(Reading time: 8 - 15 minutes)

ஹேய்...” தேவன் தோளோடு தோள் லேசாய் இடித்தான், முகத்தில் கடல் காற்று, முதுகில் லேசான வெய்யில், மனத்தில் விசுவரூபமெடுக்கும் ஒரு கேள்வி, ”ம்...” என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் “என்ன?”

“என்ன அமைதியாய்ட்ட? ம்? கோவம் போகலயா?” தோளில் கைபோட்டு நெருக்கினான், தட்டிவிட்டாள்,

”இல்ல!”

”ஐ லவ் யூ டா செல்லம்” காதுக்குள் கிசுகிசுத்தான், அதன் ஐ.எஸ்.ஐ முத்திரையைத் தேடினாள், கிடைப்பதாய் இல்லை. “நானும்” என்று சொல்லிவைத்தாள், இவளது குரலின் வெறுமையைப் புரிந்து கொண்டவனாய் “ஹ்ம்ம்ம்” என்றான்,

“சரி அடுத்து எங்க போலாம்?”

“சொல்லு...” அலட்சியமாய்ச் சொன்னாள், ’இந்த நாடகத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போயிடலாமா’ என்று கேட்கத் தோன்றியது, கேட்கவில்லை,

“சினிமா?”

“சரி” உன் நாடகம், நீயே இயக்கு என்பதைப் போல பதிலளித்தாள்.

டற்கரையே இதமாய் இருந்தது அவளுக்கு அதை விட்டு வந்த பிறகு. திரையரங்கினுள் நுழைந்து தங்களின் இருக்கைகளில் அமர்ந்து கொண்ட பொழுதுதான் தேவன் ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்திருந்தது அவளுக்கு உரைத்தது. எ.மணி இன்னும் சத்தமாய் அலறியது.

திரையரங்கின் லேசான இருட்டு.

அவனது அருகாமை அவளுடைய ஹார்மோன்களைத் தூண்டிக் கொண்டிருந்தது. நாற்காலிகளுக்கு இடையிலான கைப்பிடி நரகமாய்த் தோன்றியது. அவனது தோளில் சாய்ந்து கொண்டாள், லேசான இருட்டு அளித்த தைரியத்தில், தாமரைக் கண்ணான் உலகை கேலி செய்தது அவள் மனம். அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான், இப்படியே ஆயுள் முழுமையும் கழிந்துவிடக் கூடாதா என்று ஏங்கினாள், தயாரிப்பாளர் இரண்டரை மணி நேரத்திற்குத் தான் செலவழித்திருந்தார்!

“பாப்கார்ன், ஸ்ப்ரைட்? சரியா?” புன்னகையுடன் தேவன் நின்று கொண்டிருந்தான், குந்தவை எதுவும் சொல்லாமல் முழித்தாள்,

“என்ன மா? என் செல்லப் பொண்டாட்டிக்கு அதான பிடிக்கும்? இல்ல வேற எதாவது வேணுமா?” ‘இது செயற்கையா?’ ஆம் என்றது கால் மனம், இல்லை என்றது முக்கால்.

”ம்ம்...” கட்சி மாறிய மனதின் அந்தக் கால் பகுதி எது என்று அலசியபடியே பதிலளித்தாள். பாப்கார்னும் குளிர்பானமும் சமோசாவும் பப்ஸுமாய்  வந்தியத்தேவன் திரும்பி வருவதற்குள் ஒரு மினி பட்டிமன்றமே அரங்கேறி இருந்தது குந்தவை மனத்தில். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவன் தோள் கதகதப்பை அனுபவிக்கத்தான் செய்தாள், தாமரைக் கண்ணான் உலகை பழிக்காமல்.

ரங்கைவிட்டு வெளியே வந்ததும் அவன் அடுத்து எங்கே என்று கேட்கவில்லை, கேட்டால் மட்டும் பதில் சொல்லிவிடப் போகிறோமா என்ன என்ற நினைப்பில் குந்தவையும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எ.மணி மட்டும் தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தது.

வழியில் வந்தியத்தேவன் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தான், அநேக விஷயங்கள் அவர்களது சொந்தக் காதல் கதையின் படலங்களாகவே இருந்தன. ‘கல்யாணத்திற்குப் பிறகான படலங்களில் இதற்கு ஈடானவை உண்டா’ என்று தேடிப் பொறுக்கிக் கொண்டிருந்தாள் குந்தவை, மனத்தில். சட்டென வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவளை இழுத்து ஒரு முத்தம் வைத்தான் வந்தியத்தேவன்.

செயற்கை? ஆம் என்றது அரைக்கால் மனம். மீதி ஏளனமாய் சிரித்தது. எச்சரிக்கை மணி ஒருமுறை ஒலித்துப் பார்த்தது. இதனிடையே, தன் பக்கமாய் வந்து வந்தியத்தேவன் கதவைத் திறந்துவிட்டதை அவள் கவனிக்கவில்லை. ”இறங்கு” என்றான்.

எதிரே இருந்தது ஒரு பதிப்பகம். அதனுள் நுழைந்து அங்கிருந்தவரிடம் கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்து கொண்டான் வந்தியத்தேவன். அவர் தன் வேலையாளிடம் ஏதோ சொல்லி உள்ளே அனுப்பினார். குந்தவையையும் அறிமுகம் செய்து வைத்தான். ‘ஓ, இவங்கதானா அது, இதைலாம் இப்ப படிக்குறவங்க ரொம்பக் குறைவுங்க’ என்றுவிட்டு வேலையாள் கொண்டு வந்த பொட்டலத்தைக் குந்தவையிடம் நீட்டினார், ‘என் அப்பா உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்’ என்றார்.

குந்தவை ஆர்வமாய் அந்தப் பொட்டலத்தை வாங்கித் திறந்து பார்த்தாள், அவள் பல நாள் தேடி இனி கிடைக்காது என்று கைவிட்ட ஒரு புத்தகத் தொகுப்பு.

ந்தியத்தேவன் வண்டியை முடுக்கி இயக்கினான்.

“ரொம்ப நன்றிடா”

“நமக்குள்ள நன்றி மன்னிப்புலாம் கிடையாதேடி பொண்டாட்டி?” சிரித்தான், முழு இயற்கையாகத் தோன்றியது,

”ம்ம்...” என்றாள், எச்சரிக்கை மணி முழுதாய் அடங்கியபாடில்லை,

”எதுக்கு இதெல்லாம்?” கேட்டேவிட்டாள்,

அவன் புன்னகைத்தான், அவளை நோக்கினான்,

“ஐ லவ் யூடி பொண்டாட்டி” என்று கண்சிமிட்டினான்,

அவள் தாமரைக் கண்ணான் உலகை மனதாரப் பழிக்கத் தொடங்கினாள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.