சிறுகதை - ஒட்டுப்புல் - ரெ.கார்த்திகேசு
அந்தப் பள்ளிக் கூடத்தில் வேறு என்ன இல்லாவிட்டாலும் அந்தக் காலை வேளையில் கலகலவென்று சத்தம் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கே உரிய கதம்பமான ஒலிகள். கான்வாஸ் சப்பாத்துகள் தரையில் எழுப்பும் தட் தட் ஓசை; நாற்காலிகள் இழுக்கப்படும் ஒலிகள்; கரும்பலகையில் சாக்பீஸ் கிறீச்சிடும் ஒலி; "வணக்கம் டீச்சர்" என்ற ஒரு கோரஸ்; "யார் கரும்பலகையில இப்படி கிறுக்கினது?" என்ற ஓர் ஆசிரியரின் கர்ஜனை.
தலைமை ஆசிரியர் நடேசனுக்குப் பக்கமாக அன்பரசன் ஆறாம் வகுப்பு அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது இந்த ஒலிகள் எல்லாம் வந்து அவன் காதைத் தாக்கின. அவனுக்கு எல்லாம் புதியவையாக இருந்தன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று இப்போதுதான் வெளியேறியுள்ள இன்னும் பளபளப்பு மங்காத புதிய ஆசிரியன். புதிய அனுபவங்களை மேற்கொள்ளப் போகும் மனப் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. அங்குள்ள பழுத்த அனுபவமுள்ள ஆசிரியர்களையும், "யார் புதிய ஆள்?" என்று முறைத்துப் பார்க்கும் மாணவர்களையும் பார்த்த போது கொஞ்சம் பயமாயும் இருந்தது.
அந்தப் பினாங்குத் தமிழ்ப்பள்ளிக்கு காலையில் வந்து சேர்ந்து கட்டடத்தைப் பார்த்த போதே "இவ்வளவுதானா!" என மனம் சோர்ந்தது. ஆனால் தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியன் இதை விட அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது எனத் தன்னைத் தேற்றிக் கொண்டான்.
தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். "நல்ல நேரத்துக்கு வந்திங்க! ஆறாம் வகுப்புக்கு வகுப்பாசிரியையாக இருந்தவங்க போன வாரத்தோட நின்னுட்டாங்க! ஆளில்லாம தவிக்கிறோம் இங்க!" என்றார்.
"ஏன் சார் நின்னுட்டாங்க?" என்று கேட்டான் அன்பரசன்.
"அவங்க கணவர் இன்சூரன்ஸ் ஏஜன்ட். இவங்களயும் இழுத்துப் பகுதி நேர ஏஜன்டா வச்சிருந்தாரு! அதில வர்ர கமிஷன் வருமானம் ஆசிரியர் சம்பளத்த விட ரெண்டு மடங்கு அதிகமா இருக்காம். அப்புறம் எதுக்கு இந்த சள்ளை பிடிச்ச வேலைன்னு விட்டுட்டாங்க!" என்றார்.
இது அடிக்கடி கேட்ட கதைதான். ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த