(Reading time: 10 - 19 minutes)

ரவு மணி இரண்டை தொட்டிருந்தது., கலந்து, மகிழ்ந்து களைத்து அவனது மார்பில் சாய்ந்து ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் சிந்துஜா. கலைந்துகிடந்த அவள் கூந்தல் கோதி, நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான் விஷ்ணு.

மலரவள்.!!!! மௌனமான மலர்.!!!!! சிறுவயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு காய்ச்சலினால் பேசும் சக்தியை இழந்து விட்ட ஒரு மௌன மலரவள்.!!!

உதடுகள் பேசாவிடினும். அவள் கண்கள் ஆயிரம் கதை பேசும். .பள்ளிக்காலத்திலேயே அவன் மனம் அவளிடம் தஞ்சமடைந்தது. ஆனால் அதை அவள் உட்பட யாருமே ஏற்றுக்கொள்ள தயாரக இல்லை.

‘நான் வாய் பேச முடியாத பெண்.!!! என்னை மனைவியாக அடையும் நிலை உனக்கு வேண்டாமென’ அவள் மறுத்து விலகிய போதிலும், அவனை நோக்கியே ஓடி வரும் அவளது உள்ளத்தின் மொழியை அவன் புரிந்துக்கொள்ளாமல் இல்லை.

எத்தனை எதிர்ப்பு வந்த போதும் தன்னவள் அவள்தான் என்ற முடிவிலிருந்து மாறுவதாகவே இல்லை அவன்.

அவனது போராட்டம் தொடர்ந்துக்கொண்டிருந்த போதுதான் நிகழந்தது அந்த விபத்து.

ஒரு நண்பனின் திருமணதில் கலந்துக்கொள்வதற்காக ஊட்டிக்கு அவன் தனியாக காரில் சென்ற போது, அவனது கார் நிலைதடுமாறி, ஒரு மலைச்சரிவில் சரிந்து உருண்டது. கோயம்புத்தூரில் இருந்த அவனது பெரியப்பாவின் மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டான். அவனுக்கு அறுவை சிகிச்சையை செய்தவர் அவனது பெரியப்பா.

இரண்டு நாட்கள் நினைவின்றி கிடந்தான் விஷ்ணு. அவன் கண்விழித்த மறு நொடி அவன் பார்வையில் விழுந்தாள் அவனருகில் கண்ணீருடன் நின்றிருந்த சிந்துஜா. பார்த்திருந்தான்.!!!! அவளையே பார்த்திருந்தான்.!!!!! மனம் பலவித யோசனைகளில் அலைப்பாய்ந்தது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் அவன் யாரிடமும் பேசவில்லை. அப்போது கிடைத்தது பெரியப்பாவுடன் ஒரு தனிமை.

‘பெரியப்பா’ என்றான் மெல்ல. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?’

‘சொல்லுடா...’

‘எனக்கு தலையிலே அடிப்பட்டதுனாலே பேச்சு போயிடுச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிடுங்க பெரியப்பா’. என்றான் விஷ்ணு  அவர் சொன்னால் போதும் எல்லாரும் நம்பி விடுவார்கள்.

கொஞ்சம் திடுக்கிட்டு போனார் பெரியப்பா ‘டே........ய்....பைத்தியமாடா உனக்கு?’

‘ஆமாம் பெரியப்பா. சிந்து மேலே.

உனக்கு சிந்து வேணும் அவ்வளவுதானே நான் எல்லார்கிட்டேயும் பேசி உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறேன். நீ உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். இப்போ நீ என்ன கேட்டாலும் செய்ய எல்லாரும் தயாரா இருப்பாங்க.’ அவனை சமாதான படுத்தும் விதமாக சொன்னார் அவர்.

‘இல்லை பெரியப்பா ......யார் சம்மதிச்சாலும் அவ சம்மதிக்க மாட்டா பெரியப்பா. எனக்கு அவளை பத்தி தெரியும். அப்படியே சம்மதிச்சாலும் காலம் பூரா ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோடவே இருப்பா. என்ன புருஷனா பார்க்காம எதோ ஒரு தியாகி மாதிரி பார்த்திட்டே இருப்பா. மத்தவங்க அவளை குத்தலா பேசவும் வாய்ப்பிருக்கு. எனக்கு இதெல்லாம் வேண்டாம் பெரியப்பா. எனக்கு அவளோட காதல் மட்டும்தான் வேணும். அவ என்னை மனசார ஏத்துக்கணும்.’

