(Reading time: 20 - 40 minutes)

ப்போதெல்லாம் அவனின் வாடிக்கையாகிவிட்டது, அவனிடம் என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு இவளுக்கு மனம் வரவில்லை.

வேலைகளை முடித்துவிட்டு அமுதா படுக்க வரும்போது கதிரவன் கண்ணனை தன் மேலேயே படுக்க வைத்திருந்தான், இருவரும் தூங்கி விட்டனர், இப்படியே இரவு முழுவதும் படுப்பது நல்லதல்ல என்று கண்ணனை அவன் அருகில் படுக்க வைத்துவிட்டு இவளும் படுத்துக் கொண்டாள்,

சற்று நேரத்திற்கு பிறகு கதிரவன் கண்ணா... என்று அலறி எழுந்தான், அந்த அலறல் சத்தத்தில் இவளும் எழுந்துக் கொண்டாள், அவள் அருகில் இவள் சென்று பார்த்தாள் அவன் உடல் நடுங்கி கொண்டிருந்தது. கண்ணன் அருகில் தான் இருக்கிறான் என்று இவள் சொல்லியும் அவன் இன்னும் அதே நிலையில் இருந்தான். கண்ணனை சற்று தள்ளி படுக்க வைத்து விட்டு இவள் கதிரவனை அணைத்துக் கொண்டு படுத்துவிட்டாள், அவனும் உறங்கி விட்டான்.

கதிரவனுக்கு என்னத்தான் பிரச்சினை..?? அமுதா யோசித்து கொண்டிருந்தாள்.. இப்போதெல்லாம் இது அடிக்கடி நடக்கிறது, தூக்கத்தில் அலறி எழுவதும்... இவளை அணைத்துக் கொண்டு உறங்குவதும், ஆனால் அவன் தூக்கத்தில் அலறும் போது கண்ணன் பெயரை தான் உரைக்கிறான், அப்படியென்றால் கண்ணனுக்கு ஏதாவது பிரச்சினையா..?? கண்ணனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இவளிடம் கூறுவதெற்கென்ன...?? இவள் இப்போது கண்ணனின் அன்னை தானே..?? அவனிடம் இதைப்பற்றி கேட்டுவிடுவதென்று அமுதா முடிவெடுத்து விட்டாள்.

ன்று கதிரவன் அலுவலகத்தில் இருந்து வந்ததும் "உங்க மனசுல நீங்க என்னத்தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க..?? இப்படி தான் அமுதா அவனிடம் பேச்சை ஆரம்பித்தாள், அவன் அமைதியாக திரும்பி அவளை நேருக்கு நேராக பார்த்த போது அவள் பேச்சு தடுமாறியது.

"இல்ல..அ.. உங்க மனசுல ஏதாவது பிரச்சினையா..?? இப்பல்லா...ஆம்.. தூக்கத்தில் எழுந்து அலறுரீங்க..?? உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா... இல்லை கண்ணனுக்கா...??

"இங்கப் பாருங்க கண்ணனுக்கு பிரச்சினைன்னா... என்கிட்ட சொல்லுங்க..?? நான் அவனுக்கு அம்மா.. எனக்கு எல்லாம் தெரியனும்.."

உங்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னாலும் சொல்லுங்க... நான் உங்க மனைவி.. என்று சொல்ல நினைத்ததை மனதிலேயே வைத்துக் கொண்டு முதல் கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டாள்.

"கண்ணனோட தாத்தா, பாட்டி, அதான் என் முதல் மனைவியோட அப்பா, அம்மா, அவங்க கண்ணனை தன்னோடு வச்சிருக்க ஆசைப்படறாங்க..

அதை நான் மறுத்ததுக்கு கோர்ட்டில் கேஸ் போட்டிருக்காங்க.."

இதுவரை மனதில் உள்ள பிரச்சினையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றிருந்தது கதிரவனுக்கு, இப்போது அமுதா கேட்டதும் அவளிடம் சொல்லிவிட்டான்.

ஆனால் அதை கேட்ட அமுதாவிற்கு சிரிப்பு தான் வந்தது, அவள் சிரித்தே விட்டாள், ஆனால் அவனிருக்கும் நிலையில் சிரிப்பது தவறு என்று சிரிப்பதை நிறுத்திக் கொண்டாள்.

"சாரி... நீங்க சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு... நீங்க கண்ணனோட அப்பா.. உங்களுக்கு தான் முதல் உரிமை.. அது உங்களுக்கு தெரியாதா..??"

"தெரியும்.. ஆனால் நான் அவன் அப்பா கிடையாது"

கதிரவன் சொன்ன வார்த்தை சரியாகத்தான் தன் காதில் விழுந்ததா... என்று அமுதாவிற்கே சந்தேகமாக இருந்தது.

