(Reading time: 32 - 64 minutes)

ன்று மாலையே வாணியும் கங்காவும் சென்னைக்கு செல்ல தயாராயினர், இன்னும் இரண்டு நாள் இருக்க சொல்லி இளங்கோ வீட்டினர் சொல்லியும் கங்கா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.. துஷ்யந்தும் அன்றே கிளம்ப ஏற்கனவே முடிவு செய்திருந்தான்.. இளங்கோ இரண்டு நாட்களுக்குப் பிறகு செல்லலாம் என்று  முடிவு செய்திருந்தான். அவன் வழக்கமும் அதுதான்… ஆனால் கங்கா, வாணியை தனியே ஊருக்கு அனுப்ப மனசில்லாதவனாக, அவர்களுடனே செல்லலாமா?? என்று நினைத்தவன், பின் துஷ்யந்தும் சென்னைக்கே செல்ல இருப்பதால், அவனுடனே அவர்களை அனுப்பலாம் என்று யோசித்தான்..

அந்த முடிவை கங்கா விரும்பமாட்டாள் என்று அவனுக்கு தெரியும், இருந்தும் கேட்டுப்பார்க்கலாம் என்று யோசித்து, பின் கேட்டும்விட்டான்.. கங்காவிற்கு அதில் விருப்பமில்லை தான், இருந்தும் இளங்கோ இவர்களை தனியாக அனுப்ப விரும்பவில்லை என்பதை உணர்ந்திருந்தாள்… அவனும் தங்களுடனே புறப்பட்டுவிடுவான் என்பது தெரிந்தும் இருந்ததால், இளங்கோவின் முடிவுக்கு சரி என்று தலையாட்டினான்.

அனைவரிடமும் விடைப்பெற்ற பின், கங்காவும் வாணியும் பின் இருக்கையில் உட்கார, துஷ்யந்த் காரை ஓட்டினான்… கங்கா மௌனமாக இருக்க, வாணியும் துஷ்யந்தும் பொதுவாக இளங்கோவின் ஊரைப் பற்றி பேசிக் கொண்டு வந்தனர்..  பாதித் தூரம் சென்றதும், வாணி ஏதோ சங்கடத்தில் இருப்பதை உணர்ந்து கங்கா அவரிடம் என்னவென்று விசாரித்தாள்..

கால் மறுத்துப் போனது போல் ஆகிவிட்டது என்று வாணி சொல்லவும், காரை நிறுத்திய துஷ்யந்த்.. “கங்கா.. வாணி அக்கா கொஞ்சம் கால் நீட்டி உட்காரட்டும், இப்படி உட்கார்ந்து வர்றது அவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.. கொஞ்சம் கால் நீட்டி உட்கார்ந்தா, கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவாங்க..” என்று சொல்லியதும், அதை வாணி அவசரமாக மறுத்தார்..

“அச்சோ வேணாம் தம்பி… ஒன்னும் பிரச்சனையில்ல.. நான் இப்படியே வரேன்..”

“இல்ல வாணிம்மா.. இன்னும் நாம போக ரெண்டு மணி நேரமாவது ஆகும்.. அதுவரைக்கும் இப்படியே உட்கார்ந்துக்கிட்டு வருவீங்களா??” கங்கா கேட்க,

“நான் இருக்கேன்ல்லாம் யோசிக்காதீங்க அக்கா.. ரிலாக்ஸா காலை நீட்டி உட்காருங்க.. கங்கா முன்னாடி உட்கார்ந்துக்கட்டும்” என்று துஷ்யந்த் சொன்னான்..

அவன் அருகில் உட்காரனுமா?? என்று சங்கடமாக இருந்தாலும், வாணிக்காக யோசித்தவள், துஷ்யந்த் அருகில் அமர்ந்துக் கொண்டாள்..

சிறிது தூரம் சென்றதும், வாணி கொஞ்சம் கண்ணசர.. வெளியில் வேடிக்கைப் பார்த்தப்படி இருந்த கங்காவிடம் துஷ்யந்த் பேச ஆரம்பித்தான்…

“சாரி கங்கா… நான் இளங்கோ வீட்டுக்கு வரக் கூடாதுன்னு தான் நினைச்சேன்… நான் வந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. இருந்தாலும் என்னால வராமயும் இருக்க முடியல..

