(Reading time: 21 - 41 minutes)

வாசவன் தனியாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவன்... அதற்கு இப்போது பணம் தான் தடையாக இருக்கிறது... அந்த சமயத்தில் தான், வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தன் நண்பருக்கு இவன் உதவி தேவையென்று சில காலம் அந்த நண்பருக்கு உதவியாக இருக்கும்படி அனுப்பிவைத்தார்..

இவனின் திறமையைப் பார்த்து, லயாவின் தந்தைக்கு வாசவனை தன் நிறுவனத்திலேயே வைத்துக் கொள்ள ஆசை... அதன்படி வாசவனிடம் பேச்சுக் கொடுத்தபோது... அவனின் குறிக்கோளைப் பற்றி அறிந்தார்... தன் பெண்ணையும் கொடுத்து, புதிதாக வியாபாரம் தொடங்க பணமும் கொடுப்பதாகவும்... மாப்பிள்ளை என்ற உரிமையோடு தன் நிறுவனத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.... தன் பிள்ளை இந்த கம்பெனி பொறுப்பை ஏற்கும் வரையாவது, இந்த கம்பெனியை நிர்வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்...

வாசவனுக்கு பணம் இப்போது அவசியமாக தேவைப்படுவதால் அதற்கு ஒத்துக் கொண்டான்... ஆனால் இப்போது அந்த பெண்ணே வந்து திருமணம் வேண்டாம் என்று சொன்னதும், விருப்பமில்லாத ஒருத்தியை மணக்க அவனுக்கும் விருப்பமில்லை... இருந்தும் அவளின் விருப்பமின்மைக்கு காரணம் கேட்டான்...

அவளும் அவன் இதற்கு சம்மதிப்பான் என்பதால் தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்னாள்... அதெல்லாம் கேட்டவன் பின் அவளுக்கு ஒரு தீர்வு சொன்னான்...

"இப்போ நான் வேண்டாம்னு சொன்னாலும், உங்க சித்தி உன்னை எப்படியோ தள்ளி விட்றதுல தான் குறியா இருப்பாங்க... அப்படி வேற மாப்பிள்ளை வந்தா, அவங்க எல்லோரும் உனக்கு உதவி செய்வாங்களா..?? உங்கப்பாவும் என்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார்னு தான் தோனுது... அதனால ஒன்னு பண்ணா என்ன...??

நீயும் நானும் கல்யாணம் பண்ணிப்போம், அதனால எனக்கு புது வியாபாரம் தொடங்க பணம் கிடைக்கும்... 3 வருஷம் கழிச்சு உன்னோட லவ்வர் வந்ததும் நான் உனக்கு விவாகரத்துக் கொடுத்திட்றேன்... நீயும் உன்னோட காதலனை கல்யாணம் பண்ணிக்கலாம்... நம்ம கல்யாணம் வெறும் ஒரு உடன்படிக்கை தான்... இதுல வேற எந்தவிதத்திலேயும் உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்... இதுக்கு நல்லா யோசிச்சுப் பதில் சொல்லு... இந்த திட்டம் உனக்குப் பிடிக்கலன்னா... நான் உங்க அப்பாக்கிட்ட எனக்கு இதுல விருப்பம் இல்லன்னு சொல்லிட்றேன்..." என்றான்.

இவனும், இவனோட புடலங்கா ஐடியாவும் என்று தான் அப்போது லயாவுக்கு நினைக்க தோன்றியது... அவனிடம் எதுவும் பதில் பேசாமல் வந்துவிட்டாள்... விஸ்வேஷ் போன் செய்தபோதும் வாசவன் பேசியதைக் கூறி, எனக்கு இந்த ஐடியா பிடிக்கல.. அப்பாக்கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுங்கன்னு சொல்லிடப் போறேன்..." என்று கூறினாள்... அவனும் அப்போது சரி என்று சொன்னான்...

பின் இரண்டு நாள் கழித்து போன் செய்தவன், இந்த ப்ளான்க்கு நாம ஏன் ஒத்துக்க கூடாது ஸ்ருதிம்மா.." என்றான்.

"என்ன விஸ்வேஷ் இது... இந்த ஐடியாக்கு ஒத்துக்கிறதா... என்ன உளர்றீங்க..." என்று கேட்டாள் இவள்...

"இல்ல ஸ்ருதிம்மா... உங்க சித்தி 3 வருஷமெல்லாம் எப்படியோ வெய்ட் பண்ணமாட்டாங்க... Mr. வாசவன் சொல்றது போல, வேற மாப்பிள்ளை வந்தா நமக்கு ஹெல்ப் செய்வாங்களா..?? சொல்லு... அதான் இதுக்கு ஒத்துக்கிட்டா என்ன..?? எனக்கென்னவோ வாசவன் தப்பானவரா இருக்க மாட்டார்னு தோனுது..." என்றான்...

