(Reading time: 17 - 34 minutes)

மூன்று முடிச்சு போட்டு, பெரியவர்களின் ஆசியுடன் அவளை கைப்பிடித்தான் நிவித்ராஜ்….

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, இரவு அவன் இருக்கும் அறைக்குள் நுழைந்த போது பயம் அவளை ஆட்கொண்டது முழுமையாய்…

அவளின் நிலையை அவன் உணர்ந்தானோ என்னவோ,

“சகிர்தஸ்வினி…..” என்றழைத்தான் அவளை…

“ம்ம்….” என சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்…

இருவருமே திருமணத்திற்கு முன் பேசி பழகியிருக்கவில்லை… ஏனெனில் போட்டா பார்த்து பிடித்திருக்கிறது என்று பெற்றவர்களிடம் அவன் கூற, அவள் நிலையும் அதே தான்… பின்னர் உடனடியாக ஒரே மாதத்தில் திருமணத்தையும் நடத்தவேண்டி வர, திருமணத்திற்கு முதல் நாள் தான் அவனும் ஊருக்கு வந்து சேர்ந்தான்…

வந்த நொடியிலிருந்து அவளை ஒருமுறையாவது நேரில் பார்த்து பேசி விட வேண்டுமென்று அவன் எவ்வளவோ முயற்சி செய்தான்… எனினும் ஒன்று கூட நிறைவேறவில்லை…

அவனது நிலையே அப்படி என்றால், அவளது நிலையை கேட்கவா வேண்டும்?...

என்ன சொல்லி ஆரம்பிக்க என்று அவன் திணறிக்கொண்டிருந்த போது, அவளே அதனை செய்தாள்…

“வந்து….. நா…. என….க்கு…..”

அவள் இழுக்க, அவனுக்கு அந்த பேச்சு பிடித்திருந்தது…

“சொல்லும்மா… உனக்கு?...”

“ம்ம்ம்… தூக்கம் வருது… நான் தூங்கலாமா?...”

கையை பிசைந்து கொண்டே, கண்களில் ஒருவித பயத்துடன் அவள் கேட்க, அவன் இதழ்களில் புன்னகை விரிந்தது…

“இதுக்குத்தான் இவ்வளவு தயக்கமா?... நான் உன் கணவன்… எங்கிட்ட நீ எதுன்னாலும் கேட்கலாம் தயங்காம… சரியா?... பயம் எல்லாம் வேண்டாம்… ஏன்னா நீ என் மனைவி….. உனக்கு எங்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு….”

அவன் அந்த உரிமையில் அழுத்தம் கொடுத்து சொல்ல, அவள் மழங்க மழங்க விழித்தபடி நின்றாள்…

“சரிம்மா… நீ தூங்கு…”

அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் என்பதுபோல், அவள் கட்டிலில் படுத்துக்கொள்ள, அவன் அவளையேப் பார்த்திருந்தான்…

றுநாள் விடியலும், பறவைகளின் ஒலியும், அவளை விழிக்க செய்ய, சட்டென எழுந்து கொண்டவள், கட்டிலை விட்டு கீழே இறங்க முயற்சி செய்ய, அப்போது தான் கவனித்தாள் அவனை…

வெறும் தரையில் ஒன்றையுமே விரிக்காமல் படுத்திருந்தான் அவன் கைகளை குறுக்கிக்கொண்டு….

பார்த்ததுமே, மனது உருகிப்போக, அவனின் அருகில் சென்றாள் வேகமாக…

“ஏங்க… எழுந்திருங்க…”

சத்தமாக அவள் அழைக்க, அவனிடம் அசைவு இல்லை…

சட்டென தயங்காது, அவனது தோளில் கைவைத்து

“ஏங்க… எழுந்திருங்க…..” என்றாள் அவள் மீண்டும் அவனை உலுக்கியபடி…

அவளின் ஸ்பரிசம் பட்டு, பட்டென கண் விழித்தவன், அருகில் தெரிந்த அவளது முகத்தினை கண்டு எழுந்து கொண்டான்…

“என்னம்மா?... என்னாச்சு?...”

பதற்றத்தோடு அவன் எழுந்து அமர்ந்து அவளைப் பார்க்க, அவளோ திகைப்பில் மூழ்கினாள் நிஜமாய்…

இதே வேறு ஒருவனாய் இருந்தால், இரவு நடந்து கொண்டதற்கு இந்நேரம் எரிந்து விழுந்திருப்பான்… இல்லையேல் முகமாவது தூக்கி வைத்திருக்கக்கூடும்…

இதில் அவன் எதையுமே செய்யாது இருக்க, அவள் விழிகள் கலங்கியது வேகமாய்…

அவள் விழி நீரைக் கண்டு பதறியவன்,

சட்டென அவளின் கண்ணீர் துடைக்க கரத்தினை உயர்த்த, அவள் பார்வை அந்நேரம் அவனது கரங்களில் விழ, அவன் தன் கைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டான் மேற்கொண்டு எதுவும் செய்யாமல்…

அதைக் கண்டதும் மேலும் அவளுக்கு கண்ணீர் உதயமாக,

“சாரிங்க…. நான்….. நா….”

“எதுக்கும்மா சாரி?... நீ என்ன தப்பு பண்ணின?...”

“இல்ல என்னால தான நீங்க இப்படி வெறும் தரையில……” அவள் விசும்பவே ஆரம்பிக்க,

“ஹே… சகி… இதுக்கா அழற?... நீ பெட்ல படுத்து தூங்கிட்டிருந்த… போர்வை கூட உன் தலையணை மேல தான் இருந்துச்சு… உன்னை எழுப்ப வேண்டாம்னு தான் நான் இங்கேயே படுத்துட்டேன்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.