திருத்தி சிரித்துப் பேசி உதவினான்.
மறுநாள் பிற்பகல் காயத்ரி வீட்டுக்குப் போனான். அவள் அப்பா ஒரு தொழிற்சாலையில் டெக்னீஷியன். ஷிப்டு வேலைக்காரர். நல்ல வேளையாக வீட்டில் இருந்தார்.
வீட்டில் வீடியோவில் ஏதோ தமிழ்ப்படம் ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்பரசனைக் கண்டதும் அரைமனதோடு சத்தத்தைக் குறைத்து அவனுடன் பேசத் தயாரானார் அவர்.
"நான் ஆறாம் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூஷன் ஆரம்பிச்சிருக்கங்க. இந்த வருஷம் யூபிஎஸ்ஆர் பரிட்சையில அதிகமான பிள்ளைகளை நல்ல முறையில பாஸ் பண்ண வைக்கணும். அதுக்கு இவங்களுக்கு டியூஷன் குடுத்தாதான் முடியும். காயத்ரி நல்லா படிக்குது. ட்யூஷனுக்கு வந்தா நல்லா பாஸ் பண்ணும்" என்றான்.
காயத்ரியின் அப்பா கொஞ்சம் யோசித்தார். "ஆமா பல இடங்கள்ள டியூஷன் குடுக்கிறாங்க. தெரியும். ஆனா நாங்க பொம்பிள பிள்ளய தனியா வெளிய அனுப்பிறதில்ல! அனுப்பினா தகராறாப் போகுது!" என்றார்.
"பள்ளிக்கூடப் பாடத்த மட்டும் நம்பியிருந்தா போதாது. என்கிட்ட நிறைய பயிற்சிப் புத்தகங்கள் இருக்கு. அத செய்யச் சொல்லித் திருத்திக் குடுத்தா முன்னேற்றம் இருக்கும்!"
"டியூஷன் எங்க நடக்குது?" என்று கேட்டார் அவர்.
"பள்ளிக்கூடத்திலேயே! சாயந்தரத்தில!" என்றான்.
"எத்தன பிள்ளைங்க வர்ராங்க?"
இன்னைக்கு ஏழு பேர் வந்தாங்க. மற்ற பிள்ளைகள வரச் சொல்லி வற்புறுத்திக்கிட்டு இருக்கேன்!"
"வேற யார் உங்களோட சொல்லிக் குடுக்கப் போறாங்க!"