நாம சந்திச்சதுக்குப் பிறகு வரும் முதல் தீபாவளி.. இந்த தீபாவளிய உன்கூட கொண்டாடனும்னு நினைச்சேன்.. வீட்டுக்கு வந்தா உனக்கு பிடிக்காது…  அதான் இங்கன்னா நீ ஒன்னும் சொல்லமாட்டேன்னு ஒரு தைரியம்… பண்டிகை அதுவுமா உன்னை சங்கடப்படுத்தவும் விரும்பல.. இந்த நாள் உன்னை பார்க்காம இருக்க முடியல.. நீ எப்பவும் கோபமா திட்ற மாதிரி திட்டிடு.. இப்படி நீ அமைதியா இருக்கறது ஏதோ மாதிரி இருக்கு..”

“நான் எதுக்கு திட்டனும்?? இளங்கோ கூப்பிட்டதால, அவனோட வீட்டுக்கு நீங்க வந்திருக்கீங்க.. இதுல நான் கோபப்பட என்ன இருக்கு..”

“நீ இந்த நாள் கோபப்பட்டாலும் அது எனக்கு பெருசா தெரியாது.. இந்த தீபாவளிக்கு நான் உன்னோட இருந்ததே சந்தோஷம்.. தலை தீபாவளி கொண்டாடின அளவுக்கு சந்தோஷம்..”

“என்னது தலை தீபாவளியா??”

“அது… இது நம்ம சந்திச்சதுக்குப் பிறகு வர முதல் தீபாவளி இல்லையா?? அதான் அப்படி சொன்னேன்..”

“தலை தீபாவளின்னா புதுசா கல்யாணம் ஆன ஜோடிக்கு வர முதல் தீபாவளிய அப்படி சொல்வாங்க… நீங்க அந்த வார்த்தைய எப்படி சொல்லலாம்?? முதல் தீபாவளின்னு சொன்னா போதும்.. பேசற வார்த்தையை யோசிச்சுப் பேசுங்க..

“சாரி… முதல் தீபாவளி போதுமா??” என்று அவன் மன்னிப்புக் கேட்டதும், அதற்கு மேல் அவனோடு பேச விரும்பாமல், அவனிடம் கோபத்தைக் காட்டுவது போல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டவள், அவன் அறியாமல் கண்களில் வரவா என்று காத்திருந்த கண்ணீர் துளியை துடைத்துக் கொண்டாள். அதுமட்டுமில்லாமல் கண்களை மூடியப்படி உறங்கப்போவது போல காட்டிக் கொண்டாள்… துஷ்யந்தும் அதன்பின் அவளிடம் பேச்சுக் கொடுக்காமல் அமைதியாக காரை செலுத்தினான்.

“கங்கா..” வாணியின் குரல் கேட்டு நிகழ்வுக்கு வந்தவள், பின் வாணியை தேடிச் சென்றாள்.. பலகாரங்கள் தயாரானதும் இருவரும் பூஜை முடித்து உணவு உண்டனர்.. அதன்பின் கங்கா தன்னுடைய அறைக்கு வந்து திரும்ப உட்காரவும், அவள் அலைபேசி ஒலித்தது.. யார் அழைப்பது என்று எடுத்துப் பார்க்க, அதில் துஷ்யந்த் பெயரை பார்த்ததும் உடனே அந்த அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ கங்கா..” அவன் குரல் கேட்டதும்,

“நான்தான்.. ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க.. நல்ல நாள் அதுவுமா எங்கேயோ போய் இருக்கீங்க.. என்மேல கோபம்னா அதை வெளிப்படையாவே காட்டுங்க.. அதைவிட்டுட்டு இப்படி குன்னூர்ல போய் உட்கார்ந்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?? நான் உங்களை கட்டாயப்படுத்தினது தப்பு தான், ஆனா நீங்க கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்லன்னா அந்த முடிவை என்கிட்ட நீங்க சொல்லியிருக்கலாம்.. இல்ல நீங்க சொல்லியும் நான்தான் உங்களை கட்டாயப்படுத்தினேன்.. ஆனா கடைசில உங்க விருப்பப்படி தான் முடிவு எடுத்திட்டீங்களே.. அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க..” இத்தனை நாள் மனதில் நினைத்ததையெல்லாம் கொட்டி தீர்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.