முதுகிலிருந்து நகர்ந்து அடிக்கடி தோளில் சரிந்து கன்னத்தைத் தழுவி அவள் நோட்டுப் புத்தகத்தில் விழ தானியங்கியாக அவள் அதைப் பின்னால் வீசுவது அழகாக இருந்தது. பள்ளிக்கூடச் சீருடை இல்லாமல் வண்ணப் பாவாடை சட்டையில் இன்னும் அழகாக இருந்தாள். முகத்தின் பளிச்சென்ற நிறம்... கன்னத்தின் கதுப்புக்கள்... செதுக்கிய மூக்கு... அளவெடுத்துத் தீட்டிய அதரங்கள்... இத்தனை அழகு இந்தப் பெண்ணுக்கு எப்படி வந்தது?
இயற்கையாக அவள் மேல் ஆசை வந்தது. "சீ" என்று அடக்கினான். ஆனால் கண்கள் நகரவில்லை.
ஆழ்ந்த கவனத்தில் இருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். விழிகளை அம்புகள் என கவிஞர்கள் வருணித்தது அங்கு அவனுக்கு நிதர்சனமாக இருந்தது. அவன் விழிகளுக்குள் பாய்ந்து நெஞ்சில் சுளீரென்று குத்தி....
சில கணங்கள் ஆனாலும் யுகங்கள் போல் இருந்தன. கண்கள் மோதி கொக்கி போல் மாட்டிக்கொண்ட இந்த விபத்திலிருந்து யார் முதலில் பின்வாங்குவது என்ற போட்டியில் திகைத்திருந்து, அவன்தான் முதலில் தலை திருப்பினான். மீண்டும் அவள் தலை குனிந்த பின் ஒரு மெல்லிய புன்னகைக் கோடு அவள் இதழ்களில் தவழ்ந்திருந்தது. மீண்டும் ஒருமுறை மின்னல் போல் தலைநிமிர்ந்து அவனைப்பார்த்துக் குனிந்து விட்டாள். முதல் அம்பு பாய்ந்தது விபத்து என்றால் இந்த இரண்டாம் அம்பு குறிபார்த்து வீசியது போல் இருந்தது.
"செஞ்சிட்டேன் சார்!" என்றான் அம்பலவாணன். எழுந்து அவன் அருகில் போனான் அன்பரசன்.
*** *** ***
"டியூஷன் ரொம்ப வேகமா நடக்குது போல இருக்கே!" என்றார் சுப்ரமணியம் என்ற சக ஆசிரியர். அது ஓய்வு நேரம். அருகில் உள்ள காப்பிக்கடையிலிருந்து காப்பியும் பலகாரமும் வரவழைத்து பருகிக் கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள்.
"நடக்குது சார்! ஆனா பிள்ளைகள் கவனமா வர்ரதில்ல! ஒரு நாள் வந்தா நாலு நாள் வர்ரதில்ல!" என்றான் அன்பரசன்.