(Reading time: 32 - 64 minutes)

25. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ந்த விடியற்காலை பொழுதில் பட்டாசுகள் வெடிக்கும் சப்தத்தில் தீபாவளி களை கட்டியிருந்தது.. வெளியில் கேட்கும் வெடி சத்ததிற்கு ஈடாக வீட்டிலும் பலகாரம் செய்வதில் வாணி மும்முரமாக ஈடுபடிருந்தார்….

ஒருக் காலத்தில் நாம வாழற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கு.. யாருக்காக வாழறோம் என்று சிந்தித்தவர் அவர், ஆனால் இன்று கங்காவை தன் மகளாகவே பாவித்து, அவளுக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்..

தலையில் ஈரத் துணியோடு குளியலறையில் இருந்து வெளியே வந்த கங்கா, பரபரப்புடன் சமயலறையில் இருந்த வாணியை பார்த்தாள்.. “ஏதாச்சும் உதவி செய்யனுமா வாணிம்மா..” என்றுக் கேட்டதற்கு,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… உனக்கு நான் எடுத்துட்டு வந்த புது புடவையை கட்டு..” என்று உத்தரவு பிறப்பித்தார்..

யமுனாவிற்கும் வாணிக்கும் தீபாவளிக்காக புடவை எடுத்தவள், அவளுக்காக வாங்காமல் வந்திருந்தாள்.. வாணி கேட்டதற்கு, “இப்போ எனக்கெதுக்கு புது புடவை, ஏற்கனவே இருக்கும் புடவையே போதும் என்று சொல்லிவிட்டாள், பின் வாணி தான் வீட்டு செலவுக்காக கங்கா கொடுத்த பணத்தில் மிச்சம்பிடித்து, அவளுக்கு ஒரு புடவை வாங்கி வந்து கொடுத்தார். அதை தான் இப்போது கட்டி வரச் சொன்னார்.

உள்ளே அறையில் சென்று புடவையை கட்டியவள், அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்… மனம் முழுக்க வாணியை பற்றியே நினைவுகளே ஓடியது..  வாணி தன்னோடு இருப்பதை, தன் அன்னையே உடனிருப்பதை போல் உணர்ந்தாள்… ஆரம்பக் காலங்களில் வாணியை அவளுடன் இருக்கச் சொல்லி துஷ்யந்த் சொன்னப்போது அவளுக்கு கோபம் வந்தது… தன்னை துஷ்யந்த் அவன் கண் பார்வையிலேயே வைத்திருக்க நினைத்திருக்கிறானோ..?? என்ற மனதில் உதித்த கேள்வியே அவளுக்கு கோபத்தை வரவழைத்தது..

ஆனால் வாணியிடம் எதுவும் மறுத்து சொல்ல முடியாத காரணத்தால், அமைதியாகி விட்டாள்… இன்றோ தாய், மகளாக இருவரும் மாறிப் போன அதிசயத்தை கண்டு வியந்தாள்…

இரண்டு நாட்களாகவே இவளுக்கு என்னென்ன பலகாரங்கள் வேண்டுமென்று கேட்டு அதையெல்லாம் வாணி செய்துக் கொண்டிருந்தார்… அவளது அன்னையும் அப்படித்தான்… அவளுக்கும் யமுனாவிற்கும் என்னென்னெ பலகாரங்கள் பிடிக்கும் என்றுக் கேட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே அதை செய்ய ஆரம்பித்து விடுவார்..

கங்காவை விட யமுனா தான் பலகாரங்கள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவாள்… என்னென்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பட்டியலிட்டு விடுவாள்.. இவளும் யமுனாவிற்கு வேண்டியதையே செய்ய சொல்லிவிடுவாள்… அவர்கள் அன்னையும் அதையே செய்வார்…

தங்களின் அன்னை, தந்தை இல்லையென்றாலும் ஒரு தாயாக  வாணி இப்போது அந்த குறையை கங்காவுடன் இருந்து தீர்த்து வைக்கிறார்...ஆனால் யமுனாவுடன் யார் இருக்கிறார்… அடிக்கடி அவள் யோசிப்பது அதைதான்… தன் தங்கையின் கோபத்தை தீர்க்க முடியவில்லையென்றாலும், அவளை ஏதாவது ஒருவிதத்தில் சமாதானப்படுத்தி தன்னுடன் வைத்துக் கொள்வது ஒன்றும் பெரிய காரியமில்லை… இருந்தும் தன்னுடன் அவள் இருக்க வேண்டாமென்று தான் கங்கா தன் தங்கையை விட்டு ஒதுங்கியே இருக்கிறாள்…

வாணி போல் உடன் இல்லையென்றாலும், மதர் ஜெர்மன் யமுனாவிற்கு ஆதரவாக, ஆறுதலாக, ஒரு வழிகாட்டியாக இருப்பதால் தான் கங்காவால் யமுனாவை நினைத்து கவலைக் கொள்ளாமல் இருக்க முடிகிறது… இதில் நர்மதாவின் ஆழமான நட்பும் யமுனாவிற்கு கிடைத்திருக்கிறதே, அதனால் தான் தைரியமாக இருக்கிறாள்…

பண்டிகைக்கு என்னென்ன பலகாரங்கள் செய்ய வேண்டுமென்று வாணி கேட்டால், எல்லாம் யமுனாவிற்கு பிடித்ததையே கங்கா செய்ய சொல்வாள்.. செய்ததை மதர் ஜெர்மனிடம் எடுத்துக் கொண்டு போய் அவளே கொடுத்துவிட்டும் வருவாள்… ஆனால் முன்பெல்லாம் அதை யமுனா சாப்பிட மறுத்துவிடுவாள் என்று அவர் சொல்லிவிடுவார்… “நான் ஏன் கொடுத்ததா சொல்றீங்க.. வேற யாராச்சும் எடுத்துட்டு வந்து கொடுத்ததா சொல்லலாம்ல்ல..” என்றுக் கேட்டால்,

“மதர் ஜெர்மனோ, “ ஏன் இப்படி யமுனாவை விட்டு விலகியே இருக்க நினைக்கிற… நீ அவளை விட்டு தள்ளியிருந்தாலும், அவளைப் பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருக்கன்னு அவளுக்கு தெரியனும்.. அதனால நீ கொடுத்ததா தான் நான் சொல்லுவேன்..” என்று சொல்லிவிடுவார்.

ஆனால் இப்போதோ முன்பு போல் இல்லை, கொடுப்பது இவள் தான் என்று தெரிந்தும், யமுனா அதை வாங்கி சாப்பிடுவதும், இவள் வாங்கிக் கொடுக்கும் உடைகளை இப்போதெல்லாம் அணிந்துக் கொள்கிறாள் என்றும் மதர் சொல்வதை நினைத்து அவள் மனதுக்குள் மகிழ்ந்து கொள்வாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.