தோளையும், வலைப் பனியனுக்குள் திமிறிக் கொண்டிருந்த மார்பையும் பார்த்து, தலையைத் தாழ்த்திக் கொண்டான். களைப்பில் தன் தலையை அவன் மார்பு மீதும் சாத்திக் கொண்டான். ஒரு சில நிமிடங்கள், அந்த லாரி விட்டு விட்டு வரும் மரம் செடி கொடிகள் போல், அவன் மன உளைச்சல்களும், நின்று விட்டது போன்ற ஏகாந்த உணர்வு. திடீரென்று பழைய உளைச்சல்களும் பஸ்ஸில் பட்ட பாடும் அவனுக்குள் புதிய சுமையாக கனத்தன. அந்த மனித நெருக்கடிக்குள் அங்குமிங்குமாய் நெளிந்தான். ஒவ்வொரு உராய்விலும் ஒருவிதமான கூச்சம். இனிமேலும் இருக்க முடியாத பதற்றம். அவன் அழுதழுது கத்தினான்.
“என்னை எறக்கிடுங்க... எறக்குறீங்களா... எழுந்து குதிக்கட்டுமா?”
டிரைவர், அவன் சொன்னதைக் காதில் போடாதது போல், வண்டியைப் போக வைத்த போது, சுயம்பு இருக்கையை விட்டு எழுந்தான். உடனே அவர் கோபமாக பிரேக்கை அழுத்திக் கொண்டு ”ஒப்பன வீட்டு வண்டி மாதிரி ஏறுறது... அப்புறம் ஒம்மா வீட்டு வண்டி மாதிரி இறங்குறதா? இந்தாடா மோகன்... இந்த சனியன்கிட்ட வாங்குன ரூபாய மூணு தடவை தலையை சுத்தி கொடுத்திடு... இந்தா ரூபா. சரியான சாவுக் கிராக்கி...” என்றார். அந்த மெட்ராஸ் டிரைவரிடம் ரூபாயை வாங்கிய மதுரை கிளீனர் மோகன், ரூபாயும் கையுமாய் மூன்று தடவை, தனது தலையைச் சுற்றி உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு, சுயம்புவின் கையை சும்மாத் தொட்டுவிட்டு சந்தடிச் சாக்கில் அந்தப் பணத்தை பைக்குள் வைத்துக் கொண்டான். பிறகு, உள்ளங்கையை விரித்து சுயம்புவின் கையைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே குதிக்க விட்டான்.
சுயம்பு, போகிற லாரியைப் பொருட்படுத்தாமல் கூனிக் குறுகி நின்றான். ஓடுகிற லாரியிலிருந்து ஒன்று டமாரென்று கீழே விழுந்தது. அப்படிப் பிணமாய் விழுந்த சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான். வழக்கம் போல் அதைப் பின்புறமாய்க் கொண்டு வந்தான். பிறகு அதைத் தொப்பென்று போட்டுவிட்டு, ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். வாயிலும் தலையிலும் மாறி மாறி கைகளால் அடித்துக் கொண்டான். அடித்த களைப்பிலும், அடிபட்ட களைப்பிலும், சிறிது நிதானப்பட்டான். மீண்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு, நான்கு திக்கையும் பதினாறு கோணங்களாகப் பார்த்தான். எங்கேயாவது ஓடிப் போகலாமா? எப்படிப் போக முடியும்? பஸ்ஸில் கிடைத்தது மாதிரித்தான் உதை கிடைக்கும். லாரியிலிருந்து பெட்டியைத் தூக்கிப் போட்டது போலத்தான் தூக்கிப் போடுவார்கள். ‘அய்யோ... ஏன் தான்