தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 03 - வத்ஸலா
மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானம் நிரம்பி வழிந்தது. நம் மண்ணிலேயே நடைபெறும் இறுதி போட்டி!!! பகலிரவு ஆட்டம்!!! ரசிகர்களிடையே கட்டுக்கடங்காத உற்சாகம்.
ஹரிஷ் விளையாடும் முதல் உலக கோப்பை இறுதி போட்டி இது. தேசிய கீதம் இசைத்து முடிந்திருக்க, கண்ணில் பட்ட இடமெல்லாம் ரசிகர்கள் தேசிய கொடியை அசைத்துக்கொண்டிருக்க வார்த்தையில் சொல்லிவிட முடியாத பெருமிதமும், அவனை திக்குமுக்காட செய்துக்கொண்டிருக்க பார்வை மட்டும் அவளுக்காகவே பரபரத்துக்கொண்டிருந்தது.
ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் முதலிரண்டு ஆட்டக்கார்கள் களமிறங்கி இருந்தனர். ரசிகர்களின் உற்சாக ஆராவரங்களுக்கிடையில் முதல் பந்து பாய்ந்து சென்று எல்லைக்கோட்டை தொட, நான்கு ரன்கள் கிடைத்திருந்தன இந்தியாவுக்கு. உற்சாக கை தட்டல் இவனிடத்தில்.
வரவில்லையா என்னவள்??? தேடித்தேடி அலுத்தன அவன் கண்கள்.
அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை. பொதுவாகவே இது போன்ற ஆட்ட நேரங்களில் இவர்கள் கைப்பேசியை உபயோகிக்க கூடாது.
‘ஒரு வேளை என்னை அழைத்திருப்பாளோ???’. ‘அவள் உள்ளே வருவதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமோ??? அவளது உண்மையான நிலை அறியாமல் அவனுக்குள்ளே ஏதேதோ யோசனைகள்.
அன்று இவனது டிக்கெட்டுகள் அவளுக்கு கிடைத்தபோது…. இவள் போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்த போது அவளது அறைக்குள் வந்து அவளை சீண்டியது வேறு யாருமல்ல.......
அவளை பள்ளிக்கு கைப்பிடித்து அழைத்து சென்ற, அவள் தலையில் குட்டி குட்டி அவளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த கைகளுக்கு சொந்தக்காரன். அவளது நிறை குறைகள் எல்லாம் அறிந்தவன். இவர்கள் இருவரும் சண்டையிட்டுக்கொள்ளாத நாளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
‘இப்படி ஒரு அண்ணன் கிடைச்சதுக்கு நீ கொடுத்து வெச்சிருக்கணும் ‘ என பல முறை அவள் தோழிகளால் புகழப்பட்டவன். அவளது பெரியப்பா மகன் ஷங்கர்!!! அவளது அண்ணன்!!! அவளை விட ஐந்து வயது மூத்தவன்.
பொதுவாகவே அவனிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்வாள் அனுராதா. அவனுக்கு தெரியாமல் இவள் அடி மனதில் தேங்கி நிற்கும் ஒரே ரகசியம் ஹரிஷ்!!!
அன்று இரவு
உணவு மேஜையில் எல்லாரும் அமர்ந்திருக்க, அங்கே ஒரு அசாதாரண நிசப்தம் நிலவுவது போல் தோன்றியது அனுராதாவுக்கு. தலை நிமிர்த்தாமல் தட்டை பார்த்து உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தவளை உள் புகுந்து குலுக்கி நிமிர்த்தியது அந்த குரல்.
‘அந்த டிக்கெட்ஸ் எல்லாம் என்கிட்டே வந்தாகணும்..’ சற்றே கடினமாக வந்தது தொனி. இவளது திரு திரு பார்வையை கூர்மையாக ஊடுருவின அந்த விழிகள்.
‘உன்கிட்டதான் சொல்றேன் அனு...’ குரல் இன்னமும் இறுக
‘பெரியம்மா.. அது... வந்து.....’
‘எதுவும் வர வேண்டாம். சாப்பிட்டு முடிச்சிட்டு அந்த டிக்கெட்ஸ் எல்லாம் என்கிட்டே கொண்டு வந்து குடு.’ முடித்துவிட்டார் அவர்.
என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறியவளின் பார்வை நேராக ஷங்கரை தொட்டது. எதுவுமே நடவாதது போல் தலை குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ஷங்கர்.
இவன் மூலம்தான் பெரியம்மாவை இந்த செய்தி எட்டியதா என்ன??? பொதுவாக அவன் அப்படிப்பட்டவன் இல்லையே???
அவளது பெரியம்மா!!! லோசனா!!! ஒரு பெரிய வங்கியின் ரீஜனல் மேனேஜர். அவரது பேச்சிலும், நடையிலும் செயல்களிலும் ஒரு ஆளுமை எப்போதுமே மிளிரும். கோபம் அவரது பிறவிக்குணம்.
எப்போதும் இந்த வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அவரது முடிவே இறுதி முடிவாக இருக்கும். அதை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முயன்றதில்லை என்றே சொல்ல வேண்டும். வீட்டுக்கு வந்த மருமகள் கீதாவுமே அவருக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கிறாள்.
அதே நேரத்தில் சிறு வயதிலேயே இவர்களிடம் தஞ்சமடைந்த அனுராதாவை இன்று வரை எந்த நிலையிலும் தனது கணவரின் தம்பி மகள் என்ற ஒரு எண்ணத்துடன் இந்த குடும்பத்தை விட்டு பிரித்து பார்த்ததில்லைதான் அவர்.. இந்த வீட்டு பெண்ணாகவே சகல உரிமைகளுடன் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறாள் இவள்.
‘தனது அறைக்கு வந்து டிக்கெட்டுகளை கையிலெடுத்தாள் அனுராதா.
‘நீ என் கூட இருக்கணும்... ஒவ்வொரு நிமிஷமும் உன்னை எதிர்ப்பார்ப்பேன்’ அவனது கடிதத்தின் வரிகள் நினைவிலாடின.
இது என்ன மாயமோ இதுவரை போகலாமா வேண்டாமா என இருந்த குழப்பம் விலகி, கண்டிப்பாய் போக வேண்டுமென தவிக்க ஆரம்பித்தது உள்ளம்.
கண்டிப்பாக பெரியம்மா, பெரியப்பாவிடம் இந்த விஷயத்தை மறைத்துவிட்டு அவர்களை ஏமாற்றிவிட்டு செல்ல வேண்டுமென்றெல்லாம் இவள் இது வரை எண்ணியதில்லை.