(Reading time: 7 - 13 minutes)

"அடடே நம்ம சாந்தியா , நீ எப்போ இந்த ஊருக்கு வந்தே? எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலியே" என்று அப்போதுதான் அவளை புதிதாக பார்ப்பது போல நடித்தாள்.

அவள் நடிப்பு நன்றாகவே பலித்தது.

"நா அன்னிக்கி கூட உங்களை கடை தெருவுல பாத்தேன்கா... நீதான் கவனிக்கலை போல” , என்றவள் மேற்கொண்டு அந்த ஊருக்கு பிழைப்புக்காக வந்தது பற்றியும் வங்கி கணக்கு பற்றி விசாரிக்க வந்து வேலை முடிந்து கிளம்புவது பற்றியும் கூறினாள். 

 “நீ ஆபீஸ் போகலியாக்கா , இந்த நேரத்துல இங்கே வரிசைல நிக்கறே”, என்றாள்.

"என்ன செய்யறது, இன்னிக்கு பத்து மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு, போயாகணும். பணமும் அவசரமா தேவைப்படுது அதான் வந்தேன், ஆனா இப்போ  பணம் எடுக்க முடியுமான்னு தெரியலை , யாராவது இங்கே வரிசையில் நின்னு எனக்கு உதவி பண்ணா நல்லாயிருக்கும்”. என்றபடி குறிப்பாக சாந்தியைப் பார்த்தள் நீலிமா.".

அவளது நோக்கம் சாந்திக்கு புரிந்தது. 

“நீ ஆபீஸ் போக்கா , பாஸ் புக்க குடு, இந்த க்யூ நகர்றதுக்கு மூணு மணி நேரம் ஆகும் ,  நான் வரிசைல நிக்கறேன், கிட்டே போனதும் உனக்கு போன் பண்றேன் , நீ வந்து வாங்கிக்க”. என்றாள்

"அதானே எனக்காக நீ இதுகூட செய்யமாட்டியா என்ன, அப்புறம் எதுக்கு சொந்தம் பந்தம்னு இருக்கறது”,     என்றவள் பாஸ்புக்கை அவள் கையில் கொடுக்காமல் “, க்யூ கிட்ட வந்ததும் சொல்லு, நா வந்துடறேன். " என்றபடி கிளம்பினாள் .

நினைத்தபடியே மீட்டிங் முடிந்து ஐந்து நிமிடத்தில் சாந்தியிடமிருந்து போன் வந்தது.

அடித்து பிடித்து ஓடி பணம் எடுத்து திரும்பிய போது உள்ளூர ஒரு கவலை, இப்போ இவள் கடன் கேட்டல் என்ன செய்வது?

இவள் பயந்தது போல் அப்படி   எதுவும் சாந்தி கேட்கவில்லை.

இவ்வளோ நேரம் க்யூவில் நின்றதுக்கு அவளுக்கு எதாவது கொடுக்க வேண்டுமா? இல்லை, இல்லை, இப்போது கொடுத்தால் அதுவே பழக்கமாயிடும், என்று நினைத்தபடி

"சரிம்மா, அப்போ நா கிளம்பறேன் , டைம் கிடைச்சா ஒரு தடவை வீட்டுக்கு வா" , என்றவள் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை, வீட்டு முகவரியையும் கொடுக்கவில்லை.

சாந்திக்கு உள்ளூர ஒரு தொய்வு, குறைந்த பட்சம் தன் குழந்தையை பற்றியாவது அக்கா விசாரிப்பாள் என்று எதிர்பார்த்தாள் ஆனால் அதற்கு கூட அக்காவுக்கு நேரமில்லை.

அன்று கடைத்தெருவில் பார்த்துவிட்டு வேண்டுமென்றுதான் வண்டியை திருப்பிக் கொண்டு போயிருக்கிறாள். பணம் அதிகமானால் மனங்கள் சுருங்கி விடுமா?

இந்த அரைநாள் வேலைக்குப் போயிருந்தால் வயிற்றுப் பாட்டுக்கு  பணமாவது கிடைத்திருக்கும். நம்மைக் போல இல்லாதவர்கள் வீட்டு சகவாசம் வேண்டாமென்றால் நம் உதவியை மட்டும் இவர்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று நினைத்தவளுக்கு சிறு வயதில் படித்த பாத்திரமறிந்து பிச்சையிடு என்ற முதுமொழிதான் நினைவுக்கு வந்தது.

உதவியைக் கூட அதன் மதிப்பறிந்தவர்களுக்குத்தான் செய்யவேண்டும் என்று எண்ணியபடி தன் செல்லில் இருந்த நீலிமாவின் எண்ணை ஒரு தீர்மானத்துடன் அழித்தாள் சாந்தி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.