(Reading time: 16 - 31 minutes)

மைதானத்துக்குள் இறங்கும் அந்த படிக்கட்டின் வழியே அவன் விறுவிறுவென இறங்கிக்கொண்டிருக்க, மனம் நிரம்பிய சந்தோஷத்துடனும், அவன் ஜெயிக்க வேண்டுமென்ற வேண்டுதலுடனும் அவனை பார்த்திருந்தாள் அவள்.. ஆனால் அவன் நினைத்தது போல் தொலைக்காட்சியில் இல்லை.  

அதே மும்பை மைதானத்தில் அவன் இறங்கி வரும் அந்த படிக்கட்டின் அருகிலிருந்த அந்த நாற்காலியிலிருந்து கண்கள் மின்ன மின்ன அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

அவனது மனம் முழுவதும் நிறைய கணக்குகள். பொதுவாக அவனது திட்டமிடல்கள் எப்போதும் சிறிய இலக்கை நோக்கியே இருக்கும். அடுத்த ஐந்து ஓவர்களில் அவன் என்ன செய்ய வேண்டுமென்பதை மனதிற்குள் படம் போல் ஒட்டிக்கொண்டு நடந்துக்கொண்டிருந்தவன் சரியாக அவளை கடந்த நேரத்தில் ஏதோ ஒரு உந்துதலில் அவள் பக்கம் திரும்பினான். மூச்சிழந்து போனான் ஒரு நொடி.

‘அ...னு...ம்மா’ தலை முதல் கால் வரை சந்தோஷ ரத்தம் பாய உச்சரித்தான் அவன்,

‘வந்துவிட்டாளா என்னவள்??? நம்பவே முடியவில்லை அவனால். மனம் கொள்ளா மகிழ்ச்சியில்  திக்குமுக்கடிப்போனான் .அவன். அவனால் இப்போது அங்கே நின்றுவிடவும் முடியாது. படியில் இறங்கிக்கொண்டே ஒரு சந்தோஷ புன்னகையை அவளுக்கு பரிசளித்தான். ஹெல்மெட்டின் வழியே பளபளத்த அவனது விழிகள் அவளுக்கு ஏதேதோ சொல்ல  அவளுக்கு அவன்மீதிருந்த  கொஞ்ச நஞ்ச கோபமும் எங்கேயோ ஓடிப்போனது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் பலநூறு செய்திகளை பரிமாரிக்கொண்டுவிட்ட நிறைவு இருவருக்கும். நேசம் தளும்பும் உள்ளத்துடன் அவள் அவனுக்கு கட்டை விரல் உயர்த்திக்காட்ட உற்சாகத்தின் மொத்த உருவமாய் ஆட்டக்களத்தை நோக்கி ஓடினான் ஹரிஷ்.

க்ரீசுக்குள் வந்து நின்றான் அவன். அடுத்து ஸ்பின் பௌலர்களின் பந்து வீச்சு இருக்கும். பவர் ப்ளே முடிந்திருக்க ஃபீல்டர்களின் இடங்கள் மாறி இருக்க, மடமடவென விழிகளால் இடைவெளிகளை அளவெடுத்துக்கொண்டான்.

சின்னதாய் ஒரு ஆசை பிறந்தது. ’எனக்காக, நான் அழைத்தற்காக இத்தனை தூரம் வந்தவளை நான் வரவேற்க வேண்டாமா??? அவளுக்கு நான் ஏதாவது பரிசளிக்க வேண்டாமா???

‘என்னை பெற்றவள் கூட வைக்க தயங்கிய நம்பிக்கையை என் மீது வைத்த தேவதைக்கு இப்போது நான் அடிக்கும் ஒரு சிக்ஸரை விட வேறென்ன சிறந்த பரிசு இருந்துவிட முடியும்??? ஆனந்தத்தில் துள்ள மாட்டாளா???

