(Reading time: 13 - 26 minutes)

மேகா...வள வளவென்று பேசும் ஆள் இல்லை..ஆனால் பிடித்தவர்கள், நண்பர்கள் என்றால் சிரிப்புச் சத்தம் வீட்டைப் பிளக்கும். மற்றவர்களிடம் அளந்து பேசும் இயல்பினள். அத்தோடு மனதில் உள்ளதை சட்டென்று வெளிக்காட்ட மாட்டாள். ஆகாஷோ, அதற்கு நேரெதிர்..எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவான்..விவாதிப்பான். இது மேகாவிற்குப் பிடிப்பதில்லை

ஆரம்பத்தில் ஒன்றும் சொல்லாத மேகா, மெல்ல அவனிடம் இப்படி இருக்கக் கூடாது என்று வற்புறுத்த, அவனோ நான் நானாகத்தான் இருப்பேன் என்று கூற, சில சமயங்களில் வாக்குவாதம் சண்டையாக மாறியதுண்டு. இன்னும் சில சமயங்களில், ஸ்வீட்டி அடம் செய்யும் போது, ஆகாஷிற்கு கோபம் கண்மண் தெரியாமல் வரும். அதனால் அவளுக்கு தகப்பனிடம் ஒட்டுதல் குறைந்தும் விட்டது.

இதையெல்லாம் சொல்லிக்காட்டத் தொடங்கினாள் மேகா..

இருவருக்கும் இடையே எட்டு வயது வித்தியாசம் இருப்பதும் அவளுக்கு பெரும் குறையே..ஓரிரு வயது வித்தியாசம் என்றால் ஒத்த ரசனை இருக்கும், எனேர்ஜெடிக் நபராக இருப்பார் என்றெல்லாம் சொல்வாள் ஆகாஷிடமே..

இது அவனுக்கு வருத்தமே என்றாலும், முடிந்த வரையில் தன்னை மாற்றிக்கொள்ள முயன்றும் வருகிறான் என்றாலும் அவளுக்கென்னவோ திருப்தி இல்லை.

இப்படி வருடங்கள் உருண்டோட, இதோ இன்று அடுத்தத் திருமண நாளும் வந்து விட்டது. இரவு விழித்திருந்து வாழ்த்து சொல்லியாகி விட்டது..ஆனால் இன்று முழுதும் அவனோடு கழிக்க விரும்பி, இயலாமையால் வந்த கோபம் மேகாவிற்கு..தான் சொல்லி கணவன் லீவு எடுக்கவில்லை என்ற வருத்தம்.

யோசித்துக் கொண்டிருக்கையிலே காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறக்க, அங்கே சுகா நின்று கொண்டிருந்தாள்.

“ஹே சுகா... வாட் அ சர்ப்ரைஸ்...வா வா எப்படி இருக்க..”

“ திருமண நாள் வாழ்த்துகள் மேகா..என்று கொண்டு வந்த பூங்கொத்தை அவளிடம் கொடுத்தாள் சுகா.

“ ம்ம்..தாங்க் யூ சோ மச் சுகா...நான் எதிர்பார்க்கவே இல்லை நீ வருவேன்னு என்ன திடீர்னு..லாஸ்ட் வீக் நாம பேசும்போது கூட ஒண்ணுமே சொல்லலையே”

“ அது...எல்லாமே திடீர்னு தானே நடக்குது...அதான் கிளம்பி வந்திட்டேன்”

“ என்னடி குரல் டல் அடிக்குது”

“எல்லாம் அப்புறம் சொல்றேன்..வீட்டுக்கு வந்தவளுக்கு ஒரு வாய் தண்ணி கூட குடுக்க மாட்டியாடி”

“ஹய்யோ..சாரி டி..வா ..வந்து சாப்பாடே சாப்பிடு”

“ஹம்மாடி...நானே பயங்கர பசில தான் வந்தேன்..எங்க நீ சாப்பிட சொல்ல மாட்டியோன்னு நினைச்சு ஒரு நிமிஷம் பயந்திட்டேன் என சுகா கலாய்க்க, மேகா அவளை அடிக்க கையை ஓங்கி பின் அவள் தலையில் ஒரு குட்டு வைத்தவள் சாப்பாடை எடுத்து வைத்துக்கொண்டே  “நீ இன்னும் மாறவே இல்ல சுகா..உனக்கு வாழ்க்கை எந்த மாற்றத்தையுமே கொடுக்கல..படிக்கும்போது எப்படி இருந்தியோ அப்படியே இருக்க “ என்று சொன்னாள்

“என்ன அப்படி ஒரு பெருமூச்சு..உனக்கு மட்டும் என்ன குறை..நீயும் அப்படியே தானே இருக்க சுதந்திரமா” வாயில் திணித்த உணவோடு கேட்டாள்.

“ஆமா..பெரிய சுதந்திரம்..உனக்குத் தெரியாது சுகா..நான் நினைச்ச மாதிரி வாழ்க்கை எனக்கு அமையலை..எப்பவும் ஒரு விரக்தில இருக்கற மாதிரியே இருக்கு தெரியுமா?

“என்ன சொல்ற நீ.. அழகான குழந்தை..அன்பான புருஷன் ..எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை..அப்புறம் என்னடி சலிப்பு உனக்கு”

கேள்வி கேட்ட சுகாவிடம் அதுநாள் வரை அடக்கி வைத்திருந்த தன் மன உணர்வுகளை மளமளவென்று கொட்டத் தொடங்கினாள் மேகா.

அமைதியாகக் கேட்ட சுகா எதுவும் சொல்லாமல் இருக்கவே, “ஏய் சுகா..என்னடி நான் சொன்னதுக்கு எதுவுமே சொல்ல மாட்டேங்கற”

“என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கறன்னு சொல்லு...அதையே சொல்றேன்” என்ற சுகா, தட்டை வழித்துச் சாப்பிட்டு எழுந்தாள்

அவள் பதிலில் திகைத்த மேகா,”எ..என்னடி இப்படி சொல்ற”

“வேறே என்ன சொல்ல சொல்லற..ம்ம்ம் வேணும்னா பசிச்சு வந்த வயித்துக்கு ருசியா சாப்பாடு போட்ட..செமையா இருந்ததுச்சுன்னு வேணும்னா சொல்லலாம்”

“அடியே..நீயெல்லாம் ஒரு பிரெண்டா..யாருகிட்டயும் சொல்லாம மருகிகிட்டு இருந்த நான் உன்கிட்ட போய் சொன்னேன் பாரு..என்னை சொல்லணும்”

சாவகாசமாய் சோபாவில் அமர்ந்த சுகா, “இங்க பாரு மேகா, நீ நான் சொன்னா அத அப்படியே ஏத்துக்கற டைப்பா சொல்லு..உன்னைப் பொறுத்த வரைக்கும், நீ செய்யறது சொல்லறது தான் சரின்னு நினைப்ப..ஆனா என்ன யாராச்சும் அட்வைஸ் பண்ணினா சும்மானாச்சும் கேட்டுக்கிட்டு, நீ நினைக்கறபடி தான் நடப்ப..அப்புறம் நான் எதுக்கு ஏதாவது சொல்லணும்..அப்புறம் பல்ப் வாங்கணும்..சொல்லு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.