(Reading time: 32 - 64 minutes)

துஷ்யந்தும் வாணி செய்யும் பலகாரத்தை விரும்பி சாப்பிடுவான்.. யமுனாவிடம் இருந்து கங்காவின் நினைவுகள் அப்படியே துஷ்யந்திடம் தாவியது.. பலகாரம் சாப்பிடுவதற்காகவே தீபாவளி அன்று மாலை இங்கே வீட்டுக்கு வந்துவிடுவான்… கங்காவை பொறுத்த வரை, பலகாரம் சாப்பிடுவது அவனுக்கு ஒரு சாக்கு.. தீபாவளியன்று இவளை காணவே அவன் வருகிறான் என்பது அவளுக்கு தெரியும்,  இருந்தும் அதை உணராதது போலவே அவனிடம் காட்டிக் கொள்வாள்…

அப்படிப்பட்டவன் நல்ல நாள் அதுவுமாக எங்கோ போய் உட்கார்ந்திருப்பதை நினைத்து அவளுக்கு வருத்தமாக இருந்தது… தன் வீட்டு உறுப்பினர்களோடு கூட அவன் பண்டிகையை கொண்டாடதை நினைத்து தன் மீதே அவளுக்கு கோபம் வந்தது… இவளை காண பண்டிகையை அவன் காரணம் காட்டினாலும், வாணி செய்யும் பலகாரங்களை விரும்பி உண்பான்.. எப்படி யமுனா அந்த பலகாரங்களை சாப்பிடும்போது மனம் மகிழ்ந்துப் போவாளோ?? அதே போல் துஷ்யந்த் உரிமையாய் தன் வீட்டில் சாப்பிடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைவாள்… ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள்… ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் அவளை அறியாமலேயே அவனுடன் கொண்டாடியிருக்கிறாள்.. அன்று அவனை பார்ப்பதும், அவனோடு இருக்கும் அந்த நேரங்களும் அவளை பொறுத்தவரையில் கொண்டாட்டம் தானே..?? அதுவும் அவனுடன் கொண்டாடிய அந்த முதல் தீபாவளி.. இப்போதும் அதை மறக்க முடியாது..

தீபாவளிக்கு இரண்டு நாளே இருக்க, அந்த நேரம் அப்பண்டிகையை கங்கா மிகவும் வெறுத்தாள்… அப்பண்டிகை எவ்வளவு முக்கியமான நாளாய் அமைந்திருக்க வேண்டியது. ஒவ்வொருவரும் வாழ்நாளில் அசைபோட்டு பார்க்கும் தருணமல்லவா அத்தினங்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் அந்த நாட்கள் சாபமாய்  தோன்றியது ஏன்?? கிடைக்காத ஒன்றை எதிர்பார்ப்பது தவறு தான், ஆனால் கிடைக்க இருந்து, அது கிடைக்காமல் போனால், அதற்காக வருத்தம் தோன்றாமல் இருக்குமா?? கங்காவின் நிலையும் அப்படித்தான் இருந்தது..

மனதில் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருந்தாள்… இருந்தும் வாணி அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்… அவருக்கு அவளின் மனநிலை நன்றாகவே புரிந்திருந்தது.. ஆனால் ஒன்றும் செய்ய முடியாத சூழலில் இருந்தார்.. ஆனால் அவளின் மனநிலையை மாற்ற எண்ணினார்.

கங்காவிற்கு இளங்கோவின் நட்பு கிடைத்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது.. இருவருக்குள்ளும் புரிதல் இருந்ததால் அப்போதே ஆழமான நட்பாய் அது மாறியிருந்தது.. தீபாவளிக்கு ஊருக்கு செல்வதாக இருந்தவன், இவர்களையும் உடன் அழைத்தான்.. அவன் மட்டும் அழைத்தால், அது ஒரு பேருக்காக அழைப்பது போல் மற்ற இருவருக்கும் தோன்றும் என்பதால், தன் தந்தையிடம் பேசி, அவர்களை ஊருக்கு வரச் சொல்லி சொல்ல சொன்னான்.. அவரும் அப்படியே செய்தார்..

இளங்கோ, அவன் தந்தை இருவரும் அழைத்திருந்தாலும், ஊருக்குப் போகும் எண்ணம் கங்காவுக்கு துளியும் இல்லை… அப்போது அவளிருக்கும் மனநிலைமையில் யாரோடும் இயல்பாக அவள் உறவாட விரும்பவில்லை… அதனால் வர முடியாதென்று இளங்கோவிடம் கூறிவிட்டாள்..

