(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 23 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் செந்தில்க்காக மட்டுமில்லாமல் பொதுவாகவே ஒரே இடத்தில பேசிக் கொண்டு இருந்தால் அடுத்தவர் கவனம் தங்கள் மேல் விழும் என்று தான் மறுநாள் ப்ரீ ஹவரில் மலரிடம் பேச எண்ணினான்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் காலேஜ் சென்ற இருவரும் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

எப்பொழுதும் மலர் வரும் நேரத்தில் சரியாக அவனும் வருமாறு பார்த்துக் கொள்வான் செழியன். சற்று முன்னதாகவே வரும் பழக்கம் உள்ளவர்கள் இருவரும்.

ஆனால் இன்று இன்னும் முன்னதாகவே வந்து விட்டான் செழியன். வேலை ஒரு காரணம் என்றாலும், அனாவசியமான கவன ஈர்ப்புகளை தவிர்க்கலாமே என்ற எண்ணமும் இருந்தது.

அவர்கள் இருவரின் ப்ரீ ஹவரில் செழியன் ஏற்கனவே ஆபீஸ் ரூம் சென்று விட்டான். அங்கே சென்று பிரின்சிபால் சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டு காலேஜ் காம்பஸ் கோவிலுக்கு செல்ல எண்ணினான்.

இவன் ஆபீஸ் ரூமில் இருக்க, மலரும் ஸ்டாப் ரூமிலிருந்து கிளம்பினாள். அப்போது வளர்மதி மேடம்

“மலர் , எங்கே கிளம்பிட்ட?”

“நம்ம காம்பஸ் கோவிலுக்கு மேம்..”

“இந்த டைம்லே போற..?”

“வழக்கமா காலையில் போய் அட்டெண்டன்ஸ் போட்டு விடுவேன்.. இன்றைக்கு கொஞ்சம் லேட்.. அதான் இப்போ ப்ரீ ஹவர் தானே .. என்று கிளம்பினேன்..”

“சரி.. வா .. நானும் வருகிறேன்..” என, திடுக்கிட்டாள் மலர்.

“உங்களுக்கும் ப்ரீ ஹவர் தானா மேம்..”

“இல்லை பா.. இன்னிக்கு நம்ம செந்தில் லாஸ்ட் பீரியட் எடுத்த சப்ஜெக்ட் கண்டின்யு பண்ணி முடிச்சுடறேன் அப்படின்னு கேட்டார்.. நானும் ஒரளவு போர்ஷன் கவர் பண்ணிட்டேன்.. அதான் சரின்னு சொல்லிட்டு ஸ்டாப் ரூம் வந்துட்டேன்.. சரி வா போகலாம்.. ”

“ஆஹா.. நமக்கு நேரமே சரி இல்லை போலவே ..” என்று மனதினுள் எண்ணியபடி வளர்மதியோடு சேர்ந்து மலரும் சென்றாள்.

ஏற்கனவே காலையில் அவள் ஆச்சியிடம் நன்றாக மாட்டி இருந்தாள் மலர்.

முதல் நாள் செழியன் சொன்னதில் இருந்து அவளும் மற்றவர் பார்வையில் பட வேண்டாம் என்று எண்ணியவளாக பார்கிங் சந்திப்பை தவிர்க்கும் விதமாக அன்று வீட்டில் இருந்து நிதனாமாக கிளம்பி கொண்டு இருந்தாள்.

அவளின் நிதானத்தை பார்த்த ஆச்சி

“இந்தா மலரு... நிதமும் சுடுதண்ணிய கால்ல கொட்டினவ கணக்கா காலேசுக்கு பறப்ப.. இன்னைக்க இத்தாம் நேரமா சீவி சிங்கரிசுட்டு இருக்கியே.. என்ன சோலி?” என்று வினவ ,

அவரின் கிடுக்கி பிடியில் இருந்து தப்பிச்சேன் பிழைச்சேண்டா சாமி.. ன்னுட்டு இங்கே வந்தா, இங்கயும் வளர்மதியிடம் மாட்டிக் கொண்டோமே.. என்று உஷாரானாள் மலர். 

இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கி விட்டு வெளியே வரும்போது, செழியனும் ஆபீஸ் ரூமிலிருந்து வந்தான்.

நேராக கோவிலை நோக்கி வந்தவன், மலரோடு வளர்மதியும் இருக்கவே சடன் பிரேக் போட்டு நின்று விட்டான்.

மலர் முதலில் அவனை பார்த்தாலும் பார்க்காத மாதிரி நின்றாள். வளர்மதி அவனை பார்த்து அருகில் செல்ல, மலரும் தொடர்ந்தாள்.

“என்ன செழியன் இந்த பக்கம்..?”

“அததான் நான் கேட்க நினைச்சேன்.. ? என்ன இந்த நேரத்தில் இங்க வந்துருக்கீங்க.. அதுவும் மலர் மேடமோடு..?”

வளர்மதி செந்தில் கதையை சொல்லிவிட்டு , மலர் இங்கே வர எண்ணியதையும் அவளோடு தானும் சேர்ந்து கொண்டதையும் விலா வாரியாக சொல்லி முடித்தார்.

அதை கேட்ட செழியன் “செந்தில்.. நீ தெரிஞ்சு செய்யறியா? தெரியாம செய்யரியான்னு தெரியல.. ஆனா என்னை வச்சு செய்யற... அது மட்டும் நல்லா தெரியுது.. “

என்று மனதுக்குள் புலம்பினான்..

இதற்குள் வளர்மதி “நான் கேட்டதுக்கு பதில் சொல்லலியே செழியன் “ என

“ஸ்டாப் ரூம் தானே.. வாங்க நடந்துட்டே பேசலாம்” என்றவனாக நடையை தொடர்ந்தான்.

“பிரின்சிபால் சார் பார்க்கணும்.. காலையில் நான் வரும்போது ஆபீஸ் ரூமில் யாரும் வரல.. அதான் இப்போ என்னோட ப்ரீ ஹவரில் வந்து பார்க்க வந்தேன்.. சார் இன்னும் சீட்க்கு வரல.. எப்போ வருவாங்கன்னு கேட்டுட்டு வெளியில் வரும்போது உங்களை பார்த்தேன்.. அப்படியே நின்னுட்டேன்..”  என்று ரீல் சுத்தினான்..

அவன் சுத்தும் ரீலை பார்த்து மலர் நமுட்டு சிரிப்பு சிரித்தாள். அவள் சிரித்தது வெளியில் தெரியவில்லை என்றாலும் அவளின் கண்கள் மலர்ந்து அதை காட்டிக் கொடுத்தது.

செழியன் மலரை செல்லமாக முறைத்தான்.. கை விரல் உயர்த்துவது போல் பத்திரம் காட்டினான். மலரும் பதிலுக்கு முறைத்து விட்டு திரும்பி விட்டாள்.

இந்த நாடகத்தை கவனிக்காத வளர்மதி “எதுக்கு பிரின்சிபால் பார்க்க போன செழியன்? “ என்று கேட்கும்போதே கண்டு பிடித்தவராக “ஒஹ்.. பொங்கலுக்கு ஒரு வாரம் ஊருக்கு போவியே. அதுக்கு லீவ் கேட்கவா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.