பிறந்தேனோ? எப்படித்தான் இப்படி ஆனேனோ?’
திடீரென்று அவனுள் ஒரு அசுர வேகம். அவன் நிலைக்கு அவன் காரணமில்லை என்ற கண்டுபிடிப்பு. அதற்குக் காரணமானவர்களைக் காண வேண்டுமென்று ஆவேசம். அக்காவின் கழுத்தைக் கட்டி ஆறுதல் பட வேண்டுமென்ற ஆசை. எந்த வீட்டில் பிறந்தானோ, அந்த வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டுமென்ற வைராக்கியம்.
சுயம்பு, மூர்க்கத்தனமாக நடந்தான். அந்த நடையில் பெட்டிச் சுமை பெரிதாகத் தெரியவில்லை. அந்தத் தார்ச் சாலையில் நடுப்பக்கமாகவே நடந்தான். ஓடினான். ஓடி ஓடி நடந்தான். நேரம் நீண்டாலும், அவன் உட்காரவில்லை. கால்களை நத்தை வேகத்திலாவது நகர்த்திக் கொண்டிருந்தான். அவன் வாய்மூச்சு காற்றோடு காற்றாய் கலந்தது. அவன், அவ்வப்போது போட்ட கூச்சல் நரிகளின் ஊளையோடு ஒரு ஊளையாகியது. செருப்பைத் தேய வைத்து, அதன் மேல் கால் தேய நடந்தான். காலதூர கனபரிமாணங்களைக் கடந்தவன் போல், நடப்பதற்காகவே நடப்பது போல், நடந்தான். ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்பது போல் துஷ்ட மிருகங்கள் கூட அவனைப் பார்த்துப் பதுங்கின. துஷ்டத்தனமான லாரிகள் கூட அவன் அருகே பரம சாதுவாகப் போயின. ஒரு காரில் போன இன்ஸ்பெக்டர் ஒருவர் கூட, ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாதவர் போல், அவனைப் பார்த்து, திடுக்கிட்டு, மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘கண்டுக்காமலே’ போனார். அவன், கொள்ளையடித்தவன் போலவும், கொள்ளை அடிக்கப்பட்டவன் போலும், நடந்தான். சவுக்குக் காடுகளைத் தாண்டி, மொட்டை வெளிகளைக் கடந்து, மலை ரோட்டில் சரிந்து, கால்கள் இருப்பதே தெரியாமல், வலி என்ற வாதையில்லாமல், மூச்சு விடுவதே தெரியாமல், மூர்ச்சையாகாமலே நடந்தான். சித்த புருஷன் போலவும் செத்த புருஷன் போலவும் முப்பது கிலோ மீட்டருக்கு மேலே நடந்து விட்டான். இந்த அசுர நடைக்கு சாட்சியாக கால்கள் வீங்கிப் போயிருந்தன. கண்கள் அபாயக் கலரில் எரிந்து கொண்டிருந்தன. பெட்டி உரசி, உரசி இடுப்பின் இரு பக்கம் ரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.
அந்தத் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குப் பிரியும் கப்பிச்சாலை வழியாக ஊர் முனைக்கு வந்ததும், அவனுக்கு உதறல் வந்தது. அந்தப் பக்கமுள்ள சமூகக்காடு எதுவுமே இல்லாத சூன்யக் கருப்பாகத் தெரிந்தது. சூரிய ஒளியைக் கூட பிடித்துப் பிடித்து உண்டு விட்டு, இருட்டு இருட்டாய் ஏப்பமிடும் ஆயிரக்கணக்கான கருவேல மரங்களின் அடிவாரங்களில் பல இடங்களில், ‘காய்த்தல்’ தொழில் மட்டும் நடந்து கொண்டிருந்தது. அவன், அந்தக்