(Reading time: 13 - 25 minutes)

இந்தா! எனக்கு போதும், மிச்சமுள்ள பாலை நீ குடி!" என பாலகன் குவளையை நீட்டியபோது, இதயமே வெடித்துவிடும் போல, பிரமீளா ஓவென கதறினாள்.

 அவளை சமாதானப்படுத்தவோ, அவளுக்கு ஆறுதல் கூறவோ, உதவி செய்யவோ, யாருமில்லை!

 அவள் வந்தவழி அப்படி!

 பிரமீளாவின் கணவன், நாகேஷ் பணக்காரனாயிருந்து, ஏழையானவன்!

 பிரமீளா பிறந்து வளர்ந்ததே, மத்தியதர வர்க்கத்தின் கீழ்தட்டு குடும்பத்தில்தான்! வாடகைவீடு தான்! அன்னாடங் காய்ச்சிதான்! ஒருவேளை உண்டு வளர்ந்தவள்தான்!

 ஆனால், நாகேஷ் அப்படியல்ல!

 நான்கு ஏக்கர் நிலம், பங்களா, தவிர மூன்றுவீடுகள்!

கையில் ரொக்கமும் நூறு சவரனுக்கு நகைகளும் இருந்தன! எல்லாமே பரம்பரை சொத்து!

 நாகேஷுக்கு சிறுவயதிலிருந்தே படிப்பைவிட, நாடகம், நடிப்பு இவைகளிலே நாட்டம் அதிகம்!

 பக்கம் பக்கமாக, திரைக்கதை, வசனம் எழுதிக் குவிப்பான்! அவனுடைய நண்பர்கள் தாறுமாறாக அவனைப் புகழ்ந்து, அவனை கற்பனை உலகத்தில் தள்ளிவிட்டனர்.

 " டேய்! இப்பல்லாம், சரியான கதை கிடைக்காம, நூற்றுக்கு மூன்று திரைப்படங்கள் தான் வெற்றி அடைகின்றன, மற்றவை அனைத்தும் எவரும் பார்க்காமலேயே கிடக்கின்றன. உன்னைப்போல, பிரமாதமா நடிக்கவும் கதை எழுதறவனும் கிடைக்கமாட்டானான்னு ஏங்கறாங்கடா, தயாரிப்பாளருங்க!"

 உசுப்பேற்றிவிட்டு, அவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி நல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் நன்கு செட்டிலாகி விட்டார்கள்.

 நாகேஷ் மட்டும், தான் எதிர்காலத்தில் மிக பிரபலமான முன்னணி நடிகனாகவும் சிறந்த கதாசிரியராகவும் விளங்கப்போகிற கனவுகளில் மிதந்து, படிப்பை கோட்டை விட்டான்.

 இருபத்துமூன்று வயதிலேயே, தந்தையுடனும் உடன்பிறந்தோரிடமும் விரோதம் வளர்த்துக்கொண்டு பரம்பரை சொத்தில், தனது பங்கை பிரித்துக் கொண்டு, நகரத்துக்கு குடிபெயர்ந்து விட்டான்.

 கழுகுபோல் காத்திருந்த திரைத்துறை முதலைகள், அவனை சூழ்ந்து துதி பாடி, வானளாவப் புகழ்ந்து, அவன் கையிலிருந்த பணத்தை முழுவதுமாக முதலீடு செய்யவைத்து, பற்றாக்குறைக்கு பல லட்சங்கள் கடனும் வாங்கவைத்து அவனை ஒரு சினிமா தயாரிக்க வைத்தன!

 துவக்கத்தில், எல்லாமே அவனுக்கு குதூகலமாகவும் நிறைவாகவும் இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.