(Reading time: 26 - 51 minutes)

“ம்ச்... விடுனு சொல்ற இல்ல... அதை விடு ரூபின்” அங்கிருந்து எழுந்து கொண்டவன் மாடியின் மூலையில் நின்று தூரத்தில் தெரியும் வாகனங்களை வெறித்தான்.

காலை வீட்டுக்கு வந்ததிலிருந்து அழகு தேவதையாக அங்கும் இங்கும் சுற்றி திரிந்தவளோடு பேச கூட நேரமில்லாது ஜெய்கு வேலை இருந்து கொண்டே இருந்தது.  அவளோடு ஒட்டி கொண்ட அவனுடைய கண்களால், நெஞ்சில் படையெடுத்த ஆசைகள்....ஏங்கி தவித்தான் அவளின் நெருக்கத்துக்காக.

கடைசியாக இப்போது கிடைத்திருக்கும் சந்தர்பத்தை நழுவ விடாது அவளோடு செலவிட போகும் நிமிடங்களை எண்ணி துள்ளிய மனதோடு வந்து உட்கார்ந்திருந்தான் ஜெய்.  வழக்கம் போல்தான் ரூபின் அவளை வம்பிழுத்தான்.  ஆனால், காலையிலிருந்து அவளின் நெருக்கத்துக்காக ஏங்கியவனுக்கோ... ரூபினிடம் சரயூ காட்டும் உரிமையையும் நெருக்கத்தையும், தன்னிடம் காட்டவில்லையே என்றெழுந்த கோபம், அவனை பேச வைத்திருந்தது.  முதல் முறையாக அவளை அதட்டியதோடல்லாமல் கோபமாகவும் பேசிவிட்டிருந்தான்.  சரயூவோ தன்னோடு சண்டை கூட பிடிக்காமல் அங்கிருந்து போனது இதயத்தில் பெரும் வலியை விதைத்தது.

அவன் நினைத்தது என்ன? நடந்தது என்ன? அவன் மீதே வெறுப்பாக இருந்தது.

நிச்சயம் முடிந்ததிலிருந்து மைத்ரீயிடம் தனிமையில் பேசும் வாய்ப்புக்காக காத்திருந்தான் ராகுல்.  இந்த ஒரு வாரமாக அவனை தவிக்க விட்டவளோ இப்போதும் அவனை புரிந்து கொள்ளாது பெரியவர்களுக்கு நடுவில், தீவிரமான யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் ப்ரியாவோடு அவளறைக்கு சென்றுவிட்டாள்.  சென்ற வேகத்தில் திரும்பி வந்த ப்ரியா இவன் குடும்பத்தை தவிர மற்றவர்களை அறையினுள் அழைத்து சென்றாள். 

“ப்ரியா! சம்மந்தி வீட்டுக்காரங்களை அங்க தனியா விட்டுட்டு எங்களை இங்க அழைச்சிட்டு வந்து... என்னம்மா இது?” 

“மைத்ரீதா நம்ம எல்லாரிட்டையும் ஏதோ அவசரமா பேசனும்னு சொன்னா.. அதான்...”

“அது....வந்து...அது....” சொல்லலாமா வேண்டாமா என்று பலமுறை யோசித்தே இந்த முடிவை எடுத்திருந்தாலும் தயக்கம் மலையளவு இருந்தது.  அவள் சொல்லப் போவதை கேட்ட பின்னர், முடியாது என்றுவிட்டால் என்ற கேள்வியே அவளை சொல்லவிடாது தடுத்தது.

“அவங்களை வெளிய உட்கார வச்சுட்டு நீ இப்படி இழுத்துக்கிட்டிருக்கப்பத பார்த்தா... ம்ஹீம்... இப்போ பேசுற அளவுக்கு அவசரமான விஷயமா மைத்ரீ? பரவாயில்லை விடு... எதுவா இருந்தாலும் அவங்க புறப்பட்ட பிறகு பேசிக்கலாம்” என்று கடிந்தார் வடிவு. 

“ப்ளீஸ் மா! கொஞ்ச நேரம் நான் சொல்றத கேளுங்க.... நீங்க எல்லாரும் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” எல்லோர் முகத்தையும் பார்த்தவள் எச்சிலை திரட்டி விழுங்கி கொண்டாள்.

“அது...அது... ஜெய்கு நம்மை விட்டா யாரிருக்கா? நாம தானே அவனுக்கு எல்லாம் செய்யனும்! நாங்க வேற எப்பவுமே எல்லாத்தையும் ஒரே மாதிரியா ஒரே நேரத்துல செய்து பழகிடுச்சா... இன்னைக்கு நடந்த என்னோட நிச்சயத்தை அவன் எப்படி எடுத்துக்குறானோ, தெரியாது...”

“அதனால..... என்ன செய்யலாம்ங்கற?” என்ன செய்ய முடியும் என்பதாக வடிவு கேட்க

“வேறென்னம்மா....ஜெய்கும் நிச்சயம் செய்யனும்னுதா உங்க பொண்ணு சொல்றா?” ஆதர்ஷ் கேலியாக சொல்ல, அவளோ வெகு தீவிரமாக

“ஆமா! ஜெய்கும் நிச்சயம் செய்யனும்.  ஜெய் சரயூவை விரும்புறதால இன்னைக்கே, அவங்க வீட்ல இதை பற்றி பேசுறீங்களா? எனக்காக ப்ளீஸ்...யாரும் நோ சொல்லிடாதீங்க...ப்ளீஸ்....ப்ளீஸ்” நண்பனுக்காக கெஞ்சினாள் மைத்ரீ.

இடது கண்ணை மூடி வலது கண்ணை சுருக்கி, இரு கை விரல்களையும் கோர்த்து மடக்கி நின்றிருந்த மகளின் தோற்றம், சந்திரசேகருக்கு அவளின் சிறுபிராயத்தில் நடந்த நிகழ்வை நினைவூட்டியது.

அன்றும் இதே போல் தான், சந்திரசேகர் ஒரு புதுவகையான பென்சில் வாங்கி தந்த போது ஜெய்கும் ஒன்று வேண்டுமென அவள் கெஞ்சி கொண்டு நின்றாள்.  மைத்ரீயின் பப்பி ஃபேஸ்-ஐ (puppy face) பார்த்த பிறகும் அவள் கேட்டதை மறுக்க மனம் வரவில்லை.  ஜெய்கும் அந்த பென்சில் கிடைத்தது.  அதன் பிறகு மகள் தன்னிடம் கெஞ்சுவதற்கு இடம் தரவே இல்லை அவளின் அன்பு தந்தை.  அன்றிலிருந்து சந்திரசேகர் தன் பிள்ளைகளுக்காக வாங்கியதெல்லாமே மூன்றாக மாறியிருந்தது.

தான் சுமந்து பெறாவிட்டாலும் ஜெய்யை தன் பிள்ளையாகவே நினைத்து, அவனுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்த வடிவு, அவன் திருமணத்தைப் பற்றி யோசித்திருக்கவில்லை.  அவன் படிப்பு முடித்து தன் சொந்த காலில் நிற்கட்டும் என்று நினைத்திருக்க அவனுடைய காதல் சற்று அதிர்ச்சியை தந்தது.  இருந்தாலும் சரயூ தங்கமான பெண், அவர்களின் வாழ்க்கை நன்றாக இருந்தால் அதுவே போதுமாக இருந்தது அன்பு கொண்ட தாயுள்ளத்துக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.