”என்னப்பா சொல்றீங்க அப்படி என்ன நடந்துச்சி”
”என்ன நடந்துச்சா என்னத்த சொல்ல, என்னை ஒரு இடத்தில இறக்கி விட சொன்னேன் சரவணனும் இறக்கிவிட்டான், அப்புறம் எனக்கு கொஞ்சம் உதவி செய்றியான்னு கேட்டேன் அவனும் சரின்னு சொன்னான் அவ்ளோதான், அவனை கையோட கூட்டிட்டுப் போய் வேலையில இறக்கிவிட்டேன், பாவம் பயந்துட்டான் எனக்கு ஊசி வேணாம்னு சொன்னான், நான் உனக்கு போடலைன்னு பொய் சொல்லிவிட்டு அவனுக்கு சின்ன சின்ன வேலைகளை தந்தேன், அவனோ பாவம் அங்க மத்தவங்களுக்கு நான் ஊசி போடறதையே பயத்தோட பார்த்தான், சாயங்காலம் வரைக்கும் என்கூடவே இருந்தான் தெரியுமா அவனுக்காகவே ஒரு ஊசி தனியா எடுத்து வைச்சிருந்தேன் அவனும் ஓஞ்சிப் போய் மக்கள் யாரும் இல்லை கிளம்பலாமான்னு கேட்டான், நானும் சரின்னு சொல்லி அங்க இருந்த எல்லாரையும் கூப்பிட்டு அவனை கெட்டியா பிடிக்கச் சொன்னேன் அவங்களுக்கும் ஒண்ணுமே புரியலை ஆனா, சரவணனுக்கு நான் ஏன் அப்படி சொன்னேன்னு புரிஞ்சிடுச்சி எடுத்தான் பாரு ஒரு ஓட்டம், அந்த இடத்தையே சுத்தி சுத்தி வந்தான், எங்க ஆளுங்க விடலையே துரத்தி பிடிச்சி கொண்டு வந்து நிப்பாட்ட நானும் அவனுக்கு தடுப்பூசி போட்டு விட்டேன் வலியில துடிச்சான்”
”அப்பா அது ஒண்ணும் பெரிசா வலிக்காதே”
”வலிக்காதுதான் இவனுக்கு என்னவோ கடப்பாறையை இறக்கிட்ட மாதிரி அலறிட்டான் அப்புறம் அவனை சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வந்து வீட்ல விட்டேன், அப்புறம் பார்த்தா ஊசி போட்ட இடத்தில கொஞ்சம் வீக்கமா இருந்தது, அவங்க அம்மா வந்தாங்க அவங்ககிட்ட சொல்லி ஒத்தடம் வைக்கச் சொல்லிட்டு வந்தேன், நடந்த கதையை உன் அம்மாகிட்ட சொன்னேன் நீ வந்த“
”ஓ அப்ப அவனுக்கு ஊசி போட்டாச்சா சூப்பர் இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்“
”வேணாம்மா பாவம் அவனை போய் ஓட்டாத”
”இருங்கப்பா வரேன்” என சொல்லி சிரித்தபடியே பக்கத்து வீட்டிற்குச் சென்றாள் மலர்