(Reading time: 11 - 22 minutes)

புலி வேட்டை - பூர்ணிமா செண்பகமூர்த்தி

வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பாருன்னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மை. எவ்வளவு அலைச்சல், எவ்வளவு அசதி, எவ்வளவு வேலை.”சொல்லியவாறே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான் பாரி. “கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்லையே. இவ்ளோ டென்ஷன்ல அஞ்சலிகிட்ட சரியாக் கூட பேச முடியல. அவ ரொம்ப இதெல்லாம் விரும்பி ரசிக்கிற மாதிரி தான் தெரிஞ்சது. பொண்ணுங்கதான் நகை, பட்டுப்புடவைனா இன்னும் விரும்பத்தானே செய்யறாங்க.” நான் சென்னைல வளர்ந்தேன். அவ அந்த சின்ன ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்ல தானே வளர்ந்தா, இந்த மாதிரி சம்பிரதாயங்கள் எல்லாம் புதுசாவும் இருக்காது. கல்யாணத்துக்கு முன்னாடியும் ரொம்ப பேசிக்க விடலை. போன்ல பேசினாலும் கிட்ட யாரவது இருந்துட்டே இருப்பாங்க. இந்த மூணு நாள் தேனிலவுன்னு அனுப்பி வச்சாங்களே, அதாவது நல்லது. அவகிட்ட கொஞ்சம் பேசி அவளைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சால் புதுசா கல்யாணம் ஆனவங்களைத் தனியா அனுப்ப பயமா இருக்குன்னு அவ அக்கா குடும்பத்தையும், என் அண்ணன் குடும்பத்தையும் அவங்க குழந்தைகளோட அனுப்பி வெச்சிருக்காங்க. போதாக்குறைக்கு அஞ்சலியோட தம்பி வேற..மச்சானை நல்லபடியா கவனிக்கறேன்கிற பேர்ல "எதாவது வேணுமா மச்சான்னு" அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தடவை கேட்டுட்டே இருக்கான். எப்படி தான் சமாளிக்கப் போறேனோ? தேனிலவுன்னு சொன்னதும் சிம்லா, டார்ஜிலிங், குலுமணாலி என்று எதாவது ஊரு குளுகுளு எடத்துக்கு அனுப்புவாங்க. அவ்வளவு தூரம் அனுப்ப முடியலைன்னாலும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு அனுப்புவாங்க. இவங்க வீட்ல என்னடான்னா மேகமலைன்னு ஒரு இடத்துக்குப் போய் அனுப்பி வச்சிருக்காங்க. அஞ்சலி அப்பா சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயத்தில் வேலை பார்த்த பொழுது பழக்கமான ஒருத்தர் தன்னோட பங்களா இருக்குன்னு நம்மளை இந்த மாதிரி ஒரு இடத்தில தங்க வச்சிருக்காங்க. அவர் யாரோ வனவிலங்கு ஆர்வலராம். அதான் மேகமலையில பங்களா கட்டி செட்டில் ஆகிட்டாராம்.  கல்யாணத்துக்கு வந்த அவர் கூப்பிட்டார்னு இங்கே அனுப்பி வச்சுட்டாங்க.!”

பழமை மாறாத பங்களா. மனுசங்களும் நல்லவங்களாத் தான் தெரியுறாங்க. என்ன இங்கே புலிகள் நடமாட்டம் அதிகமா இருக்குது சொல்றாங்க. அதான் வெளியில் போகக்கூட பயமா இருக்குது. புலிகள் என்றவுடன் வேற மாதிரி எதுவும் கற்பனை பண்ண வேண்டாம்.

யாரோ கதவை தட்றாங்க. இருங்க என்னனு போய் பார்த்துட்டு வரேன்.

Puli vettai

"டொக்! டொக்!"

"என்ன மச்சான் எதாவது வேணுமா?" அஞ்சலியின் தம்பி வருண்.

“இல்ல வருண் எதுவும் வேண்டாம்!”

“எல்லாம் வசதியாத் தானே இருக்கு?”

“இருக்கு!இருக்கு!”

“ஏசி ஒர்க் ஆகுதுல்ல?”

“ஹ்ம்ம்!ஆகுது.”

“ஏற்கனவே இங்கே குளிரத் தான் செய்யுது. இதில ஏசி வேறயா?”

“சரி மச்சான்!”

“அஞ்சலி எங்க?”

“அஞ்சலி அக்கா, பெரியக்கா ரூம்ல ரெடி ஆகிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க. எதாவது வேணும்னா என்கிட்ட சொல்லுங்க மச்சான்.”

“சொல்றேன் வருண்! இப்போதைக்கு ஒன்னும் இல்ல.”

