(Reading time: 9 - 17 minutes)

தீண்டல் தொடரும் - M தேவி

This is entry #73 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

love

காலை ஒன்பது மணி..... பரபரப்பாக எல்லோரும் அலுவலகத்திற்கு போய் கொண்டிருக்கும் நேரம்.

சாதாரண சமயமானால், பலகடைகள் அப்பொழுதுதான் மெல்ல மெல்ல இயக்கத்திற்கு வரும். ஆனால் இப்பொழுது தீபாவளி சமயமாகையால் எல்லா கடைகளும் சீக்கிரமாகவே திறந்திருக்க... அங்கு வேலை செய்பவர்கள் எறும்புகளை போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அது சென்னைவாசிகள் என்ன! தமிழ்நாட்டினரே பிரபலமாக அறிந்திருந்த தி.நகர் பகுதி.

மாம்பழம் ரயில் நிலையம் அருகில், நூற்றுக்கணக்கான கடைகளில் ஒன்று தான் ப்லோரன்ஸ் மகளிர் தையலகம். இரண்டு மணிநேரத்தில் தைத்து தரப்படும்(எல்லா கடைகளிலும் இருப்பது போல்) என்ற அடைமொழியை உறுதிமொழியாக ஏற்று சொன்ன நேரத்திற்குள் அழகாக தைத்து தருவது அவர்களின் சிறப்பு. அதை வைத்து நடத்துபவர் தான் பவித்ரா, நாற்பது வயது நிரம்பிய குடும்பத்தலைவி. அவரின் கீழ் பதினைந்து பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்களுள் ஒருத்தி தான் நமது நாயகி மனோரஞ்சிதம். எல்லோராலும் ரஞ்சி என்று அழைக்கப்படுபவள்.

காலை உணவை உண்டுவிட்டு வந்த பவித்ரா, தன்னிடம் வேலை செய்யும் லக்ஷ்மியிடம் “ரஞ்சி வந்துட்டாளா” என்றார்.

“இல்லைக்கா இன்னும் வரலை”

“இன்னும் வரலையா?. இப்பவே ஒன்பதேகால் ஆகுது. வரவர இவ அலும்பு தாங்க முடியலை. ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் நல்லா கொடுத்தா தான் சரி வருவா” என பொரிந்தார்.

நல்லவிதமாகவே பழகினாலும், தனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம் என்ன சொல்ல எனத்தெரியாமல் லக்ஷ்மி விழிக்க, அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டாள். “ஏண்டி ஏன் மூஞ்சியில என்ன ஒட்டியிருக்குன்னு அப்படி உத்து உத்து பார்க்குற” என்று.

“ஒண்ணுமில்லைக்கா” என்றபடி ஓடிச்சென்று காலியாய் இருந்த ஒரு மிஷினில் அமர்ந்து அதனுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தாள்.(முதலாளியுடன் மல்லுக்கட்டுவதை விட இது சிறந்தது என நினைத்து)

ங்கே அத்தனை அனல் பறப்பதற்கும் காரணமான ரஞ்சி சந்தோசமாக “எந்தன் உயிரே எந்தன் உயிரே... கண்கள் முழுதும் உந்தன் கனவே” எனப்பாடி கொண்டே கடையினுள் நுழைந்தாள்.

அதுவரை சத்தமாக ஓடிக்கொண்டிருந்த எல்லா தையல் மிஷின்களும் நிற்க... ஒரு நிமிடம் அங்கே புயலுக்கு பின் உள்ளதை போல் அமைதி தோன்றியது. (ஒருவேளை புயலுக்கு முன் உள்ளதோ!)   

எல்லோரையும் பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கியவள், தன் உயிர்தோழி வனஜாவிடம் என்ன என்று ஜாடையால் கேட்க அவளும் ஜாடையால் பவித்ராவை காட்டினாள்.

“ஓ! அவ்வளவு தானா” என்று நினைத்தவள், கோபாவேசமாக இருக்கும் தன் முதலாளியை, தனக்கு பெரிய சகோதரியை போல் உள்ள பவித்ராவை பார்த்து, மலர்ந்து புன்னகைத்து “குட் மோர்னிங் அக்கா” என்றாள்.

அதுவரை கோபமாக இருந்தவள் தன்னை பார்த்து குழந்தையென மலர்ந்து சிரிக்கும் ரஞ்சியிடம் கோபத்தை காட்டமுடியாமல், ஆனால் உடனே தழைந்து போகவும் மனமில்லாமல் “என்ன இளிப்பு, வந்ததே லேட்டு. போ போய் வேலையை பார்” என்று அதட்டினார். ஆனால் அவரது அதட்டலில் தான் துளிக்கூட காரம் இல்லை. என்ன நடக்குமோ என ஆவலுடன் எதிர்பார்த்தவர்களும் “ச்சு... எப்பவும் போல தானா” என்று அலுத்து, தங்கள் வேலையை தொடர ஆரம்பித்தனர்.

பவித்ராவிற்கு தெரியும் மற்றவர்களின் எதிர்பார்ப்பு, ஏன் அவர்களின் பொறாமை நிறைந்த புலம்பல்கள் கூட, ஆனால் ரஞ்சியின் மீது தான் கோபமே வர மாட்டேன் என்கிறதே..அப்படியே வந்தாலும் அவள் முகம் பார்த்ததும் வெளிச்சத்தை கண்ட இருளைப் போல் அது மறைந்து விடுகிறது.

“எப்படி வரும். என்றோ ஒருநாள் தான் காட்டிய துளியளவு அன்பிற்கு இன்று வரை தனக்கு கவசமாய், விசுவாசமாய் இருக்கும் அவளின் மீது அன்பு சுரக்காமல் எப்படிபோகும். தன்னிடம் அவளுக்கு இருக்கும் நெருக்கத்தை பார்த்து பொறாமை கொள்ளும் மற்றபெண்கள் கூட அவளின் விகற்பமற்ற அன்பில், ஒரு வினாடி...தவறு செய்தோமே என்று வெட்கி அவளிடம் அன்பை பொழிய ஆரம்பிப்பர். அது தான் ரஞ்சி” என்று எண்ணியபடி ரிசப்ஷனில் அமர்ந்து இதுவரை அளவெடுத்த துணிகளை வெட்ட ஆரம்பித்தார்.

தினொன்று மணியளவில் ஒரு கால்மணிநேரம் இடைவெளி விடுவர். அந்த நேரத்தில் எல்லா பெண்களும் ஓய்வெடுத்தபடி ஊர்வம்பு பேசுவர். அதுவரை ஓடிய மிஷினின் சத்தத்தை விட அவர்களின் சத்தம் அதிகமாக இருக்கும்.

இன்று அவர்கள் எடுத்த டாபிக் ரஞ்சியின் காதல். ஆரம்பித்து வைத்தது   வேறுயாருமல்ல லக்ஷ்மியே தான்.

“ஏண்டி ரஞ்சி! நானும் தினமும் பார்க்கிறேன், உன் ஆளை பார்க்கிறதுக்காக அவர் வர்ற டிரெயின்ல, அதே நேரத்தில் அதே கம்பார்ட்மெண்டில வர்ற. எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற” என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.