(Reading time: 26 - 51 minutes)

18. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ற்றும் எதிர்பாராத மைத்ரீயின் செயலில் அதிர்ந்து உறைந்து நின்றான் ராகுல்.  கை தானாக இடது கன்னத்தை பற்றியிருந்தது.

அவள் விரும்பவது தன்னை தான் என்று தெரிந்ததும், ஆச்சரியத்தில் கண்கள் விரிய தன்னை பார்ப்பாளா? உணர்ச்சி மிகுதியால் தன்னை அணைத்து முத்தமிடுவாளா அல்லது வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க அவனுடைய பார்வையை தவிர்ப்பாளா இல்லை அவன் சொல்வது உண்மைதானா? அன்று காதலை சொன்னது இவன்தானா என்று சந்தேகிப்பாளா? அப்படியே சந்தேகித்தாலும் அதை சுலபமாக சமாளிக்கலாம் என்று ராகுல் யோசித்திருக்க, அவளோ அவனை அறைந்ததோடல்லாமல் அழுது கொண்டிருந்தாள்.

எதற்காக அழுகிறாள் என்று தெரியாத போதும் அவளின் அழுகை அவனுக்கு வலித்தது.

ஒருவேளை அவன் சொன்னது புரியாமல் தான் அழுகிறாளோ என்று தோன்றவும், ‘நான் ஒரு மடைய! எதையும் தெளிவா சொல்லாம அவள் புரிஞ்சக்கனும்னு நினைச்சா எப்படி?’

கைகளை கால்களுக்கு முட்டு கொடுத்து, முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவளின் முன் வந்து மண்டியிட்டு, முகத்தை மறைத்திருந்த அவளின் கைகளை விலக்கினான்.  அழுது சிவந்து தடித்திருந்த இமைகளை மெதுவாக பிரித்துப் பார்த்தவள், பாய்ந்து அவன் கழுத்தை கட்டிகொண்டாள்.  அழுகை மட்டும் குறையாமல் அதிகரித்தது.

அன்றும் ஸ்கேரி ஹௌஸில் தன்னை இப்படி தான் கட்டி கொண்டாள். அன்றானால் பயத்தில் மூழ்கியிருந்தவளுக்கு கிடைத்த துணை, தன்னை காப்பாற்ற வந்தவன் என்று நினைத்திருக்கலாம்.  ஆனால் இன்று என்ன பயம்? வேறெதுவும் இவனிடத்தில் சொல்லாமல் மறுகுகிறாளோ? மனதில் எழுந்த கேள்விகளின் எண்ணிக்கை குன்றளவு ஆனாலும் அவளிடம் கேட்டிட முடியவில்லை.

சற்று நேரம் அவளுடைய முதுகை தடவி கொடுத்தபடி அமைதி காத்தான். படிபடியாக குறைந்து நின்றது அழுகை.

அவனிடமிருந்து விலகியவள், சீறினாள்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடா? அன்னைக்கு என்னோட கண்ணை கட்டிவைச்சு காதலை சொல்லிட்டு மறஞ்சிட்ட.  ஒன்னரை வருஷமா உன்னை நினைச்சுக்கிட்டு நான் பட்டபாடு எப்படியிருந்தது தெரியுமா? நீ ப்ரபோஸ் செய்த உடனே நான் அதை ஏத்துக்கனும்னு நீ நினைச்சிருக்கலாம்.  அப்படி நடக்கலை என்றதும் எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அங்கிருந்து போயிட்ட.  நான் பதில் சொல்லாத வருத்தத்துல நீ இருந்திருக்காலாம்.  அதுக்காக உன்னோட பேர கூட சொல்லாம போயிடுவியா?  எனக்கு உன்னை பிடிச்சிருந்தது ஆனா நீ யாருனே தெரியாம நான் என்ன செய்றது?”

அவன் அனுபவித்த வலியை அவளும் உணர்ந்திருக்கிறாள் என்பதில் நெஞ்சோரத்தில் ஊற்றெடுத்த நிம்மதி மனதின் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்து அவனை குளிர்வித்தது.  அதே நேரம் அவளின் வேதனையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

“காம் டௌன் மையூ! உன்னோட கோபம் எனக்கு புரியுதுடா.... ஆனா வேற வழி இருக்கலை.  ஸ்கேரி ஹௌஸில் நடந்ததை வச்சு என்னை புரிஞ்சுப்பனு நினைச்ச.....அது நடக்கலை.  ஆதர்ஷோட கல்யாணத்துல என்னோட விருப்பத்தை உங்கிட்ட சொன்ன... அதுக்கும் நீ எதுவும் சொல்லாத போது உனக்கு என்னை பிடிக்காமதான் சும்மா இருந்திட்டியோன்னு தோனிச்சு.  நீயில்லாம என்னோட வாழ்க்கைய நினைச்சுக்கூட பார்க்க முடியல.  ஸோ உன்னோட மனசை எப்படி மாத்தலாம்னு யோசிச்ச”

“அதுக்கு கண்ணை கட்டிவச்சு காதலை சொல்றதா?” மலரத் துடித்த இதழ்களை அடக்கி, கோபம் போல் காட்டிக் கொண்டவளை ரசித்தவனின் உதட்டில் வந்து ஒட்டிக்கொண்டது புன்னகை, அன்றைய நாளின் நினைவில்.

“ஆமா! நான் யாருனே காட்டிக்காம உன்னை இம்ப்ரெஸ் செய்யதான் அந்த ஏற்பாடு.  அதோட, அப்பவும் உனக்கு என்னை பிடிக்காம போச்சுனா... கல்யாணம்னு முறைப்படி உங்க வீட்டில் வந்து நிற்க இன்னொரு வாய்ப்பு மீதமிருக்குமே” கண் சிமிட்டி தோளை குலுக்கினான்.

அதில் ஈர்க்கப்பட்டாலும், “போடா ஏமாத்துக்காரா!” அவன் மார்பில் குத்தினாள் மைத்ரீ.

அதை சமாளித்தவனாக, “நானா?” என்று ஆச்சரியமாக கேட்டவனிடம்

“வேற யாரு? நீதான்! என்னை இம்ப்ரெஸ் செய்றதாம், இல்லைனா, எங்க வீட்டுக்கே வந்து நல்ல பிள்ளை மாதிரி கல்யாணம் பேசுறது.  இந்த மாதிரியெல்லாம் திட்டம் போட்டா, வேறென்ன சொல்றது? ஏமாத்துக்காரா... ஏமாத்துக்காரா...”

ராகுலோ சத்தமாக சிரித்துவிட்டான்.

“சிரிக்காதடா....சிரிக்காத....” அவன் சிரிப்பு அதிகரித்தது.

அவன் சிரிப்பில் மயங்கியவள், “சிரிச்சு மயக்காதே....ஏமாத்துக்காரா....” நிறுத்தாமல் நீண்ட அவள் குத்துகளை புன்னகையோடு பெற்றுக் கொண்டான்.  இது போன்ற அவளுடைய உரிமை விளையாட்டுகளுக்கு ஏங்கிய மனதில், நிம்மதி கடலென கரைப் புரண்டது.

“உன்னோட கை வலிக்கும்டா” அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டான்.

தன் மீதான அவனுடைய அக்கறையில் கரைந்து போனாள் மைத்ரீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.