(Reading time: 32 - 64 minutes)

துஷ்யந்தை பார்த்ததும், இவன் எங்கே இங்கே? என்ற கேள்வி அவளுக்குள் எழாமல் இல்லை… மனம் அவனை எதிர்பார்த்தாலும், மூளை அவனை சந்திக்காமல் இப்படியே எங்காவது சென்றுவிட சொல்லி அறிக்கை கொடுத்தது… இத்தினம் இவனை  பார்க்க வேண்டாம் என்று தானே, அவள் இவ்வளவு தூரம் வந்தது… இங்கேயும் இவன் எப்படி வந்தான்..?? கேள்வியோடு அவள் வாணியை பார்க்க, அதே கேள்வியை பார்வையிலே தேக்கி வைத்து, அவரும் கங்காவை தான் பார்த்தார்..

இவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றம்  நடைப்பெற்ற அந்த நேரம், இளங்கோ வேகமாக வாசலுக்கு விரைந்து சென்று துஷ்யந்தை வரவேற்றான்… அவனை தொடர்ந்து அவன் குடும்பத்தினரும் வாசலுக்கு சென்றனர்..

“உங்களை ஊருக்கு வரச் சொல்லி கூப்பிடும்போதே, துஷ்யந்தையும் கூப்பிட்டேன் கங்கா.. முடிஞ்சவரை வரப் பார்க்கிறேன் என்று சொன்னார்.. நான் கூட வரமாட்டார்னு நினைச்சேன்… ஆனா திடிர்னு வந்து இப்படி சர்ப்ரைஸ் கொடுக்கிறாரு பார்..” என்று துஷ்யந்தோடு உள்ளே வந்தவன் அவளிடம் கூறினான்..”

இளங்கோவின் குடும்பத்தார் சிறிது நேரம் அவனோடு பேசியப்படி நின்றிருக்க, அவனது பார்வையோ, கங்காவின் மீது நிலைத்திருந்தது… இவன் வருகை அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான்.

 எண்ணெய் சீயக்காய் படைத்ததும் அனைவரையும் குளித்து தயாராகி வரச் சொல்லி இளங்கோவின் தந்தை கூறியதும் ஒவ்வொருவராக கலைந்துச் சென்றனர்.. துஷ்யந்திடம் பேச வேண்டியிருந்ததால் கங்கா அங்கேயே நின்றிருக்க, அதை அறிந்த துஷ்யந்தும் அங்கேயே நின்றிருந்தான்..

“உங்க குடும்பத்தோட பண்டிகையை கொண்டாடுவதை விட்டுட்டு, இங்கே ஏன் வந்தீங்க??” கேள்வியில் அவளின் கோபம் நன்றாகவே வெளிப்பட்டது..

“அப்பா இறந்ததுக்கு அப்புறம் அம்மா எந்த பண்டிகையும் பெருசா கொண்டாடுவதில்லை… நானும் ரெண்டு நாளா ஊர்ல இல்ல.. அங்க இருந்து இந்த ஊர் பக்கமா இருக்கறதால, இங்க வந்தேன்… சென்னைக்கு போகனும்னா மதியம் ஆயிடும் அதான்..”

“உங்க அப்பா இழப்பை மறந்து உங்க அம்மா சந்தோஷமா இருக்கறது உங்கக்கிட்டேயும் உங்க தம்பிக்கிட்டேயும் தான் இருக்கு.. அதை மனசுல வச்சிக்கோங்க..” என்று கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்..

கங்கா குளித்ததும் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த ஒரு புடவையை கட்டிக் கொண்டவள், நேராக இளங்கோவின் அண்ணிக்கு உதவலாம் என்று நினைத்து சமயலறையை நோக்கிச் செல்ல, அதற்குள் இளங்கோவின் தந்தை அழைப்பதாக கூறி வாணி கூப்பிட்டதும் அங்கு சென்றாள்..

