(Reading time: 26 - 51 minutes)

சிறிது நேரம் அமைதியாக இருந்தவளின் மனது நிறைந்து கிடந்தது.  ஒன்றரை வருடமாக யாரிடமும் பகிராமல் பூட்டி வைத்திருந்த காதல், இது நிறைவேற வாய்ப்பே இல்லை என்று நினைத்து அவள் தினம் தினம் மறுகிய காதல், இன்று கை சேர்ந்ததை நினைத்து பூரித்தவளுக்கு, வரிசையாக அவளுடை பிறந்த நாள் முதல் இன்று வரை நடந்தது எல்லாம் நினைவுக்கு வரவும் அவளடைந்த துன்பமும் வேதனையும் கூட சேர்ந்து நினைவுக்கு வந்து கோபத்தைக் கிளறியது.

சட்டென அவனிடமிருந்து விலகி, அவன் மார்பில் கைகளை வைத்து தள்ளிவிட்டாள்.  எதிர்பாராத திடீர் தாக்குதலில் இரண்டடி பின்னே சென்றவன் சமாளித்து நின்று, “மையூ....?” என்று புரியாமல் கேள்வியாக அவளை ஏறிட்டான்.

“ஒன்னரை வருஷமா நீ வந்திருவன்னு குருட்டு தனமா நம்பிட்டு இருந்தது கூட பரவாயில்ல.  இன்னைக்கு காலைலை, என்னை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவதா சொன்னதிலிருந்து எவ்வளவு கஷ்டபட்டேன்னு தெரியுமா?

சற்று நேரத்தில் என்னவோ ஏதோ என்று தவித்தவன் அவள் கேள்வியில் இலகுவானான்.

“சாரிடா மையூ! நான் உன்னை காயபடுத்தனும்னு எதையுமே செய்யலை.  உண்மையை சொல்லனுனா, நீ எங்கிட்ட அப்பவே வந்திருவன்னுதா எதிர்பார்த்த.  அன்னைக்கு என்னோட காதலை உங்கிட்ட சொன்னதிலிருந்து, சரயூ ஏதாவது சொல்ல மாட்டாளானு ஒவ்வொரு நாளும் எவ்வளவு ஏங்கியிருக்கேன் தெரியுமா?”

‘சரயூ என்ன சொல்லனும்?’ இவள் புரியாமல் விழிக்க

“நீ எப்படியும் இதை ஜெய்ட்ட சொல்லுவ, அது சரயூ மூலமா எனக்கு தெரிஞ்சதும் உன்னை வந்து பார்க்கலாம்னு நினைச்ச.  அப்படி எதுவும் நடக்காத போது, ஒரு வேளை நீ என்னை தேடி ரெஸ்டாரண்ட் வருவியோனு ஒரு பேராசை... அதனால அந்த வாரம் முழுக்க அங்க நிறைய டைம் ஸ்பெண்ட் செய்தேன்.  நீ வராதப்போ ரொம்ப வருத்தமா இருந்தது.  என்னோட பிஸ்னெஸ் வேற இனிஷியல் ஸ்டேஜ்ல இருக்க, அங்கயும் பார்க்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது”

“ஒரு நாள் ஆஃபிஸ்ல இருந்தப்ப, நீ என்னை தேடி, அங்க நான் இல்லாத நேரத்துக்கு போயிருந்தா அப்டினு தோனவும் அடிச்சு பிடிச்சு அவசரமா போய் நின்னது அந்த வெய்ட்ரெஸ் முன்னாடி.  ஆனா பலனென்னவோ பூஜ்யம்தான்.  இருந்தாலும் அவங்கட்ட என்னோட விசிடிங்க் கார்ட் கொடுத்து நீ என்னை தேடி வந்தா கொடுக்க சொன்னேன்.  வெய்ட் செய்தது தான் மிச்சம்ங்கிற மாதிரி உங்கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை.  அப்பவே உங்க வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசலாம்னா, பிஸ்னெஸ் செட்டில் ஆகலை.  அதனாலதா உன்னோட படிப்பு முடியலைனாலும் நீ எனக்குனு உறுதி செய்யனும்னு ஒரு முடிவோட உங்க வீட்டுக்கு வந்தாச்சு.  ஆனா நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது நீ எனக்காக எங்கிட்டயே சண்டை பிடிச்சதுதான்” தீவிரமாக ஆரம்பித்து காதல் களிப்பு கண்களில் மின்ன, குறும்பாக முடித்தான்.