"என்ன சொல்றீங்க...?? கண்ணனுக்கு நீங்க அப்பா இல்லயா...?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்"

"ஆமாம்மா... கதிரவன், கண்ணனுக்கு அப்பா கிடையாது" புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று விட்டு திரும்பி வந்த பார்வதி சொன்ன வார்த்தைதான் அது. மேலும் பார்வதி சொன்னதை கேட்ட அமுதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்,

முதாவிடம்  இரண்டு மாதத்தில் திருமணம் என்று சொல்லிவிட்டு சென்ற கதிரவன் அப்போதே தன் அன்னையிடமும் அமுதாவை மணக்க அனுமதி வாங்கிக் கொண்டே ஊருக்குச் சென்றான் அதனால்தான் அவன் திரும்பி வந்ததும் நிச்சயதார்த்தம் செய்ய பார்வதி முடிவெடுத்திருந்தார். ஆனால் ஊரிலிருந்து வந்த கதிரவன் அமுதாவிடம் பேசியது பார்வதிக்கே அதிர்ச்சிதான்,

அமுதா சென்ற பின் கதிரவனிடம் பார்வதி கேட்டதற்கு கதிரவன் சொன்னது பார்வதிக்கே அதிர்ச்சி தான், வேலைக்குச் சென்ற ஊரில் கதிரவனுக்கு விபத்து ஏற்பட்டது. அதை பார்வதியிடமோ அமுதாவிடமோ சொன்னால் அதிர்ச்சி அடைவார்கள் என்று மறைத்து வைத்தான் அவன், அதனால் தான் அவன் குணமடைந்து வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆனது.

இந்த விபத்தில் தாம்பத்ய வாழ்க்கைக்கு இப்போது இவன் தகுதியில்லை என்றும் முறையான சிகிச்சை மேற்கொண்டால் குணமடையும், ஆனால் எப்பொழுது சரியாகும் என்று தெரியாது என்று மருத்துவர் கூறியதால் அமுதாவின் வாழ்க்கையை நாசமாக்க இவன் விரும்பாததால் இப்படி நடந்துக் கொண்டதாக கூறினான்.

தன் மகனின் நிலையை எண்ணி அந்த அன்னை வருந்தினாள், இந்த நிலையில் தன் கணவரின் நண்பர் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வந்து அவரை சென்று பார்த்தார் பார்வதி. தன் மகள் ஒருவனை நம்பி ஏமாந்ததாகவும் அவன் அவளை கர்ப்பமாகிவிட்டு ஓடிவிட்டதாகவும் இந்த நிலையில் அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறினார், இதைக் கேட்ட பார்வதிக்கு அந்த தவறான யோசனை வந்தது.

குடும்ப வாழ்க்கைக்கு தகுதியில்லாதவன் என்று யாரும் தன் மகனை குறை சொல்லக் கூடாது என்று நினைத்த அந்த அன்னை, இந்தப் பெண்ணை மகனுக்கு மணம் முடித்தால்... இந்தக் குழந்தை பிறந்ததும் அதை அவனது குழந்தை என்று சொன்னால் தன் மகனுக்கு எந்த அவமானமும் ஏற்படாது, அந்த பெண்ணுக்கும், அவள் குழந்தைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்தார்.

இதை அந்த பெண்ணின் தந்தையிடம் சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார், ஆனால் கதிரவன் மறுத்தான், அமுதாவை தவிர யாரையும் திருமணம் செய்ய முடியாது என்றும், இந்த நிலைமையில் எந்த பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்றும் கூறினான், ஆனால் அவன் அன்னையும் அந்தப் பெண்ணின் தந்தையும் விடவில்லை, அவனை தொடர்ந்து வற்புறுத்தினர்.

அவர்கள் வற்புறுத்தலுக்கு தலை சாய்த்தவன் அந்த பெண்ணுக்கும் சம்மதம் என்றால் ஒத்துக் கொள்வதாக கூறினான், அந்த பெண்ணிற்கே விருப்பமா... ?? இல்லை அவளை கட்டாயப்படுத்தினார்களா..?? என தெரியவில்லை, அவள் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

திருமணமும் நடந்தது, அவன் மனைவியை ஏமாற்ற விரும்பாத அவன் முறையான சிகிச்சையை மேற்கொண்டான். அவளுக்கு குழந்தை பிறந்தது, அவன் அந்த குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டான், பார்வதியும் அப்படித்தான்... ஆனால் இப்படிப்பட்ட கணவனுக்கு குணமடையும் வரை அவன் மனைவிக்கு பொறுமையில்லை, ஒரு வயது கூட முடியாத அந்த குழந்தையையோ... தன்னை அவமானத்தில் இருந்து காப்பாற்றிய கணவனையோ நினைத்து பார்க்காமல், தன் சுகம் பெரிதென்று  நினைத்து மீண்டும் இன்னொருவனால் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமல் வேறொருவனுடன் சென்று விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.