என்னவென்று தெரியவில்லையென்றாலும், எப்போதும் போல் இல்லாமல், கொஞ்சம் அதிகப்படியாகவே கங்கா ஏதோ வருத்தத்தில் இருப்பது போல் இளங்கோவிற்கு தோன்றியதால், அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்க்கட்டும் என்று தான் அவளை ஊருக்கு அழைத்திருந்தான்… அவள் வரவில்லையென்று மறுத்த போது, அவளை அவன் கட்டாயப்படுத்தவில்லை, இருந்தும் “நான் ஊருக்குப் போவதுக்குள்ள உங்களுக்கு வரனும்னு தோனுச்சுன்னா சொல்லு…” என்று சொல்லி வைத்திருந்தான்…

அதனால் தான் வாணி அவளை இளங்கோவின் ஊருக்கு அழைத்துச் செல்ல நினைத்தார்.. “கங்கா இந்த நேரம் உன் மனநிலை எப்படி இருக்கும்னு எனக்கு புரியுதும்மா.. இங்கேயே இருந்தா மனசுக்கு ஒருமாதிரி இருக்கும்.. அதனால நாம இளங்கோ கூட ஊருக்கு போவோம்… இளங்கோ மட்டும் கூப்பிட்டிருந்தா பரவாயில்ல.. அவங்க அப்பாவும் நம்மள கூப்பிட்டிருக்காரு… அதுக்கு மதிப்பு கொடுத்தாவது போகலாமில்ல..

தீபாவளிக்கு இங்க இருந்தா, துஷ்யந்த் தம்பி உன்னை பார்க்க வரும்.. பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்னு சொன்னா, நம்மாள என்ன சொல்ல முடியும்..?? பண்டிகை அதுவுமா, மத்த நேரம் போல வராதீங்கன்னு நீ கோபப்பட முடியாது.. அந்த நேரம் தம்பிய பார்க்கும்போது, உனக்கு இன்னும் வேதனையா தான் இருக்கும்.. அதனால நாம இளங்கோ கூட ஊருக்கு போலாம்” என்று ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை அதே விஷயத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்..

அவளுக்கும் வாணி சொல்வது சரியென்று பட்டது.. தீபாவளியன்று துஷ்யந்தை பார்க்காமல் இருக்கவே நினைத்தாள்.. அதனால் வாணி சொன்னதற்கு சம்மதித்தாள்.. இளங்கோவுடன் இருவரும் ஊருக்குச் சென்றார்கள்..

இளங்கோவின் தந்தை மட்டுமல்ல, இளங்கோவின் அண்ணன், அண்ணி இருவருமே இவர்கள் இருவரையும் நன்றாக உபசரித்தனர்.. யாரோ விருந்தாளிகள் வந்திருப்பது தெரிந்து அக்கம்பக்கத்தவர்கள் வந்துப் பார்த்தாலும், இளங்கோவின் தந்தை பற்றி தெரிந்ததால், யாரும் இவர்களை யார்?? என்ன?? என்று ஆராயவில்லை… அது கங்காவிற்கு கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது.. தீபாவளிக்கு முன்னாள் மாலை ஊருக்கு வந்திருந்தனர்..

மனநிலையில் ஒரு மாற்றம் வேண்டுமென்றே இங்கு வந்திருந்தாலும், கங்காவால் அது முடியவில்லை..  இந்த பண்டிகை முடியும் வரையில் இவளாய் மாற நினைத்தாலும், என்னவென்று தெரியாமல் மனதில் ஏதோ ஒரு பாரம் குடியேறியிருந்தது.. அனைவரும் அவளுடன் கலகலத்துக் கொண்டிருந்தாலும், அவளும் அப்படி இருப்பது போல் காட்டிக் கொண்டிருந்தாலும், அவள் மனம் அந்த இடத்தில் இல்லை..

காலையில் எண்ணெய், சீயக்காய் படைத்தப் பின் தான் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும், கங்காவின் அன்னையோ குழந்தைகளை எழுப்ப வேண்டாமென்று அவரே அந்த சாங்கியத்தை செய்துவிடுவார்.. ஆனால் இளங்கோ வீட்டில் அனைவரையும் எழுப்பிய பின் தான் இளங்கோவின் அன்னை இந்த சாங்கியத்தை செய்வாராம்… இப்போது அவர் இல்லையென்றாலும், இளங்கோவின் தந்தை அதை பின்பற்றுகிறார்… அதை இளங்கோ இவர்களுக்கு விளக்கமாக சொல்லி விடியற்காலையே விழிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு உறங்கச்  சென்றான்.

காலையில் எந்த உற்சாகமுமில்லாமல் தான் அவள் விழித்தாள்.. பூஜை அறையில் இளங்கோவின் அண்ணி எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருக்க, இளங்கோவின் தந்தை பூஜை செய்ய, இவளோடு சேர்ந்து இளங்கோ, அவனின் சகோதரன், வாணி மூவரும் நின்றிருந்தனர்..  கண்கள் மூடி அவள் பிரார்த்தனை செய்யும் போது, வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, வந்திருப்பது யாராய் இருக்கும்?? என்ற அலைப்புறுதலோடு அவள் வாசலைப் பார்க்க, அவள் மனம் இவ்வளவு நேரம் யாரை எதிர்பார்த்ததோ அவன் தான் வந்துக் கொண்டிருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.