(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 145 - எதிரும் புதிரும் - சித்திக்

This is entry #145 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி நாட்கள்

எழுத்தாளர் - சித்திக்

Student

ந்த நேரம் நேரம் என்பார்களே அது உண்மைதான் போலும். அதாவது கெட்ட நேரம்! அது போல இந்த நாக்கிலே சனி என்பார்களே அதுவும் நெசம்தான் போலிருக்கு !. இல்லாவிட்டால் அப்படி ஒரு வாக்குறுதியை அசெம்பிளி பிரேயர் ஹாலில் நட்ட நடு செண்டரில் நின்று  ஹெட் மாஸ்டர் சண்முகசுந்தரம் சொல்லியிருப்பாரா? ‘ஏதோ வழக்கம் போல  சூர்யா  பேச்சுபோட்டியில் வென்றானா.. வெற்றிக்கோப்பையை கொண்டு வந்தானா .. பிரேயர் முடிஞ்சதும் மூக்கு கண்ணாடியை மேலே ஏற்றி ஏற்றி  விட்டுக் கொண்டே நாலு வார்த்தை பாராட்டி பேசினோமா.. கூட்டம் கலைந்தபின்னர் யாரும் பார்க்காத சமயத்தில் மூலைமண்குவியலில்  எச்சில் வெற்றிலைச் சாற்றைத் துப்பினோமா' என்று போவதை விட்டுவிட்டு நீட்டி முழக்கி ..

“இந்த மாணவன் சூர்யா  மாநில அளவிலேயே முதல் பரிசு பெற்றதை பாராட்ட வார்த்தைகளே இல்லை அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன்.. சூர்யா உனக்கு என்ன ஆசையோ.. சொல். கண்டிப்பாக தருகிறேன்“ - என்று வாக்கு கொடுத்தது வில்லங்கமாய்ப் போயிற்று.

கொடுத்ததுதான் கொடுத்தார்..அப்புறமாவது சுதாகரித்திருக்க வேண்டாமா? சூர்யா கண்சுருக்கி அவரையே ஆழமாய் பார்ப்பதைப் புரிந்துகொண்டு ‘பய விவகாரமானவன்’னு கண்டு கொண்டிருக்க  வேண்டாமா ? அதெப்படி.. அவர்தான் ரெண்டுவருஷமாக கண் டெஸ்ட் பண்ணிக்காம காலம் தள்ளுகிறவராயிற்றே!  பெயருக்கு ஏற்றபடி சூர்யாவும் அண்ணாந்து வானம் பார்த்து ராகு கேது என எல்லா கிரகங்களையும் ஊடுருவியவனாகச் சிந்தித்து நிற்கவே மனுஷர் கொஞ்சம் பயந்துதான் போய்விட்டார்.

 ‘கடவுளே பய என் பர்ஸுக்கு தகுந்த வீக்கமா சின்னதா.. ஒரு திருக்குறள் புத்தகம் (30 ரூவா)... ஹீரோ பேனா (35 ரூவா).. செஸ் போர்டு.. (55 ரூவா) பாரதியார் கவிதைகள்னு (70 ரூவா) நிறுத்திக்கப்பா. அதுக்குமேலே போகாதே..‘

ஆனால் சூர்யாவோ ராக்கெட் பார்வையை கீழிறக்கி காதில் தேன் வார்த்தான்.

“தலைமை ஆசிரியருக்கு செலவு வைக்கிற எதையுமே கேட்கப்போவதில்லை”

‘அப்பாடா ..பய வயத்திலே பாலை வார்த்தான்.. நீ க்ஷேமமா..  நூறு ரூபா வரைக்கும் வாழணும்..ச்சேசே நூறு வயசு வரைக்கும் வாழணும்‘

“நான் கேட்கிறது ஸ்கூலுக்குள்ளேயே  ஒண்ணுதான். “

‘அதென்னடாப்பா  ஸ்கூலுக்குள்ளேயே ஒண்ணு? இங்க என்ன இருக்கு.. ஒருவேளை நம்ம ரூமிலே இருக்கற அந்த ஹைதர்அலி கால கடிகாரமோ? அந்த புராதன ஐட்டத்தை ரிடையர் நாள்ல நாமல்ல தள்ளிட்டுப்போக நினைச்சிருந்தோம்!’

