இருவருமாக வகுப்புக்குள் நுழைந்ததும் மாணவ மாணவிகள் தடதடவென்று எழுந்து "வணக்கம் சார்" என்றார்கள்.
"வணக்கம். உட்காருங்கள். மாணவ மாணவிகளே, இவர் நம்முடைய பள்ளிக்குப் புதுசா வந்திருக்கிற ஆசிரியர். பேரு அன்பரசன். இவர்தான் உங்க வகுப்புக்கு வகுப்பாசிரியர். சரியா?"
"சரி சார்" என்று கோரஸ் எழுந்தது.
"ஆசிரியர்கிட்ட பணிவா நடந்து நல்ல பேர் எடுக்கணும், என்ன?"
"சரி சார்"
அன்பரசனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வெளியே போனார் தலைமை ஆசிரியர்.
அன்பரசன் வகுப்புப் பதிவேட்டைத் திறந்தான். அந்த வகுப்பில் பதினெட்டு பேர்கள் இருந்தார்கள். கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டமிட்டான். மையூறிய அடையாளங்களும் கத்தியால் கீறல் போட்ட காயங்களும் உடைய மர பெஞ்சுகளின் பின்னால் கருத்த, பழுத்த, சிலமட்டுமே சிவத்த முகங்கள் தெரிந்தன.
"அம்பலவாணன்"
"உள்ளேன் சார்!" குட்டையாய் கருப்பாய் இருந்தான்.
"ஆனந்தி"
"உள்ளேன் சார்!" கீச்சுக் குரலில், நெற்றியில் பெரிதாய் திருநீறு பூசி மாநிறத்தில்...
"கருணாநிதி"
"உள்ளேன் சார்!" பெண் குரலாக இருந்தது.