(Reading time: 9 - 18 minutes)

"சொல்லுப்பா. அந்த பொண்ணு பத்தி நீ என்ன நினைக்குற?"

"அவளை பத்தி நான் எப்படிப்பா சொல்ல முடியும்? அந்த பொண்ணை நான் சின்ன வயசுல பாத்தது"

"இரண்டு நாளைக்கு முன்ன அந்த பொண்ணோட போட்டோவை மேகலாவுக்கு கம்ப்யூட்டரில அனுப்பியிருந்தாங்களே. ஏன்மா வசந்துக்கு சுபலட்சுமி போட்டோ காட்டலையா?"

வசந்த் அதிர்ச்சியோடு மேகலாவை முறைத்தான். அவனது பார்வையை சமாளிக்க முடியாமல் நாராயணனை பார்த்தாள் மேகலா.

"அது வந்துப்பா.. வேலை பளுவுல நான் மறந்துட்டேன்"

"என்ன பொண்ணும்மா நீ. முக்கியமான விஷயத்தை எல்லாம் மறந்துடுறே"

"அப்பா நான் இப்போ இருக்குற நிலைமையில கல்யாணம் செஞ்சிக்க முடியாது"

"அவசரம் இல்லை. நிதானமா யோசி. முடிவு இப்போ சொல்லிட்டா கல்யாணம் எப்போ வேணும்னாலும் செஞ்சிக்கலாம்"

"என்னால எதுவும் சொல்ல முடியாதுப்பா"

நாராயணன் வேதனையடைந்தார்.

அதைப் புரிந்துகொண்ட வசந்த், "எனக்கு நேரம் வேணும்பா. ஆனா ஒண்ணு, என் கல்யாணம் நீங்க முடிவு பண்ணதா தான் இருக்கும்" என்றான்.

வசந்த் கூறிய பதில் நாராயணனுக்கு சற்று நிம்மதியைத் தந்தது. "சரிப்பா, இது உன்னுடைய வாழ்க்கை. நீ தான் முடிவு செய்யணும்" என்று கூறிய நாராயணன் வசந்தை சில நொடிகள் நோக்கினார்.

"அப்பா நமக்கு நேரமாகிடுச்சு" என்றாள் மேகலா.

"நாங்க கிளம்புறோம்பா நீ உடம்பை பாத்துக்க"

"சரிப்பா, நல்லபடியா போயிட்டு வாங்க"

நாராயணன் அங்கிருந்து சென்றார்.

"அக்கா, நீங்க இந்தியா போறது எனக்கு பொண்ணு பாக்குறதுக்கு தானா?" வசந்த் சீறினான்.

"இன்னும் எதுவும் முடிவு பண்ணலைடா"

"என் வாழ்க்கைக்கு முடிவு எடுக்குற அதிகாரம் எனக்கு மட்டும் தான் இருக்கு"

"சரி சரி உன்னை மீறி நாங்க எதுவும் செய்ய போறது இல்லை. நாங்க போயிட்டு வரோம்"

"சரி"

"மாமா, அமேலியா அக்காவை பாத்தா நான் அவங்கள மிஸ் பண்ணுவேன்னு சொல்லு"

"கண்டிப்பா சொல்லுறேன் நிலா. நீ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா" என்று அவள் கன்னங்களை கிள்ளினான். 

"போயிட்டு வரேன் மாமா" என்று அவன் கன்னத்தில் முத்தத்தைப் பதித்தாள்.

மேகலா, நிலாவை அழைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடினாள். அவர்கள் செல்வதை சில நொடிகள் நோக்கிய வசந்த் அனல் மூச்சை விட்டெறிந்து ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றான். எதிரே வரும் வாகனம் கூட சரியாக புலப்படாத வகையில் சாலையே இருண்டு கிடந்தது. 

சாலையில் மற்ற வாகனங்கள் மெதுவாக சென்றாலும் வசந்தின் கார் மட்டும் வேகமாய் சென்றது. வசந்த் கார் செலுத்தும் விதத்தை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் கடும் சொற்களால் வசைபாடினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வசந்த் காரின் வேகத்தை மேலும் அதிகரித்து சென்றான்.

கல்யாணம் என்றவுடன் கொந்தளித்த மனம் இன்னும் அடங்கியபாடில்லை. 'மனுஷனை சாதிக்க விட மாட்டாங்க. அவன் இலட்சியத்தை எப்படி அழிக்கலாம்னு திட்டம் போட்டு கெடுப்பாங்க.' டென்ஷன் தங்க முடியாமல் கார் ஸ்டியரிங்கை ஓங்கி அடித்தான். அப்படியும் அவன் மனம் சாந்தி அடையவில்லை. 

தன் தந்தை திருமணம் என்றவுடன் அடுத்த நொடி அவன் நினைவுகள் அமேலியாவை நோக்கி பாய்ந்ததை எண்ணி ஆச்சர்யமடைந்தான் வசந்த். அமேலியாவின் முகம் மனக்கண் முன்னால் தோன்றியவுடன் அவன் மனம் அவனையுமறியாமல் சாந்தி அடைந்தது.

மேலியா நீண்ட நேரமாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் விழிகள், முன் தினம் வசந்த் சென்ற காரின் திசையையே பார்த்துக்கொண்டிருந்தன. மேகலா காரில் வந்து தன்னை அழைத்துச் சென்று விடமாட்டாளா என அவள் மனம் ஏங்கியது.

இரவு முழுவதும் அமேலியா விழித்துக்கொண்டே இருந்தாள். அவளால் தூங்க முடியவில்லை. உள்ளம் சொல்லமுடியா துயரத்தில் ஆட் கொண்டதைப் போல் தவித்துக்கொண்டிருந்தது. 

ஜெஸிகாவுக்கு தான் இந்த வீட்டில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவள் தன் மேல் எரிந்து விழுவதில் இருந்து நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. தேவையில்லாமல் எல்லோருக்கும் தான் பாரமாக இருப்பது அமேலியாவிற்கு தன் மேலேயே வெறுப்பாய் இருந்தது.

முந்தின நாள் இரவு, பிரிட்ஜில் பதப்படுத்திய உணவை வேண்டா வெறுப்பாக ஜெஸிகா கொடுத்தவுடன்.அதை சாப்பிட பிடிக்காமல் அப்படியே வைத்தது விட்டதால் அமேலியாவிற்கு பசியெடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.