(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - ஒட்டுப்புல் - ரெ.கார்த்திகேசு
சிறுகதை - ஒட்டுப்புல் - ரெ.கார்த்திகேசு

காயத்ரியும் அம்பலவாணனும் அசாதாரணமானப் புத்திசாலித் தனம் காட்டினார்கள். அம்பலவாணனின் கவனக் கூர்மை அன்பரசனையே வியப்பில் ஆழ்த்தியது. அவன் வகுப்புக்குத் தவறுவதில்லை. வந்தால் நேரத்தை வீணடிப்பதில்லை. கணக்கு செய்யப் புகுந்தால் சுற்றியுள்ள உலகம் அவனுக்கு மறந்து விடும். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் இல்லை என அவன் கண்டு கொள்வதில்லை. ஒரு பஞ்சு போல அறிவை விரைவாக உறிஞ்சிக் கொண்டான்.

   

காயத்ரி அப்படி இல்லை. பேச்சும் விளையாட்டுமாக இருந்தாள். அன்பரசனை அடிக்கடி பார்த்து கண் இமைகள் படபடத்தாள். அன்பரசன் அவள் கண்களை எவ்வளவுதான் தவிர்க்கப் பார்த்தாலும் அவள் கொக்கிகள் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தாள். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முயற்சி செய்தான். ஆனால் அது முடியவில்லை. அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் அது கனிந்து போயிற்று.

   

அவள் கணக்குகளைச் சரியாகப் போடுவதில்லை. அவள் மூளை முற்றாகப் பயன்படுத்தப் படுவதை ஏதோ கற்பனைகள் தடுத்துக் கொண்டிருந்தன. சேம இலைமீது தண்ணீர் ஊற்றியதைப் போல அவன் சொல்வதெல்லாம் அவளிடம் ஒட்டாமல் வழிந்து போய்க் கொண்டிருந்தது.

   

ஆனால் அடிக்கடி அவனிடம் வந்து சந்தேகம் கேட்டாள். சொல்லிக் கொடுத்ததையே திரும்பத் திரும்ப அவள் கேட்பது புரிந்தது. கேட்கும் போது பக்கத்தில் நின்று உரசினாள். அவனைப் பார்த்துச் சிரிப்பதும் தலை கவிழ்வதுமாக இருந்தாள்.

   

அன்று வகுப்பு முடியும் வேளையில் காயத்ரி அவன் கொடுத்திருந்த கணக்கை முடிக்காமல் இருந்தது சௌகரியமாகப் போனது. "காயத்ரி! இந்தக் கணக்க முடிச்சிட்டு வீட்டுக்குப் போ! மத்தவங்க போகலாம்!" என வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். மற்ற மாணவ மாணவிகள் போனதும் வகுப்பு "ஓ"வென்றானது.

   

காயத்திரி ஒரு சிருங்காரப் புன்னகையுடன் சந்தோஷமாக உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் போய்விட்ட பின் அன்பரசனுடன் தனியாக இருப்பதை அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல இருந்தது. கணக்குப் போடுவது போல பாவனை காட்டிக்கொண்டு மனத்தை எங்கோ ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.