உள்ளே வந்து நின்றவுடன் அதை முயல்வது அத்தனை புத்திசாலித்தனம் இல்லைதான். அதுவும் ஸ்பின் பௌலர்களின் பந்து வீச்சில் அதிக கவனம் எப்போதும் அவசியம். இருப்பினும் ஏனோ செய்ய வேண்டுமென தோன்றியது.

ஓடி வந்தார் அந்த தென்ஆப்ரிக்க பந்து வீச்சாளர். அவனது முழுக்கவனமும் அவரது மணிக்கட்டிலும், பந்தின் மீதும்!!! அந்த பந்து திரும்புவதற்குள் இவன் அதை எதிர்க்கொண்டு விட்டால் அதில் ஆறு ரன்களை அள்ளுவது எளிது. க்ரீஸை விட்டு சற்றே முன்னால் வந்து பேட்டின் மத்தியில் பந்தை எதிர்க்கொண்டு

‘டேக் இட் அனும்மா.’ சொல்லியபடியே அவன் பலமாய் அடிக்க அது பறந்து சென்று விழுந்தது சிக்ஸராக!!!

அரங்கமே அதிர ரசிகர்களிடம் மறுபடியும் உற்சாகம். எல்லா ரசிகர்களுடன் அவனது ரசிகையாக துள்ளி குதித்துகொண்டிருந்தாள் அவள். அவனிருக்குமிடத்திலிருந்து  நிச்சியமாய் அவனால் அவளை பார்க்க முடியாதுதான்.

‘என்ன செய்துக்கொண்டிருப்பாள் அவள்??? எப்படி மகிழ்வாள் பார்க்க வேண்டுமே’ இவனுள்ளம் தவிக்க சொல்லி வைத்தார் போல் கேமரா அவள் பக்கம் வர அங்கே இருந்த பெரிய டி.வியில் அவள் முகம்.

மனம் கொள்ளா உற்சாகத்தில் குத்திதவள் டி.வி.யில் தன் முகம் தெரிவதை உணர்ந்து அழகாய் வெட்கி, சிவந்து அமர

‘வாவ் ...’ அவளை ரசித்தபடியே அடுத்த பந்திற்கு தயாரானான் ஹரிஷ்.

அதே நேரத்தில் அங்கே அவனது வீட்டில் டிவியின் முன்னால் அமர்ந்திருந்தனர் அனைவரும். பதற்றம் என்பது இல்லாத, இலக்கை நோக்கி அழகாய் நகரும் நேர்த்தியான ஆட்டத்தை துவக்கி இருந்தான் ஹரிஷ்.

வர்ணனையாளர்கள், விமர்சகர்கள் என எல்லார் கவனமும் இப்போது ஹரிஷின் மீது.

‘இந்திய கிரிக்கெட்டின் புது நம்பிக்கை நட்சத்திரமாக வருவான் இவன்’ என .வர்ணனையாளர்கள் ஆருடம் கூறிக்கொண்டிருக்க

‘இவன் எப்படி கரை ஏற போறான்னு தெரியலையேங்க. இவன் படிப்பும் பாதியிலேயே நின்னு போச்சு. அதோட சேர்த்து இப்போ மானம், மரியாதை எல்லாம் போச்சு. தப்பு பண்ணிட்டேனோ???. நான் தான் அவனை சரியா வளர்க்கலையோ??? செல்லம் கொடுத்து கெடுத்திட்டேனோ???’ கடைசி காலத்தில் அவரது மனைவி அவரிடம் புலம்பிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

அப்போதைய நிகழ்வுகள் அவனது அம்மாவை அந்த அளவுக்கு புரட்டி இருந்தன.. மனைவியின் மரணத்துக்கு பிறகு மொத்தமாய் தளர்ந்திருந்தார் அவன் தந்தை.

அப்பாவின் தொழில்களை கவனிக்க இவன் தயாராக இல்லை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவனது  தன்மானம் இடம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.