(Reading time: 37 - 73 minutes)

26. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்..

அழகாய் உடைந்தேனே நீயே அர்த்தம்..

மெர்சல படப் பாடல் எஃப் எம் ல் ஓடிக் கொண்டிருக்க, உதட்டில் ஒருப் புன்னகையோடு  மலைப் பாதை வளைவுகளில் காரை ஓட்டிக் கொண்டு வந்தான் துஷ்யந்த்.. நேற்று கங்காவிடம் பேசிய உற்சாகம் அவன் மனம் முழுவதும் இருந்தது.. அவள் தன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. தன்னை எதிர்பார்த்திருக்கிறாள் என்பது மிகவும் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.. இன்றே அவளை காண வேண்டுமென்று மனம் ஏங்கியது.. ஆனால் இங்கு தேயிலைத் தோட்டத்தில் சில வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கவே, அதையெல்லாம் முடித்துவிட்டு விரைவில் சென்னை செல்ல வேண்டும், அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையோடு அந்த நாளை எதிர்பார்த்தான்..

நேற்று இரவு மகிழ்ச்சியில் உறக்கம் வர மறுத்தது.. அதனால் விடியற்காலையிலேயே எழுந்தவன், ஊட்டி வரை சென்று லேக் பக்கமாக காலார நடந்து இயற்கையின் இனிமையை அனுபவித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறான்... மலைப்பாதை வளைவுகளில் காரை செலுத்திக் கொண்டு வந்தவன், தன் எஸ்டேட்டிற்கு செல்லும் குறுக்குப் பாதையில் செல்ல காரை திருப்பினான்…

சிறிது தூரம் சென்றதும், யாரோ ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டது..  ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தவன், குரல் வந்த திசையில் தன் காரை ஓட்டிக் கொண்டு செல்ல, கொஞ்சம் தூரத்திலேயே ஒருப் பெண்ணிடம் ஒருவன் பலவந்தமாக அத்துமீறி நடந்துக் கொண்டிருந்தான்.. அதை கண்ட இவன் இன்னும் கொஞ்சம் வேகமாக அந்த இடத்தை நோக்கி காரை செலுத்த, கார் சத்தம் கேட்டு அந்த ஆள் திரும்பி பார்த்தான்… பின் யாருமில்லாத அந்த இடத்தில் ஆள் வந்தது தெரிந்தும், அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்..

ஓரிடத்திற்கு மேல் கார் செல்ல முடியாமல் காரை நிறுத்திய துஷ்யந்த், ஓடிச் சென்றவன் சென்ற திசையை பார்க்க, அவன் அதற்குள் ஓடிவிட்டிருந்தான்.. ