(Reading time: 6 - 11 minutes)

வா! – பூர்ணிமா

This is entry #28 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ஞாயிற்றுக்கிழமையின் அருமை யாருக்குத் தெரிகிறதோ என்னவோ, சென்னைவாசிகளுக்கு நன்கு தெரியும். வாரம் முழுதும் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டு இருப்பவர்கள், நிதானமாகக் கழிக்கும் ஒரே நாள். அந்த ஞாயிறும் வேலைபார்க்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு உண்டு. கயலின் அப்பாவும் அப்படித் தான். எம். டி. சி. பஸ்ஸில் கண்டக்டர்.

காலையில் நிதானமாக எழுந்தாள் கயல். எழும் போதே கையில் எடுத்துப் பார்த்தால் கைபேசியில் குறுஞ்செய்தி மின்னியது. சரவணன் தான். அவன் தினமும் காலையில் "குட்மார்னிங்" குறுஞ்செய்தியோடு ஏதேனும் அவளின் படிப்பு சம்பந்தமான தகவலும் அனுப்புவான்.

"கயல். சீக்கிரம் கிளம்பி தி.நகர் வா. ஒன்பதரை மணிக்குள் வந்து சேர்ந்து விடு! கண்டிப்பாக வா!"

Vaa

ரவணனைக் கடந்த ஆறு மாதமாகத் தான் தெரியும். ஆறு மாதத்திற்கு முன்னும் தெரியும், அப்போதெல்லாம் கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் எம்.21 பேருந்தில் இருவரும் போகும்போது அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். ஆனால், பேசியதில்லை. கண்கள் பேசியதால் இப்போது கைபேசி மூலம் பேசிக் கொள்கிறார்கள். கயல் இறுதியாண்டு படிக்கும் கல்லூரியைத் தாண்டி சரவணன் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்க்கும் கல்லூரி இருக்கிறது. பேருந்தில் பார்த்துக் கொள்வதோடு சரி, வேறு எங்கும் சந்தித்ததில்லை. கயலும் இதை சரவணனிடம் சொல்லியே வைத்திருந்தாள், வீட்டில் பெற்றோர் சம்மதித்துத் திருமணம் நடக்கும் வரையில் சரவணனுடன் எங்கும் வெளியில் வரமுடியாது என்பதை. சரவணனும், தனக்கு வார இறுதியில் நிறைய வேலைகள் இருக்கும் என்றும், மேலும் சி.ஏ. படிப்புக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு இருப்பதால் தானும் எங்கும் அவளை அழைத்து செல்லும் எண்ணமில்லை என்று சொல்லி இருந்தான்.

எப்போதாவது கந்தாஸ்ரமம் கோவிலுக்கு அம்மாவுடன், அவள் செல்லும் போது அங்கிருந்தால் அவளைப் பார்த்துப் புன்னகை செய்வான். பேருந்தைத் தவிர அவர்கள் எங்கும் சந்தித்ததில்லை. இன்னிக்குத் திடீரென்று இப்படிப் புறப்பட்டு வா என்று சொல்வது எதற்காக இருக்கும். என்ன சொல்லிவிட்டுப் போவது அம்மாவிடம். இன்னிக்கு அவன் பிறந்தநாள் கூட இல்லையே. எதற்கு திடீரென்று வருமாறு இப்படிக் கூப்பிட்டான். அதுவும் வரமுடியுமா என்றுகூட கேட்கவில்லை, ரொம்ப உரிமையாக “வா” என்று குறுஞ்செய்தி அனுப்ப என்ன தைரியம் இவனுக்கு என்று தோன்றியது.

குளியலறைக்குள் சென்று தாழிட்டாள். சரவணன் எண்ணை அழுத்த, தொலைபேசி அழைப்பு "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் மற்றொரு அழைப்பில் உள்ளார்" என்றது.

அம்மா, "என்ன கயல்? ஞாயித்துக்கிழமை சீக்கிரமே குளிக்கக் கிளம்பிட்ட? எங்கேயும் வெளிய போறியா?"

அம்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றாமல் ஒரு நொடி திகைத்தாள். பின் சுதாரித்து,

“ஆமாம்மா பிராஜக்ட் விஷயமா நந்தினி வீடு வரைக்கும் போய்ட்டு வரணும்.”

“சரி, நான் கறிக்கடை வரைக்கும் போய்ட்டு வந்துர்றேன். மதிய சாப்பாடுக்கு வந்திருவியா?”

“இல்லம்மா! லேட் ஆனாலும் ஆகும். நீ காத்திருக்காத!”

திரும்பவும் அழைத்துப் பார்த்தாள். இணைப்புக் கிடைக்கவில்லை.குளித்துவிட்டு வருவதற்குள் அம்மா தட்டில் இட்லியும், கறிக்குழம்பும் வைக்க,

“எப்படிம்மா? இவ்ளோ வேகமா சமைச்சிட்ட.”

“ஆமா, வாரத்துல ஒரு நாள் கறி எடுக்கிறோம்.வாரம் முழுதும் நீயும் டப்பால அடைச்சிட்டுப் போய் ஆறிப்போனத சாப்புடுர, உங்கப்பாவும் சுடச்சுட ஒருநாள் கறிக்குழம்பு சாப்பிட்டதில்லை.நீயும் மதியம் சாப்பிட வரமாட்டன்னு சொல்லிட்ட, நான் மட்டும் என்னத்தை ருசியா வச்சுத் திங்கன்னு தான், கட கடன்னு இப்பவே வச்சிட்டேன்”.