அவனையே இமைக்காது பார்த்திருந்தவளினுள், அவனுடைய முகத்தில் தோன்றிய எல்லா உணர்வுகளையும் இறக்கி கொண்டவளுக்கு நிறைந்து விட்டது மனது.  இத்தனை நாளாய் அவள் கொண்ட வேதனையை விரட்டி அடித்திருந்தது அவனது அடிமனதிலிருந்து வந்திருந்த ஒவ்வோரு வார்த்தையும். 

இப்போது அவனிடம் விளையாடும் எண்ணம் பிறந்திருக்கவும் உர்ரென முகத்தை வைத்து கொண்டவள் வீட்டை நோக்கி விரைந்தாள்.

தன் மனதை திறந்துவிட்டு அவளை பார்த்தவனுக்கோ, அவளுடைய முகத்தில் வந்து போன மாற்றங்களும் கடைசியாக அவளின் வேக நடையும்... என்ன புதிதாக கண்டுபிடித்தாளோ என்ற பீதியில் அவள் பின்னோடு ஓடினான்.

“மையூ நில்லுடா? இப்போ என்ன? எதுவும் சொல்லாம போனா, எனக்கென்ன புரியனும்?”

“என்னை தவிக்க விட்டதுக்கு தண்டனை வேணாமா?”

“தண்டனையா?” வியப்பாக அவன் கேட்க

“ஆமா! என்னை தவிக்க விட்டதுக்கு தண்டனையா, நம்ம அடுத்த மீட் வரைக்கும் நாம பேசிக்க போறதில்லை”

“மையூ, இது கடவுளுக்கே அடுக்காது! நானும்தா உன்னை பார்க்காம பேசாம தவிச்சனே”

அவள் இல்லை என்பதாக தலை அசைக்கவும், சட்டென கைகளை உயர்த்தி சரண்டரானான்.

“சரி! நீ நினைக்கிற மாதிரி எனக்கு தண்டனை கொடுக்கனும்னா, நீதான் என்னை அறைஞ்சிட்டியே அதை தண்டனையா எடுத்துக்கோயேன்”

அவள் கை தானாக எழுந்து அவன் இடது கன்னத்தை வருடியது.  அவளுடைய முக பாவனையிலிருந்து அவள் வருந்துவது புரிந்தது இவனுக்கு.

“எனக்கு வலிக்கலைடா! அதுவும் இந்த சின்ன கையால அறைஞ்சா வலிக்குமா என்ன?” அவள் கையை தன் கன்னத்தோடு சேர்த்து பிடித்தபடி சமாதானம் சொன்னான்.

அவள் கண்களில் இரு துளி நீர் சேர,

“சாரி ராகுல்! இன்னைக்கு காலைல இருந்து ரொம்பவே கஷ்டமாயிருந்தது.  யாரோ என்னை உங்கிட்ட இருந்து பிரிக்கிற மாதிரி தோனிடிச்சு.  அதான், நீதான் அன்னைக்கு காதலை சொன்னதுனு தெரிஞ்சதும் கோபம்தான் வந்தது.....ஐ ம் சாரி அகெய்ன்!”

“வலிக்கலைனு சொல்றேனில்ல... எதுக்கு இப்போ இந்த கண்ணீர்” என்று அதட்டியவன் அவள் கண்ணீரை துடைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.