“நான் கேட்கப்போறேன். கேட்டதுக்கப்பறும் பால் மாறக்கூடாது “

‘என்னது ரிக்சாக்காரன் பாஷைல்லாம் பேசுறான்.. விட்டா நைனாம்பானோ..ஹும் ‘

 “சழி “

வெற்றிலைவாய் ‘சரி'க்கே கடைவாய் ஒழுகி விட்டது. ஆனாலும் குரங்குப்பய விடுவதாய் இல்லை.

“சரஸ்வதி சத்தியமாக? “

‘அது யார் சரஸ்வதி? ஹி.. ஹி புதுசா வந்த கம்ப்யூடர் டீச்சர் பேர் பத்மாவதி ஆச்சே?'

“சொல்லுங்க ஐயா.. கலைமகள் சரஸ்வதி சத்தியமா? ‘'

‘ஓ ..பய கல்விக்கடவுளை சொல்றானா.. என்ன இழவோ ஆகட்டும் இதுக்கு மேலே வாய்க்குள் இதை வைச்சிருக்க முடியாதே‘

‘' சழி சழி சூழ்யா''

“சின்ன ஆசைதான் ஐயா. ஒரு ரெண்டுமணி நேரம் நான் வகுப்பு நடத்தவேண்டும் “

‘அட போக்கத்த பொடியா இதுக்கா இத்தனை பீடிகை.? ரெண்டுமணிநேரம் என்ன  ஒரு நாள் பூரா நடத்திக்கோயேன்.  வேணும்னா  என்னோட மொத்த கணக்கு வகுப்புகளை எடுத்துகொள்ளேன்.. அண்ணைக்கு ரேஷன் கடைல ஆதார்கார்டு பதிவு பண்ண நான் நிம்மதியா போறேனே‘

வெற்றிலைச்சாறை துப்பிவிட்டு சூர்யாவுக்கு சம்மதம் சொல்ல வாயை லேசாக திறக்கையில்.. அந்த ஆயிரத்து சொச்சம் பிள்ளகள்.. இருபது சொச்சம் ஆசிரியர்கள்.. முன்னிலையில் சூர்யா தெளிவாக அட்சரசுத்தமாக சொன்னான்.

“ஐயா நான் வகுப்பு நடத்துவதாகச் சொன்னது மாணவர்களுக்கு அல்ல இங்குள்ள ஆசிரியர்களுக்கு! உங்களுக்கும் சேர்த்துத்தான்.. ‘'

“ஆ “

அதிர்ச்சியில் உதடுகளுக்கு முன்பாக தொண்டை திறந்து கொள்ளவே அத்தனை வெற்றிலை எச்சிலும் அப்படியே உள்ளே பாதி வெளியே மீதியாக இறங்கி வழியவே ஆரம்பித்தது.

அடுத்த கணம் “ஹே ஹே “ என பலத்த கை தட்டல். வேறு யார்? பள்ளிக்கூட பிள்ளைகள்தான். ஆசிரியர்கள் பலரோ.. வகுப்பறைக்குப் பதிலாக கழிப்பறைக்கு வழி தேடினர்.

ஹெச்.எம். அறை அதகளப்பட்டது! நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையாகவே உரு மாறி இருந்தது. கிட்டதட்ட அத்தனை எம்.எல்.ஏக்களும்... மன்னிக்க.. அத்தனை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரை சூழ்ந்து கொண்டு ஆளாளுக்கு கத்த கத்த தலைக்கு இரு கைகளையும் முட்டு கொடுத்து  அமர்ந்திருந்தார் சண்முகசுந்தரம். அவர்பின்னே சுவரோடு சுவராக பல்லி மாதிரி சூர்யா!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.