கருவேலங்காட்டைத் தாண்டி, ஆதி திராவிட மக்களின் தொகுப்பு வீடுகளின் பக்கம் வந்தான். அந்த வீடுகளை ஒரு குடும்பத்தில் பிறந்த மகன்களும் ‘மகள்களும்’ ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டதால், அவை தேவைப்பட்ட, அதே இனமக்கள் கைவேறு கால் வேறாகத் தூங்கிக் கொண்டிருந்த புளியமர அடிவாரத்தின் வழியாக நடந்தான். அங்கிருந்து, மரமில்லாத ஒரு மொட்டை மலைக்கும், மழையில்லா அந்த ஊருக்குமிடையே ‘ஓடும்’ மணல்வாரி ஓடை வழியாக, கால்களை நடத்தி கிழக்குப் பக்கம் சுற்றி, அங்கிருந்து மேற்குப் பக்கம் போனான். தெரு நாய்களின் குலைப்பையும் பொருட்படுத்தாமல் வேப்பமரம் கடை விரிக்க, ‘வைக்கோல் படப்பு’ வெள்ளைக் குகையாய்த் தோன்ற, தனது வீட்டருகே வந்தான். அந்த வீடு பண்ணைச் சேவகம் செய்யும் ஓலை வீடாகவும் இல்லை; அல்லது பண்ணையார்த்தனத்தைக் காட்டும் பளிங்குக்கல் வீடாகவும் இல்லை. சுயசார்பைக் காட்டும் சுமாரான வீடு.
சுயம்பு, வீட்டுக்குள் நுழைய மனமில்லாமல் கூட்டுக்குள் நுழைய விரும்பாத கோழிக் குஞ்சு போல், அந்த வேப்ப மரத்தில் சாய்ந்து கிடந்தான். அப்போது எதிரித்தனமாய்க் குலைத்தபடியே அந்த வீட்டிலிருந்து ஒரு ‘குட்டி ராஜபாளையம்’ சீறி வந்தது. ஆறு மாதக்குட்டி அவனைப் பார்த்ததும் செல்லமாய்ச் சிணுங்கியது. வாலை பின் கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு தூசி படிந்த அவன் கால்களையும், கரங்களையும், நாக்கால் ஒட்டடையடித்தது. பிறகு அவன் வருகையைச் சொல்வதற்காக, அவன் வீட்டை நோக்கி ஓடப் போனது. சுயம்பு கீழே குனிந்து, அந்தக் குட்டியை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அது சத்தம் எழுப்பாமல் இருக்க அதன் இரண்டு தாடைகளையும் மூடி, அதன் முனையைப் பிடித்துக் கொண்டான்.
அந்த நாய்க்குட்டியின் சீற்றக் குலைப்பாலோ அல்லது செல்ல முனங்கலாலோ, ஏற்கெனவே இரவு முழுவதும் தூங்காமலும், விழித்திருக்காமலும், பாயில் சும்மா புரண்ட மரகதம், வெளியே வந்தாள். ஏதோ ஒரு புரியாத சுமையைப் பிறருக்குத் தெரியாமல் சுமப்பது போல் உச்சி முடி சிலிர்த்து நிற்க நின்றாள். சுயம்புவிற்கு, நான்கு ஆண்டுகள் மூத்தவள். ஒரு வட்டத்திற்குள் அடங்கும் முகம். வெள்ளொளி வீசும் கண்கள். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற தோரணை. அழுத்தம் திருத்தமான உடம்பு, தட்டையாக இல்லாமல், உருண்டு திரண்ட மார்பகம், பழுத்த - அதேசமயம், காயப் போடாத மிளகாய் நிறம்.
மரகதத்திற்கும், ஒரு பெரிய பிரச்னை. அவளை, அத்தை மகனுக்குக் கொடுப்பதா அல்லது தாய்