இளங்கோவின் தந்தையை தேடி கங்கா சென்ற நேரம் துஷ்யந்தும் அவர் கூப்பிடவே அங்கு வந்தான்..

“இந்தாம்மா… தீபாவளிக்கு உனக்காக வாங்கினேன்..” என்று ஒரு புடவையை எடுத்து கங்காவின் கையில் கொடுத்தவர், அடுத்து ஒரு பையில் இருந்த வேஷ்டி சட்டையை எடுத்து துஷ்யந்த் கையிலும் கொடுத்தார்..

அந்த நேரம் அந்த நிகழ்வை கங்கா என்னவாக உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை… இப்படி ஒரு நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. என்னவோ இளங்கோவின் தந்தை எல்லாமே  அறிந்து செய்வது போல் ஒரு பிரம்மை உருவானது.. கங்காவின் பின்னே வந்த வாணியும் அதைப் பார்த்து ஒருப்பக்கம் ஆனந்தமும், ஒருப்பக்கம் கொஞ்சம் வேதனையும் சேர்ந்த கலவையாக இருந்தார்..

“எதுக்குப்பா இப்போ இதெல்லாம்..” ஒரே சமயத்தில் இரண்டு பேருமே ஒன்றாக அந்த வாக்கியத்தை கூறிவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்…

“முதல் முறையா ரெண்டுப்பேரும் வீட்டுக்கு வந்திருக்கீங்க… அதுவும் பண்டிகை அதுவுமா வந்திருக்கீங்க.. எங்களால முடிஞ்சது உங்களுக்கு வாங்கித் தரனும்னு தோனுச்சு..” என்று அவர் உரைத்ததும், அவரிடம் ஆசி வாங்கும் எண்ணம் மனதில் தோன்ற, “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா..” என்று கங்கா அவரின் பாதத்தை தொடப் போக, அதே நேரம் துஷ்யந்தும் அந்த வாக்கியத்தை சொல்லியப்படி அவரின் இன்னொரு பாதத்தை தொட்டான்.

அடுத்தவர் அதே காரியத்தை செய்வார் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பதை குனிந்தப்படி தலை நிமிர்த்தி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் இருவருமே உணர்ந்தார்கள்.. அடுத்த நொடியே அவனுக்குப் பிறகு தான் ஆசி வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து கங்கா எழுந்திருப்பதற்கு முன்னரே, இருவரின் தலையிலும் கைவைத்து நல்லா இருங்க என்று அவர் ஆசிர்வாதம் வழங்க, கண்களை மூடி அந்த ஆசியை அவள் மனதார ஏற்றாள்.

இறைவனே இப்படித்தான் நடக்க வேண்டுமென முடிவு செய்திருக்கிறார் போல, அவளே அவனை விட்டு ஒதுங்க நினைத்தாலும், அவனுடனே இந்த தீபாவளியை கொண்டாடும் நிலையை உருவாக்கிவிட்டாரே..!! என்று நினைத்து வியந்தாள். இளங்கோவின் தந்தை ஆசிர்வாதம் செய்தது, அவளின் தந்தையே அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்ததை போல உணர்ந்தாள்..

வாணிக்கும் அவர் புத்தாடை வாங்கி வைத்திருந்தார், எனக்கெதுக்கு என்று கேட்டு, பின் மறுக்க முடியாமல் வாணி அதை வாங்கிக் கொண்டார்… பின் அனைவரும் அவர் வாங்கிக் கொடுத்த புத்தாடையை உடுத்தி, இளங்கோ அண்ணி பலகாரங்கள் படைத்து பூஜை செய்ததும், ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர்,  அந்த நாள் முழுதும் கங்காவிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் இருந்தது.. இருந்தும் துஷ்யந்திடம் அதை அவள் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் போல அவனிடம் ஒதுக்கத்தையே காட்டினாள். ஆனால் அவனுடன் பண்டிகையை கொண்டாடியது தான் அவளின் உற்சாகத்திற்கு காரணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.