வீர : அப்படி எவன் சொன்னவன்?
ஜனங்கள் : இந்த நற்குணமுள்ள மனிதனே சொல்லுகிறான். நீதான் கொன்றிருப்பாய்.
வீர : ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவன் என்னுடைய அடிமை! இவனுக்குத் திருட்டுக்கை அதிகம்! அதற்காக இவனைத் தண்டித்து ஒரு இடத்தில் தனியாக பூட்டி வைத்திருந்தேன். இந்த குரோதத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லுகிறான். அடே! பத்மநாபா! உண்மையைச் சொல்; நான் சொல்வது சரிதானே (தன் விரலிலிருந்த ஒரு மோதிரத்தை அவருக்குத் தெரியாமல் கழற்றிக் கொண்டு அவனுக்கு அருகில் போய் அதை அவன் கையில் இரகசியமாகக் கொடுத்து) இதை நீ எடுத்துக் கொள். முன் சொன்னதை மாற்றிச் சொல்லி விடு.
பத்ம : (மோதிரத்தை ஜனங்களுக்குக் காட்டி) இதோ பாருங்கள். இந்த மோதிரத்தை இலஞ்சம் கொடுத்துப் பேசாமல் இருக்கச் சொல்லுகிறார்.
வீர : (மோதிரத்தை பிடுங்கி) பார்த்தீர்களா! பார்த்தீர்களா! இதுதான் திருட்டுப் போன மோதிரம்! இதற்காகத்தான் இவனைத் தண்டித்தேன். இவன் முதுகைப் பாருங்கள்; இவனுக்கு எத்தனை அடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
1 சண் : சரிதாங்க! இவன் பொய்தான் சொல்றான்
பத்ம : ஆகா! அடிமையாய் இருப்பதன் இகழ்வு இதுதான்! நான் நிஜத்தைச் சொன்ன போதிலும் ஒருவரும் நம்ப மாட் டேன் என்கிறார்கள். (மாதவராயர் காலின் விழுந்து ) பிராம்மணோத்தமரே! என்னாலான பாடுபட்டேன். ஒன்றும் பலிக்கவில்லை. குற்றமற்ற உங்களைக் கொண்டு போகிறார்களே! என்ன செய்வேன்? உங்களை அந்த ஈசுவரனே காப்பாற்ற வேண்டும்.
மாத : நல்ல மனிதனுக்கு அநியாயமாய் ஆபத்து வந்து விட் டதே என்று மனதிரக்கம் கொண்டு உன்னாலான உதவியைச் செய்ய முயன்றாய். என் தலைவிதி குறுக்கே நின்று வழி மறிக்கிறது. நீ அதற்கென்செய்வாய்? கவலைப்படாதே! எழுந்திரப்பா! நீ மகா யோக்கியன்!