(Reading time: 26 - 51 minutes)

அவள் மனதை மாற்ற நினைத்து, “ஸோ என்னோட தண்டனை முடிஞ்சது” என்று குதூகலமாக அவன் கூவ,

“யார் அப்படி சொன்னது?! இந்த அறை இன்னைக்கு நீ செய்ததுக்கு மட்டும்தா.  ஒன்னரை வருஷமா செய்ததுக்கு, நான் முதலே சொன்ன மாதிரி நம்மோட அடுத்த மீட் வரைக்கும், நாம பேசிக்க போறதில்ல”

“ஹே இது அநியாயம்!”

“மையூ, நான் மலேசியா போறேன்” 

“அப்றம் நீ என்னை ரொம்ப மிஸ் பண்ணுவ”

“இருக்குற இந்த நேரத்தை நாம வீணாக்க கூடாது”

அவனுடைய, சாம பேத தான தண்ட எதுவுமே மைத்ரீயின் முடிவை மாற்றவில்லை.

ராகுலின் வெளிநாட்டு பயணத்தை கருத்தில் கொண்டு, அந்த வார இறுதியிலேயே எளிமையான முறையில் அவர்களின் நிச்சயதார்த்தம் என்று முடிவு செய்யபட்டது.

தங்கள் காதல் கனவு நனவாகி, அது அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதில் நெகிழ்ந்திருந்தனர் ராகுலும், மைத்ரீயும்.  பொதுவாக காதலர்கள் செய்யும் தலையாய கடமையான கைபேசியில் நேரம் காலம் தெரியாது மூழ்கியிருப்பது ராகுலுக்கு கிடைத்த தண்டனையால் நடக்காமல் போனது.  மைத்ரீகாக வருட கணக்கில் காத்திருந்த ராகுலுக்கோ இந்த ஒரு வாரக் காத்திருப்பு, பெரும் கொடுமையாக இருந்தது.  நிச்சயதார்த்த ஏற்பாடுகளை கவனிப்பதில் சுழன்று கொண்டிருந்தவர்களுக்கு நாட்கள் நொடிகளாக பறக்க.  ராகுலுக்கோ 6,04,800 நொடிகள் நிறைந்த நீண்ட நாட்களாக மாறியிருந்தன.

ஒரு வார இடைவெளியில் நிச்சயதார்த்தம் என்பதால் நெருங்கிய சொந்தங்களையும், ஒரு சில நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தனர். 

ப்ரியாவின் பெற்றோர் மற்றும் தங்கை யஷ்விதாவும் வந்திருந்தனர்.  சரயூவே கல்லூரி தோழர்களை அழைத்துவிட்டிருக்க ஜெய்கு அந்த வேலை இருக்கவில்லை.  மைத்ரீயின் படிப்பு முடிந்த பிறகு தான் கல்யாணம் என்பதால் அவள் தன் கல்லூரி நண்பர்களை அழைத்திருக்கவில்லை.

காதல் கனவுகளை சுமந்து காத்திருந்த நெஞ்சங்கள், தங்களுக்கான அந்த தருணம் வரவும் கைகளில் மோதிரங்களோடு வந்தனர்.  அவளின் பிறந்த நாளுக்காக அவன் வாங்கியிருந்த ப்லாட்டினம் பேண்ட்கள் (Platinum bands) தான் இன்று இவர்களின் கைகளில்.  அன்று அவளிடம் அவளுக்கான மோதிரத்தை மட்டுமே கொடுத்திருந்தவனோடு நின்று போனது, அந்த ஜோடி மோதிரங்களில் மற்றொன்று.  அன்றே அவள் காதலை ஏற்றிருந்தால் இப்போது வேறு மோதிரங்கள் தேவைபட்டிருக்குமோ?

சுற்றியிருந்தோரின் கேலியில் அதுவும் சரயூ, யஷ்விதாவின் பேச்சுகளில் வெட்கக் கடலில் மூழ்கி கொண்டிருந்த மைத்ரீயின் முகம் கீழ் வானமாய் சிவந்திருந்தது.  அதை ரசித்து மகிழ்ந்து பூரித்து போனான் அவளின் ஆசைக் காதலன்.  ராகுலுடைய பார்வையின் மாயத்தால் அவளின் முகச்சிவப்பு இன்னும் கூடியது.

இருவரும் ஒருவரின் கண் வழியாக மற்றவரின் உயிரை தொட்ட நொடி கைகளும் மோதிரத்தை மாற்றிக் கொண்டன.

ண்பர்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்திருக்க, நடுவில், வடிவு கொடுத்தனுப்பிய நொறுக்குத்தீனிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் சரயூ.  மைத்ரீயின் வீட்டில் நிச்சயம் நடந்திருக்க எல்லா வேலைகளையும் செய்து முடித்து அப்போது தான் அமர்ந்திருந்த வடிவு இவர்களுக்காக மறுபடியும் மாடி ஏறத் தயாரானார்.  அவரை அலைக்கழிக்க பிடிக்காமல், சற்று நேரம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு இவளே நொறுக்குத்தீனிகளை எடுத்து வந்திருந்தாள்.

“இன்னைக்கு நடக்குறது எல்லாமே அதிசயமா இருக்கே, சௌமி!”

ரூபின் எதை குறிப்பிடுகிறான் என்று புரியாதவளாய், “அதிசயமா?! என்ன சொல்ற?”

“அதானே... அப்படி எந்த அதிசயத்தையும் நான் பார்க்கலையே” என்றான் வேதிக்.

“என்ன மச்சா, இப்படி சொல்லிட்ட...” என்று ஆச்சரியபட்டுவிட்டு ஜெய்யிடம் திரும்ப அவனும் தனக்கேதும் அதிசயமாக தோன்றவில்லை என்பதாக தோளை குலுக்கவும், “மச்சா சஞ்சய்! உனக்குமா தெரியலை?” மறுபடியும் ஆச்சரியம் போல காட்டிக் கொண்டான்.

அங்கிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.  யாருக்கும் எதுவும் அதிசயம் போல் படவில்லை.  அனைவரின் உதடுகளும் இல்லையென்பதாக பிதுங்கியது.  ரூபின் இப்போது தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டான்.

அவர்களோடு சேர்ந்து கொண்டிருந்த யஷ்விதா, “எங்க யாருக்கும் தெரியாத அந்த அதிசயம் என்னன்னு நீங்கதா சொல்லிடுங்களே, ரூபின்?” அவர்கள் யாருக்கும் தெரிந்திராத அந்த அதிசயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமிகுதியில் கேட்டாள்.

அதிசயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் எல்லோரிடத்திலும் எழுந்திருக்க... சரயூவும் தன் வேலையை நிறுத்திவிட்டு ரூபின் பதிலுக்காக அவனை நோக்கினாள்.  

“யாருமே, நம்ம சரயூவை கவனிக்கலையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.