‘அதுக்காக நீ காலம் பூரா யாரோடையும்  பேசாம....... எப்படிடா?  ரொம்ப கஷ்டம் டா கண்ணா...’

‘கஷ்டம்தான் பெரியப்பா ஆனால் முடியாத விஷயமில்லை. ப்ளீஸ் பெரியப்பா’

அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை பெரியப்பா. சில நாட்கள் கடந்த போதும் அவன் யாருடனும் பேசவில்லை. ஏன்? எதனால்? என்ற கேள்விகள் எழத்துவங்க, வேறு வழி இல்லாமல் அவன் மன உறுதியில் கொஞ்சம் அசைக்கப்பட்டவராக சொன்னார் பெரியப்பா. ‘அவனாலே இனிமே பேச முடியாது.’

மொத்தாமாக உடைந்து போனார்கள் அவனை பெற்றவர்கள்.

பெரியப்பாவுக்கு கவலை!!!. ‘இப்போ இமோஷனலா முடிவெடுத்துட்டு பின்னாலே கஷ்டப்படப்போறே விஷ்ணு. காதலிலே ஜெயிச்சு நீ வாழ்க்கையிலே தோத்துட கூடாதுபா’ அவர்கள் இருவருக்கும் கிடைத்த ஒரு தனிமையில் சொன்னார் பெரியப்பா

‘தோற்கமாட்டேன் பெரியப்பா. காதலிலே ஜெயிச்சா ஆட்டோமேட்டிகா வாழ்கையிலும் ஜெயிச்சிடுவேன். நீங்க வேணும்னா பாருங்க,

ஒரு பெருமூச்சுடன் அவனைப்பார்த்தார் பெரியப்பா.

‘பேசாம இருக்கும் போது நிறைய கவனிக்க முடியும். இன்னும் நிறைய விஷயங்களை உள்வாங்கிக்க முடியும் பெரியப்பா. நீங்க என்னை டெஸ்ட் பண்ணி பாருங்களேன்’.’

அவனை சோதித்து பார்க்கவே தனது மருத்துவமனை நிர்வாகத்தை அவனிடம் கொடுத்தார் பெரியப்பா. முதலில் கொஞ்சம் தடுமாறியவன் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிக்க துவங்கினான். பேசாமலே வெல்ல துவங்கினான்.

அவனுக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டான் அவன் உலகம் மிகவும் அழகாகி விட்ட நிறைவு தோன்றியது அவனுக்கு . வீண் சண்டைகள், வாக்கு வாதங்கள் வார்த்தை பேதங்கள் இல்லாத அமைதியான  உலகம்.!!!!!

ஒரு மருத்துவனாக சில அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக முடித்திருந்தான். அவனது மன உறுதியில் பிரமித்துப்போனார் பெரியப்பா.

அவன் திருமண பேச்சை பெரியப்பாவே ஆரம்பித்தார். எங்கிருந்தும் மறுப்பே எழவில்லை இப்போது.

‘அவளை முதலிலேயே உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கணுமோ என்னவோடா? தப்பு பண்ணிட்டேன். வாய் பேச முடியாத பொண்ணு உனக்கு வேண்டாம்னு நினைச்சேன் அதனாலே தான் உனக்கு இப்படி ஆயிடுச்சோ என்னவோ?’ இது அம்மாவின் ஆதங்கம்.

சிந்துவும் மறுக்கவில்லை. இப்போது. என்னவென மறுப்பாளாம் அவள்’????

எல்லாரையும் எல்லாவற்றையும் சிறு புன்னகையுடனே ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

இதோ இப்போது அவன் கைச்சிறையில் சிந்துஜா. மறுபடி முத்தமிட்டான் அவளை. தூக்கத்திலேயே சிலிர்த்து அவனுடன் இன்னும் அதிகமாய் ஒட்டிக்கொண்டாள் அவள்.

இந்த பேசாத காதல் அவனுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அவளை முன்பை விட இன்னமும் அதிகமாக நேசிக்க முடிகிறது. இன்னமும் அதிமாக ரசிக்க முடிகிறது. இதோ அவளுக்காக அவள் காதலுக்காக மௌனமே அவன் வேதமாகி இருக்கிறது.!!!!!

Manathai Thotta ragangal - 07 - Vanuarntha solaiyile

{kunena_discuss:748}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.