(Reading time: 9 - 17 minutes)

தென்ன கேள்வி... எத்தனை நாளைக்கு அவர் அந்த டிரெயின்ல வர்றாரோ அது வரை தான்” என்றாள் சாவதானமாக.

அதுவரை அவர்களின் உரையாடலில் தலையிடாமல் துணிகளை வெட்டிக்கொண்டிருந்த பவித்ரா துணிகளை போட்டுவிட்டு அவர்களை நோக்கி திரும்பினார். ரஞ்சியை பார்த்த கண்களில் தாங்கமுடியாத வேதனை இருந்தது.

பவித்ராவை பார்த்து விட்டு, மற்றவர்களை பார்க்க... அவர்களும் அதே அளவு இல்லையென்றாலும் வேதனையை பிரதிபலித்தனர்.

எல்லோரையும் பார்த்து ஆதுரமாக சிரித்தவள் “என்னக்கா பண்றது. எனக்கு குறையிருக்கிறது என்பதனால என்னால கல்யாணம் பண்ண முடியாது. ஆனா காதலிக்கலாம் இல்லையா? திருமணத்திற்கு தான் இருவர் தேவை, காதலுக்கு ஒருவர் போதுமே. நாம காதலிக்கிறவர் நினைவு போதுமேக்கா” என்றாள் விளக்கமாக.

“எப்படிடீ உன்னால” என்றவள் தொண்டையடைக்க பாதியில் நிறுத்தினாள்.

நீண்ட நெடிய மூச்சையெடுத்து விட்டவள் “என்னக்கா பண்ண. ஆண்டவன் ஏன் என்னை இப்படி படைச்சாருன்னு தெரியலை. ஆனா அதுக்காக வாழ்க்கையை நரகமாக்கிக்கணுமா என்ன?.... அதுவுமில்லாம புராணங்களில் எல்லாம் பாருங்க, இறைவன் அவருடைய அடியார்களுக்கு எல்லாம் பலபல சோதனைகள் வைத்து அவர்களின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவார் இல்லையா? அதுபோல இது கூட எனக்கான சோதனையா இருக்கலாம். யாருக்கு தெரியும்?” என்றவள் லேசாக புன்னகைத்து, எல்லோரையும் ஒருமுறை சுற்றி பார்த்து விட்டு “ஆனா நான் அதிர்ஷ்டசாலி தான். யாருக்கு கிடைக்கும் இவ்வளவு நட்பு. இதை கொடுத்ததற்கே அந்த இறைவனுக்கு நன்றி சொல்லணுமா? இல்லையா?” எனக் கேட்டாள்.

விதி காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்து... அவளை வேரோடு பிடுங்கி இங்கே வந்து ஒதுக்கியபோதும் வாழ்வின் மீது அவளுக்கு இருந்த பற்று, நம்பிக்கை சிலிர்க்க செய்ய... கண்களில் இருந்து கண்ணீர் பெருக.... அதை துடைக்க கூட தோன்றாமல் அவள் இரு கன்னத்தையும் தன்னிருகரங்களால் பற்றி அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து “ நீ சொன்னது சரிதான். ஆனா அவர் உன்னை படைத்தது குறையோடு அல்ல, அவரைப்போல் அவராகவே படைத்திருக்கிறார். சிவனும் சரி, ஹரி சரி ஆணாகவும், பெண்ணாகவும் தங்களை உருவகித்து காட்டவில்லையா? அதே போல் தான் நீங்களும். இறைவனின் சிறந்த இரு படைப்புகள் ஒன்றில் சங்கமித்து உள்ள நீங்கள் பரிபூரணத்தின் வெளிப்பாடு. அது குறையல்ல” என்று உணர்ச்சி பெருக கூறினார் பவித்ரா.    

அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக, உணர்ச்சி வசப்பட்டு  “பதினைந்து வயதிலிருந்து என்னைப்போல் உள்ளவர்களுக்கு உள்ள ஒரே ஒரு ஏக்கம் என்ன தெரியுமா? நட்புடன் கூடிய தோள்தட்டல், அன்புடன் கூடிய தோளணைப்பு தான். இவை இரண்டும் எனக்கு கொடுத்தது நீங்கள் அக்கா. இதற்கு மேல் என்ன வரம் வேண்டும்” என்று கூறியபடி விம்மினாள்.

அவளின் ஏக்கத்தில் நெஞ்சுருகி போய் எல்லோரும் கண்ணீர் உகுக்க... சூழ்நிலையை மாற்றும் பொருட்டு அவளின் தோழி வனஜா “சரிடீ. உன் ஆளைப் பத்தி சொல்லு. எப்படி அவர் மேல் லவ் வந்துச்சுன்னு சொல்லு” என்று முயன்று வரவழைத்த உற்சாகத்துடன் வினவினாள்.

மற்றவர்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டு ஆவலாக பார்க்க, ரஞ்சி தன் கண்களை துடைத்து விட்டு தன் மனம் கவர்ந்தவனை பற்றி சிந்திக்கலானாள். எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக டிரெயினில் வந்து போகும் அவனை பலர் பார்த்திருப்பார்களா என்றே தெரியாது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருக்கும் அவன் அவளை ஈர்த்தான். ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததனாலோ என்னமோ அவள் சகமனிதர்களை பார்க்கும் பார்வை ஆழமானதாக இருந்தது.

“தனக்குள்ளே திருப்தி கொண்டிருக்கும் ஒரு மனிதனின் சாந்தம், தெளிவு, மலர்ச்சி அவரிடம் இருந்தது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதை போல், ஏன் அதை நிருபிப்பது போல்..... ஒருநாள் யதார்த்தமாக நான் அவர் அருகில் நிற்க, கூட்டத்தில் தெரியாமல் இடித்து விட்டேன். திரும்பி பார்த்தவர் ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்துவிட்டு பழையபடி திரும்பி கொண்டார். ஆனால் அவர் திரும்புவதற்கு முன்னால் அவர் கண்களில் லேசான இரக்கம், வலி இருந்தது.” என்று கண்கள் அன்றைய நினைவில் கனிய, காதலில் முகம் விகசிக்க சொல்லி முடித்தாள்.

அவள் கூறியது முழுமையாக புரியாத காவியா “இதுக்கும் நீ அவரை காதலிக்கிறதுக்கும் என்னடி சம்பந்தம். அவர் ஒண்ணும் ஸ்பெஷலா எதுவும் செய்யலையே” என்றாள் குழப்பமாக. மற்றவர்கள் வாய்திறந்து கேட்காவிட்டாலும் அவர்களும் காவியாவின் கூற்றை ஆமோதித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.