அம்மாவின் பாசம் கண்ணில் நீர் வந்து விடும் போல் இருந்தது கயலுக்கு, அம்மாவை ஏமாற்றி வெளியில் செல்கிறோம் என்ற வருத்தம் வேறு. சரவணனைப் பற்றி அம்மா, அப்பாவிடம் சீக்கிரம் சொல்ல வேண்டும், அதைப் பற்றி சரவணனிடம் இன்று பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

“அப்பாக்கு இன்னிக்கு எத்தனை மணி வரைக்கும் டூட்டிம்மா?”

“மூணுமணி வரைக்கும்!”

தி.நகர் செல்லும் பேருந்தில் ஏறினாள். மனமெல்லாம் பரபரப்பு. முதன்முறையாக பேருந்தைத் தவிர்த்து ஒரு இடத்தில் சரவணனும் அவளும் சந்திக்கப் போகிறார்கள்.

"தி.நகர் போறோமே. அப்பா அங்கே தானே இருப்பாங்க. டிப்போல பார்த்துட்டா?” இப்போது தான் அது ஞாபகம் வர, பயம் தொற்றிக் கொண்டது.

திரும்பவும் சரவணனுக்குப் போன் செய்து வரவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. ஆனால் மனம் வரவில்லை. பயத்துக்கும் ஆர்வத்துக்கும் நடந்த மனப்போட்டியில் ஆர்வம் வென்றது, தி.நகர் வந்து சேரும் போது மணி ஒன்பதரையைத் தாண்டிவிட்டது.

சரவணனே அழைத்தான், "சாரிம்மா உனக்குத் தொல்லை கொடுத்ததுக்கு, உடனே ஒரு ஆட்டோ புடிச்சி திருமலைப்பிள்ளை ரோட்ல இருக்க பத்மா சேஷாத்ரி பாலபவன் வந்திரு, வாசல்லேயே இருக்கிறேன்!" சொல்லிவிட்டு உடனே வைத்துவிட்டான். என்ன விஷயம் என்று சொல்லாமலேயே பரபரப்பதைப் பார்த்தால், சற்று பயமாகவும் இருந்தது அவளுக்கு.

ட்டோவில் சென்று இறங்கியது தான் தாமதம், இன்னிக்கு ஒரு ரெண்டரை மணி நேரம் என் கூட இருக்க முடியுமா? என்றான் சரவணன்.

திருமணத்திற்கு முன்பு நான் வெளியில் உன்கூட எங்கும் வரமாட்டேன் என்று சொல்லி இருக்கேன்ல. என்னை ஏன் வரச்சொன்ன?

வரமாட்டேன்னு சொல்லிட்டு நீ ஏன் வந்த? என்றான் சரவணன் சிரிப்புடன்.

"சரி உள்ளே போவோம்"

"ஸ்கூல்ல என்ன வேலை உனக்கு?"

"உள்ளே வா சொல்றேன்!  இந்த ஆடிட்டோரியத்தைப் பார்த்தியா?"

"இவங்கல்லாம் யாரு!"

"இவங்கல்லாம் விழித்திறன் மட்டுமே இல்லாத மாற்றுத் திறனாளிகள். நல்லா படிக்கிறவங்க.!"

"ஏன் இங்கே இருக்கிறாங்க?"

"ஒவ்வொரு ஞாயிறும் காலை 10.00 மணில இருந்து 12.30 வரை இவங்களுக்குப் புத்தகங்களை வாசித்துக்காட்ட தன்னார்வ தொண்டர்கள் சிலர் வருவாங்க!"

"அப்படியா?"

"ஆமா கயல். இங்கு எகானமிக்ஸ் படிக்கிற ஓர் பெண்ணுக்கு இன்று வாசித்து சொல்லிக் கொடுக்கறவங்க வர முடியல. அந்த பெண்ணுக்கு அடுத்த வாரம் பரீட்சையாம். ரொம்ப வருத்தப்பட்டு சொன்னா. நீ தான் எகானமிக்ஸ் இளங்கலை இறுதியாண்டு படிக்கிறே, உன்னை உதவிக்குக் கூப்பிடலாம்னு அழைச்சேன்."

"என்னவோ ஏதோன்னு பயந்து தான் வந்தேன்.! உதவி பண்ணத்தான்னு தெரிஞ்சிருந்தா தைரியமாவே வந்திருப்பேன்!"

"என்ன பயந்த?"

"திருட்டுக் கல்யாணம் பண்றதுக்குத் தான் வான்னு சொல்றியோன்னு பயந்துட்டேன்!"

"பயப்படரவங்க வீட்டை விட்டுக் கிளம்ப மாட்டாங்களே!"

"முடியாதுன்னு சொல்றதுக்கு வந்து தானே ஆகணும்!"

"நம்ம கதை அப்புறம் இருக்கட்டும். அந்த பொண்ணுக்கு முதல்ல எகனாமிக்ஸ் சொல்லித்தரலாம் வா!"

"அப்புறம்! உன் வீட்டுக்குப் போகலாம். திருட்டுக் கல்யாணம்லாம் இல்லை, உங்க அம்மா, அப்பாகிட்ட நான் பேசுறேன். என்ன? நான் வரலாமா!"

புன்னகையுடன் கயல் சொன்னாள் "வா!" 

This is entry #28 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.