(Reading time: 9 - 18 minutes)

“ரதி!நீ உன் அப்பா,அம்மாவை பார்க்கிறதுக்கு நானோ,அம்மாவோ எப்பவும் தடை

சொல்ல மாட்டோம்.இதுதானே உன் கவலை”

 

“...........”

 

“அப்புறம்!உன்னோட தொழிலுக்கும்,அப்படித்தான்”

 

“உங்களுக்கு இது தெரியாது”

 

“என்னது”

 

“நான்..நான்...டென்த்தான்...படிச்சிருக்கேன்...நீங்க எம்காம் படிச்சிருக்கீங்க...”

 

“இவ்வளவுதானா ?லூசு!இனிமேல் படி!யார் வேண்டாங்கிறா”

 

“இல்லை..வேண்டாம்..நான் படிக்கலை”

 

“என்ன ரதி இது!தொண்ணூறு வயசுல கூட படிக்கறாங்க!நீ இருபத்தைஞ்சு வயசுல படிக்க மாட்டேன்கிறே”

 

“நரேன்!நான் சின்ன வயசுல இருந்து கலெக்டர் ஆகனும்னு கனவு கண்டேன்!இதே ஊருக்கு கலெக்டரா வரனும்னெல்லாம்...அந்த கனவு கனவாவே போயிடுச்சு...

எனக்கு...என் தொழில்ல முன்னேறினா போதும்...”

 

ரதிப்ரியா அழுகையை கட்டுப்படுத்த போராடுவது புரிந்து அவளைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டான் நரேந்திரன்.

 

“அப்பா...அப்பா..ஸ்மோக் பண்ணுவார்..ட்ரிங்க்ஸ்சும் பழகி...பணம்,சொத்தெல்லாம் ஏமாந்துட்டார்...என் பேர்ல... இருந்த இரண்டு வீடு மட்டும்தான் மிஞ்சுச்சு..நரேன்...

உடம்பும் கெட்டு...ரொம்ப...கஷ்டப்பட்டார்...அம்மா..அம்மா...பாவம்...கஷ்டப்பட்டு மீட்டு

வந்தாங்க...”

 

தன் வாழ்வின் சோக பக்கங்களை கண்ணீருக்கிடையே பகன்றாள் ரதிப்ரியா.

 

“வேண்டாம்மா!அழாதே”நரேந்திரன் அணைப்பில் அத்தனை நாள் தேக்கி வைத்திருந்த கண்ணீர் அணை உடைத்து பாய்ந்தது.

 

புகைபிடித்தல்,குடி இரண்டும் அமிலத்தை தன் கையால் தானே தன் மீது ஊற்றிக் கொள்வதாகும்!!வாய்,தொண்டை,நுரையீரல்,இரைப்பை,இருதயம்,சிறுநீரகம் என்று உடல் மொத்தத்தையும் அமிலம் அரித்தெடுக்கும்!!அழித்தொழிக்கும்!!புற்றுநோய்கள் வரிசை கட்டி நிற்கும்!!பக்கவாதம் பாய் விரித்து வைக்கும்!!

 

அன்பான பெற்றோர்,நேசம் கொண்ட மனைவி,ஆசைக் குழந்தைகள் என ஆண்டவன் பரிசளித்த அழகான வாழ்க்கையை அற்பமான புகையில் கழித்து,மதுவில் லயித்து,

வலியில் துடித்து காலனை அழைத்து கெஞ்சத்தான் வேண்டுமா??நிலை தாழ்ந்து,சிரம் தாழ்ந்து வாழ்வதை மனம்தான் தாங்குமா??

 

புகை வளையத்தில் சுகம் காண்போர் தன் குடும்பத்திற்கு தரும் வெகுமதி!!கண்ணீர் முகவரி!!குடியால் பாதை மாறும் குடும்பங்களில்,போராடி கரை சேரும் மீன்கள் எத்தனையோ??கண்ணீர் நீராடி இரையாகும் மீன்கள் எத்தனையோ??சிந்தித்து இன்றே திருந்தினால் என்றும் ஆனந்தமே!!இல்லையேல் புதைகுழி வாழ்வு ஆரம்பமே!!

 

“அழக்கூடாதுடா!இப்ப அந்த பழக்கத்தை எல்லாம் விட்டுட்டாரல்ல”

 

“ம்”

 

“இந்த பூ வேலையை யார்கிட்ட கத்துகிட்டே ரதி”

“நாங்க நல்லாயிருந்தப்ப...ஸ்கூல் லீவ்ல...நிறைய கிளாஸ்சுக்கு போவேன் நரேன்..

அப்ப கத்துகிட்டதுதான்...அதுதான் எனக்கு..எங்க வீட்டுக்கு கை கொடுத்துச்சு..

