”அப்பாகிட்ட உங்க பையன் வசமா மாட்டிக்கிட்டான் ஏன்னா அப்பாதான் தடுப்பூசி போடறவரு” என சொல்லிவிட வைதேகிக்கு ஒரு நொடி திக்கென்றது, அடுத்த நொடியே கலகலவென சிரிக்க மலரோ
”ஆன்ட்டி நீங்க வாங்க அப்பாவே உங்க பையனை நல்லா பார்த்துக்குவாரு, உங்களை நான் ஸ்கூல்ல ட்ராப் பண்றேன்”
”இருக்கட்டும்மா உனக்கெதுக்கு சிரமம்”
”இதுல சிரமப்பட என்ன இருக்கு வாங்க ஆன்ட்டி கிளம்பலாம்” என சொல்ல வைதேகியும் மலரின் ஸ்கூட்டியில் ஏறிக் கொள்ள மலரும் அவரை அழைத்துக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தாள்.
மாலை நேரம் வீடு திரும்பிய மலரோ வண்டியை வீட்டிற்குள் பத்திரமாக விட்டு பக்கத்து வீட்டைப் பார்த்தாள், சரவணனது வீடு அமைதியாக இருக்கவும் சற்று குழம்பினாள்
”என்ன நடந்திருக்கும் ஒருவேளை ஊசி போடாம ஓடியிருப்பானோ இருக்கலாம்” என நினைத்தபடியே வீட்டிற்குள் சென்றாள் உள்ளே அவளின் தந்தை ரவியோ தனது மனைவியிடம் ஏதோ சொல்லிவிட்டு கலகலவென சிரித்துக் கொண்டிருக்க
”என்னப்பா ஒரே சிரிப்பா இருக்கு, என்ன விசயம் நானும் தெரிஞ்சிக்கலாமா” என கேட்டபடி வர ரவியோ
”வாம்மா வா வா என்ன இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க” என அழைக்க
”இன்னிக்கு பெரிசா பேஷன்ட்ஸ் யாரும் வரலைப்பா அதான் ஆமா என்ன சரவணனோட போனீங்களே என்னாச்சிப்பா அவனுக்கு ஊசி போட்டீங்களா இல்லையா”
”அதை ஏன் கேட்கற இவ்ளோ நேரம் அங்க நடந்த கதையை சொல்லி நானும் உங்கம்மாவும் சிரிப்பா சிரிச்சிக்கிட்டு இருந்தோம்”