வருண் சென்று விட்டான்.

எங்களுக்கு கொடுத்திருந்த அறை மிகவும் விசாலமானது. வேலைப்பாடுகள் நிறைந்த கட்டில். அலங்கார மரச்சாமான்கள். குளுகுளுவென்று காற்று வீச, நிலவைப் பார்க்க ஏற்ற இடமாக பால்கனி. ரசனையான இடம் தான். திரும்பவும் கதவைத் தட்டும் சத்தம். வருண் என்று தான் நினைக்கிறேன். இவன் ஒருத்தன் விவஸ்தை இல்லாம கதவைத் தட்டிட்டே இருக்கான்.

"டொக்! டொக்!

"வருண்! எல்லாம் இருக்கு! எதுவும் வேணாம்"

"ஐயா! நான் வருண் இல்ல!"

“ச்சே! அஞ்சலியத் தவிர எல்லாரும் வர்றாங்கப்பா!”

கதவைத் திறந்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்  நின்று கொண்டு இருந்தார்.

"நான் பங்களாவில் வேலை பார்க்கும் மருதையன்! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் "

"என்கிட்ட என்ன முக்கியமான விஷயம் நீங்க சொல்லணும் "

“எல்லாம் உங்க பாதுகாப்புக்குத் தான்!”

என் பாதுகாப்புக்கா?

ஆமாங்க!

சரி என்ன விஷயம்னு  சொல்லுங்க!

இந்த மேகமலையில் புலி நடமாட்டம் சாஸ்திங்க(அதிகம்)! இரவு நேரம் அது வேட்டைக்குப் போகும்னு சொல்லுவாங்க. அதுகளுக்கு நம்மள விடவே கண்ணும் நல்லாத் தெரியுமாங்க. அதுனால இந்த ஊர் மக்கள் இரவில ரொம்ப வெளிய நடமாட மாட்டாங்க. கடைகளும் சீக்கிரம் அடைச்சிருவாங்க. உங்க வீட்டு ஆளுகளை இரவில் வெளியில் போக வேணாம்னு சொல்லி இருக்கேன். நீங்களும் போகாதீங்க.

ரொம்ப நன்றிங்க!

இன்னொரு முக்கியமான விஷயம்ங்க!

அதுவும் எங்க பாதுகாப்புக்காகத் தானா?

ஆமாங்க!

சரி சொல்லுங்க!

எல்லா பால்கனி கதவையும் ராவுல(இரவில்) அடைச்சுக்குங்க. உங்க சொந்தகாரங்க பக்கத்து அறையில தான்  தங்கி இருக்காங்க. அவங்களுக்கும் நினைவுபடுத்திருங்க.

புலி மாடி ஏறுமா?

இதுவரை மாடி வரை ஏறினது இல்லை.

கரடி மரத்தில சுலபமா ஏறும். பால்கனிக்குத் தாவிருச்சுன்னா உள்ளே பூந்துரும்(புகுந்திடும்). அதுக்குத் தான் சொன்னேன்.

அய்யய்யோ! இங்கே அமேசான் காட்டுக்குள்ள பயணம் செய்யற மாதிரி அலெர்ட்டா இருக்கணும் போலேயே!

மருதையன் சிரித்தார்.

ஒன்னும் பயப்படாதீங்க. நாங்க எல்லாம் இருக்கோம்ல.

நீங்க இங்கேயே இருக்கீங்க! பழகிப் போயிருக்கும்!

நீங்களும் பழகிருவீங்க!

இன்னும் ஒரே ஒரு முக்கியமான விஷயம். மாடியில் உங்க அறை தான் கடைசி அறை. உங்க அறைக்கு வெளியே வராந்தா முடியற இடத்தில இருக்க கதவைத் திறந்தால் கீழே படிகள் இறங்கிப் போகும். அங்கே இருக்கிற கதவைத் திறந்து விட வேண்டாம். ரொம்ப முக்கியமா அங்கே இருக்கிற இரும்பு ஸ்டூலை நகர்த்த வேண்டாம்.

சரிங்க! ரொம்ப நன்றி! நான் பார்த்துக்கிறேன்.

வரேங்க தம்பி!

வாங்க (மனதுக்குள் வராதீங்க!அடியே என் அஞ்சலி என்னடி பண்ணிட்டு இருக்க!"

செல்பேசி ஒலித்தது " கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை!"

அஞ்சலியின் எண்...

என்ன தான் பண்ணிட்டு இருக்க உங்க அக்கா ரூம்ல? சீக்கிரமா வா! எவ்வளவு நேரம் தான் காத்துட்டு இருக்கிறது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.