கிக் கொள்ளத் தானே சீட்டியடித்துப் பாடி அந்தப் பாட்டையே - தனக்கு வழித் துணையாக்கிக் கொள்கிற மாதிரிதான் இதுவும். 'ஃபோக்லோர்' ஆராய்ச்சியிலே இதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் வசந்தீ! நாட்டுப் பாடல்கள், கிராமியப் பாடல்களில் வாய்மொழி அடையாளம்கிற 'ஓரல் டிரடிக்ஷன்' தான் ரொம்ப ரொம்ப முக்கியம். கொச்சைகளையும் தப்புகளையும் அவற்றிலிருந்து நீக்கி விட்டால் அப்புறம் அவை அசல் கிராமீயப் பாடல்களாக இருக்கவே முடியாது!'
"இங்கே சில பேர் இந்த மாதிரிப் பாடல்களைக் கூட இலக்கண சுத்தமாகத் திருத்தி விடுவதை ஒரு வழக்கமாக்கியிருக்காங்க..."