நானும்,அம்மாவும் நைட் எல்லாம் உட்கார்ந்து செய்வோம்...அம்மா..ஸ்கூலுக்கு போகதான் சொன்னாங்க...நான்தான் போகலை..அப்பாவையும் கவனிச்சு,வேலையும் செஞ்சு அம்மா கொஞ்ச நாள்லயே ரொம்ப இளைச்சு..சோர்ந்து..போயிட்டாங்க..வசதியா வாழ்ந்தவங்க..எனக்கு..பயமா இருந்துச்சு நரேன்...அம்மாவுக்கு எதாவது ஆயிடுமோனு...

நான் அவங்களை இழக்க விரும்பலை நரேன்..எனக்கு படிப்பெல்லாம் பெரிசா தெரியலை...”

 

“ஒரே ஒரு ஆறுதல் என்னனா..அப்பா எங்க மேல அன்பாயிருப்பார்..குடிச்சுட்டு வந்து...அந்த கொடுமையெல்லாம் இல்லை நரேன்!அம்மா பேச்சை கேட்பார்!ஆனா ஆபிஸ் போனா...அவருக்கு நல்ல நண்பர்கள் இல்லை நரேன்!கஷ்டம் வந்தப்பதான் மனுசங்களோட உண்மையான முகத்தை தெரிஞ்சுகிட்டார்..இப்ப கடையை பார்த்துட்டு அமைதியா இருக்கார்”

 

நரேந்திரன் மௌனமாக அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் இதழ் பதித்து,இனி உனக்கு நானிருக்கிறேன் என உறுதி அளித்தான்.அவன் தொடுகையில் இருந்த மென்மையிலும்,கண்களில் இருந்த காதலிலும் ரதிப்ரியாவின் உள்ளத்தில் ஓர் இதம் பரவியது.அவள் வாழ்வில் ஓர் உதயம் வந்தது.

 

தி!ரதி”

 

அழைத்துக் கொண்டே வந்த நரேந்திரன் செயற்கை கனகாம்பரப் பூக்கள் செய்வதற்கு தேவையான வண்ணப் பொடியை கரைத்துக் கொண்டிருந்த ரதிப்ரியாவை பின்னாலிருந்து அணைத்தான்.

 

“என்ன நரேன்!வேலை செய்ய வேண்டாமா”

 

“வீட்டில வேலை செய்யக்கூடாது”

 

“நீங்க அவ்வளவு ஆர்டரை வாங்கி குவிச்சு வைச்சிருக்கீங்க!எப்படி முடிக்கறது”

 

கடந்திருந்த நான்கு வருடங்களில் தனது செயற்கை பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முன்னேறி இருந்தாள் ரதிப்ரியா.அவளை நரேந்திரன் முன்னேற்றி இருந்தான் என்று சொல்வதே சரியாக இருக்கும்!!

 

“ம்ம்..தொழிலை கவனிக்கிறதோட அப்பப்ப புருஷனையும் கவனிங்க செல்லம்”

 

“கவனிச்சுட்டா போச்சு”

 

அவன்புறம் திரும்பிய ரதிப்ரியா தன் கையில் இருந்த வண்ணத்தை அவன் இரு கன்னத்திலும் பூசி விட்டுச் சிரித்தாள்.

 

“வாலு”

 

மனைவியின் புடவை முந்தானை கொண்டு தனது கன்னத்தை துடைத்துவிட்டு தன் கன்னத்தை அவளிடம் காட்டினான் நரேந்திரன்.

 

“திருடா”என்றவள் கரங்கள் அவன் கழுத்தில் மாலையாக அவள் இடையினில் கரம் சேர்த்து தன்னோடு அணைத்தான் நரேந்திரன்.

 

“எங்க இந்த வீட்டு வானரங்களை காணோம்”

 

“அவங்க கோதை பாட்டி கூட அவங்க தாத்தா,பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க”

 

“நீ போகலையா”

 

“அவங்க என்னை கண்டுக்கிறதே இல்லை!பேரக் குழந்தைகளையே கொஞ்சிட்டு இருக்காங்க”

 

“உன்னைக் கொஞ்சத்தான் நான் இருக்கனே செல்லம்”

 

“அதானே”

 

ரதிப்ரியாவின் காதல் பொங்கும் பார்வையில் மெல்லச் சிரித்தான் நரேந்திரன்.

 

“எதுக்கு இப்ப சிரிக்கறீங்க”

 

“உன்னோட கண்கள்”

 

“என்ன சொல்லுது”

 

“என்னை மயக்குது”

 

“ம்”

 

“என்கிட்ட மயங்குது”

 

“கடலளவு காதலை இந்தச் சின்ன கண்ணுல காட்டறயே!மயங்காம என்ன செய்யும்”

 

அவள் அண்மையிலும்,பேச்சிலும் அவன் விழிகளின் மயக்கம் கூடியது.காதல் வழிந்தோடியது.நரேந்திரன்,ரதிப்ரியா வாழ்வில் இனிமை தொடர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.