(Reading time: 32 - 64 minutes)

காலையில் அவன் எழுந்து கொள்வதற்காக வைத்திருந்த அலாரம் சத்தம் கேட்டு திடுக்கிட்டவள், அப்போது தான் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.. அதற்குள் அவனது கை தானாக அலாரத்தை அணைத்தது, கண் விழித்தவனின் பார்வைக்கு நர்மதா தெரிந்தாள்..

“குட்மார்னிங் மது.. ரெண்டு நாள் உன்னோட முகத்தை பார்க்காதது என்னமோ ரொம்ப நாள் பார்க்காத மாதிரி இருக்கு..” என்றப்படி எழுந்து அமர்ந்தான்..

கண்களில் வியப்போடு, “என்ன சொல்றீங்க??” என்றுக் கேட்டாள்..

“அங்க வீட்ல மார்னிங் ஜாகிங் போகறதுக்காக உனக்கு முன்னாடியே எழுந்துடுவேன்… உன்னோட முகத்துல தான் கொஞ்ச நாளா விழிக்கிறேன்..  இங்க ரெண்டு நாளா நான் விழிக்கிறதுக்குள்ள நீ எந்திரிச்சிட்றியே.. அதான் உன் முகத்துல விழிக்க முடியல..” என்று அவன் சொன்னதும்,

முகச்சிவப்பை மறைக்க முடியாமல், “,ஆமாம் நீங்க ஏன் ரெண்டு நாளா ஜாகிங் போல..” என்றாள்..

“நான் வழக்கமா போற இடம் இங்கிருந்து தூரம்.. அதான் இங்கேயே சின்ன சின்ன எக்ஸர்சைஸ் செஞ்சுக்கிறேன்..”

“சரி… அம்மா காஃபி போட்ருக்காங்க, நீங்க போய் குடிச்சிட்டு குளிங்க.. நான் சாரி கட்டனும்..”

“ஓ ஓகே..” என்றவன் அறையிலிருந்து வெளியே சென்றான்..

சில நிமிடங்களுக்குப் பிறகு தங்கள் வீட்டில் எடுத்துக் கொடுத்த பட்டு புடவையை கட்டிக் கொண்டு அவள் வெளியே வர, காபி அருந்திக் கொண்டிருந்த செல்வா,ஒரு ஆவலோடு அவளைப் பார்த்தவன், பின் கண்களில் ஏமாற்றத்தை காட்டினான்.. அதை அவளும் கவனித்தாள்..

பின் அவனுக்காக குளியலறையில் வெந்நீர் விளாவி, எண்ணெய், சீயக்காய் எல்லாம் எடுத்து வைத்தவள், குளிபதற்காக வந்தவனிடம்,

“ஏன் இந்த புடவையில நான் நல்லா இல்லையா??” என்றுக் கேட்டாள்.

“புடவை உனக்கு எப்பவுமே அழகு தான் மது.. ஆனா அன்னைக்கு ஷாப்பிங் போனப்போ வாங்கின புடவையை கட்டுவன்னு நினைச்சேன்.. நீ பட்டுப் புடவையில வந்ததும் கொஞ்சம் ஏமாற்றமா ஆயிடுச்சு..”

“இது அம்மாவும் அப்பாவும் நம்ம தலை தீபாவளிக்காக எடுத்துக் கொடுத்த புடவை, இதை தான் இன்னைக்கு கட்டனும்.. இல்லன்னா அம்மா, அப்பா வருத்தப்படுவாங்க.. உங்களுக்கும் அவங்க எடுத்துக் கொடுத்த வேஷ்டி சட்டையை தான் எடுத்து வச்சிருக்கேன்.. இன்னைக்கு அதை தான் நீங்க போடனும்..”

“ஓ அப்படியா?? சரி எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. சரி நான் குளிச்சிட்டு வரேன்..” என்று குளியலறைக்குள் புகுந்தான்..

வீட்டில் பூஜை முடித்து அனைவரும் சாப்பிட்டதும், “அத்தை, மாமா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் புதுப்படத்துக்கு நமக்கெல்லாம் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்… நாம எல்லோரும் போலாம்.. மார்னிங் ஷோவே பார்த்துட்டு வந்துட்டா, ஈவ்னிங் பட்டாசு வெடிக்கலாம்..” என செல்வா அனைவரையும் சினிமாக்கு அழைத்தான்..

“அய்யோ நாங்கல்லாம் எதுக்கு மாப்பிள்ளை.. நீங்களும் நர்மதாவும் மட்டும் போய்ட்டு வாங்க” என்று மல்லிகா கூற,

“அத்தை.. நானும் மதுவும் இப்படி அடிக்கடி எங்காச்சும் வெளிய போகத் தான் போறோம்..  இன்னிக்கு ஒரு நாள் நாமல்லாம் ஜாலியா வெளியே போலாமே” என்றான் பதிலுக்கு,

“எங்களுக்கென்ன சினிமா பார்க்குற வயசா.. அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை.. “ என்று குமாராசாமி மறுக்க, அவன் பிடிவாதமாக இருவரையும் சம்மதிக்க வைத்தான்.