"அதுக்கு வாசவனை கல்யாணம் செய்துக்கறதா...?? அதெல்லாம் முடியாது விஸ்வேஷ்... அப்படி சித்தியால தொல்லை வந்தா... வீட்டை விட்டு வெளியே வந்துட்றேன்... எப்படியோ நான் வெளிய வந்தா அவங்களுக்கு சந்தோஷம் தானே... நானும் படிச்சிருக்கேன்... வேலைக்குப் போய் என்னோட தேவைகளை நான் பார்த்துப்பேன்... நீங்க வரவரைக்கும் நான் காத்திருப்பேன் விஸ்வேஷ்.."

"அதெல்லாம் பேச்சுக்கு தான் சரி வரும் ஸ்ருதிம்மா... ஒரு பொண்ணு தனியா இருக்கிறதெல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா...?? உன்னை கஷ்டப்பட வச்சுட்டு, நான் மட்டும் எப்படி இங்க நிம்மதியா இருப்பேன்... இங்கப் பாரு அந்த வாசவன் நம்பர் கொடு... நான் அவர்க்கிட்ட பேசறேன்... திருப்தி இருந்தா இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்..." என்றான்...

விஸ்வேஷின் அன்பான பேச்சை எப்போதும் லயாவால் மீற முடியாது... இதற்கும் மனமில்லாமல் சம்மதித்தாள்... பின் விஸ்வேஷ், வாசவனிடம் பேசிய பின் திருப்தி அடைந்ததும் கல்யாண வேலைகள் நடக்க ஆரம்பித்தது... வாசவனே எளிமையாக திருமணத்தை நடத்தலாம் என்று சொன்னதும்... செலவு மிச்சமாவதால் சித்தியும் இதற்கு தலையாட்டினார்...

என்ன இருந்தும் வாசவன் இவள் கழுத்தில் தாலி கட்டிய போது, விஸ்வேஷ் கையால் இந்த கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று இவள் ஆசைப்பட்டதால், மனம் உறுத்த தான் செய்தது...

இரு படுக்கயைறைகள் கொண்ட வீடை வாடகைக்கு எடுத்தான் வாசவன்... இருந்தும் ஆரம்ப நாட்களில் வேறு வேறு அறைகளில் இருந்தாலும் அவனோடு ஒரே வீட்டில் இருப்பது லயாவிற்கு கஷ்டமாகத்தான் இருந்தது...

ஆனால் நாளாக நாளாக அவர்கள் உறவு முறையில் மாற்றம் வர ஆரம்பித்தது... சித்திக்கு பிடிக்காது என்ற காரணத்தால் தன் வீட்டிற்கு செல்வதை தவிர்த்தாள்... என்ன தான் விஸ்வேஷோடு போனில் பேசினாலும், அவன் இங்கு இல்லாததால் தனிமை தான் இவளை வாட்டியது.... இதுபோல் ஒரு திருமணம் செய்துக் கொண்டதால் இருந்த சில நண்பர்களிம் தொடர்பையும் துண்டித்தாள்...

இதில் இப்போது இவளுக்கென்று இருப்பது வாசவன் மட்டும் தான் என்றானது... தனக்காக சமைத்து அதில் அவனுக்கும் சிறிது கொடுத்தவள், இப்போது அவனுக்காக சமைத்து, தனியாக சாப்பிட கஷ்டமாக இருக்கிறதென்று அவனோடு சேர்ந்து சாப்பிட்டு, என்று நண்பர்கள் என்ற அடுத்த நிலைக்குச் சென்றாள்.

வேலைக்குப் போகப் போகிறேன் என்று அவனிடம் இவள் சொன்னப்போது, உங்க அப்பா ஆஃபிஸ், என்னோட பிஸ்னஸ் எல்லாம் நான் மட்டும் தானே பார்த்துக்கிறேன்... நீ என்னோட ஆஃபிஸ்க்கு வாயேன்... என்று அவளை அழைத்தான்....

மூன்று வருடம் கழித்து விஸ்வேஷோடு சென்று விடுவோமே, இவனது அலுவலகத்தில் எப்படி வேலை செய்வது என்று இவள் யோசித்தபோது... "விஸ்வேஷ் வரவரைக்கும் வேற இடத்துல வேலைக்குப் போவதுப் போல நினைச்சு என்கிட்ட வேலை செய்யேன்..." என்று அவன் சொன்னதும் அதற்கு ஒத்துக் கொண்டாள்...

மொத்தத்தில் இரண்டரை வருடத்தில் இருவரும் ஒரே அறையை பகிர்ந்துக் கொள்வதை தவிர... வசி, லயா என்று செல்லமாக கூப்பிட்டுக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாயினர்... விஸ்வேஷோடும் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருந்தாள்... ஏன் இந்த காலக்கட்டத்தில் வாசவனுக்கும், விஸ்வேஷுக்கும் இடையில் கூட ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.