“ரிஷப்.. அத்தையும், விஜியம்மாவும் கூட வந்தா நல்லா இருக்குமில்ல..”

“விஜி அத்தைக்கு இப்போ தான் கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு.. சினிமாக்கெல்லாம் அவங்கள அலைய வைக்க வேண்டாம்.. அம்மாவும் அத்தைக்கு துணையா இருக்கட்டும், இன்னொரு நாள் எல்லோரும் போகறமாதிரி ப்ளான் செய்வோம்..”

“சரி அப்போ நான் ரெடியாகிட்டு வரேன்.. “ என்றவள் அறைக்குள் சென்று, சில நிமிடங்களுக்கு பிறகு, “அம்மா அம்மா என்று மல்லிகாவை அழைக்க,

மல்லிகா எங்கோ வெளியே சென்றதால், என்னவென்று கேட்கலாம் என்று உள்ளே நுழைந்தவனின் கண்கள் வியப்பைக் காட்டியது..

அவன் எடுத்துக் கொடுத்த அந்த புடவையை கட்டியப்படி நர்மதா நின்றிருந்தாள்..

“அத்தை வெளிய போயிருக்காங்க.. எதுக்கு கூப்பிட்ட மது..”

“அது பின்னாடி ப்ளவுஸ்ல நாட் கட்டனும்.. எனக்கு சரியா வரல.. அதான்..”

“நான் கட்டிவிட்டா உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..” என்றுக் கேட்டதும் என்ன சொல்ல என்று புரியாமல் சரி என்று தலையாட்டினாள்..

கண்ணாடி முன் அவள் நின்றிருக்க, அவள் பின்னால் நின்றிருந்தவன், அவளுக்கு நாட் கட்டிவிட்டப்படியே, “ரொம்ப தேங்க்ஸ் மது.. எனக்காக இந்த புடவையை கட்டினதுக்கு” என்றான்..

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ், சினிமாக்கு போற ப்ளான் உங்களோடது தானே, அதான் இந்த சாரி கட்டினேன்.. இப்படி ஒரு சான்ஸ் நீங்க தானே ஏற்படுத்திக் கொடுத்தீங்க..” என்றாள்.

அவள் பின்னாலேயே நின்றிருந்தவன், அவள் தோளில் முகம் புதைத்தான், அவள் காதில் மெல்லிய குரலில் “இருந்தாலும் தேங்க்ஸ், இந்த புடவையில நீ எப்படி இருக்க தெரியுமா?? பட்டுப் புடவை ஒரு அழகுன்னா, இது இன்னொரு அழகு, மொத்தத்தில புடவையில நீ செம அழகு..” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவன் இவளது தோளில் முகம் புதைக்கும் போதே அவன் கன்னம் இவள் கன்னத்தோடு உரச ஆரம்பித்ததும் இன்ப அவஸ்தைக்கு உள்ளானவள், அவள் முத்தமிட்டதும் வேறொரு உலகத்திற்கு சென்றாள்.. அவர்கள் இருவரும் இந்த உலகை மறந்து மோனநிலையில் நின்றிருக்க, மல்லிகா “நர்மதா..” என்று அழைத்த சத்ததில் மனமின்றி விலகினார்கள்.

பின் திரைப்படம் பார்த்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், மாலை ஆனதும் பட்டாசு வெடிக்க தயாரானார்கள்.

“மது.. நீ பயமில்லாம பட்டாசு வெடிப்பியா??” என்று செல்வாக் கேட்டதற்கு,

“ம்ம் வெடிப்பேனே..” என்று அவள் தலையாட்ட, நர்மதாவின் சகோதரன் நந்தா சிரித்தான்..

“எதுக்கு சிரிக்கிற நந்தா..”

“மாமா… அக்காக்கு ராக்கெட் விட்றதுன்னா பயம்.. சின்ன வயசுல அவ விட்ட ராக்கெட், அவ மேலேயே வந்து விழுந்துடுச்சு, அதுல இருந்து ராக்கெட் விடமாட்டா..” என்று சொல்லி சிரித்தான்.

ஆஹா கிடைச்சது ஒரு சான்ஸ் என்று நினைத்த செல்வா.. “ராக்கெட் விட்றதெல்லாம் ஈசி தான் மது…. நீ பயப்படாத, நீ ராக்கெட் விட நான் ஹெல்ப் பண்றேன் என்றவன், அவளை பிடித்தப்படி ராக்கெட் பற்ற வைக்க அழைத்துப் போக, அவளாக வைத்திருந்தாலே அது சீக்கிரம் பறந்திருக்கும்போல, அவன் உதவி செய்கிறேன் என்று அவளுடன் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருக்க,

இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்துக் கொண்ட நந்தா.. தனியாக சென்று மற்ற பட்டாசுகளை வெடிக்க ஆரம்பிக்க, தங்கள் மகளையும் மருமகனையும் இப்படி நெருக்கமாக பார்ப்பது குமாரசாமிக்கும் மல்லிகாவிற்கும் கண்ணுக்கு நிறைவாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.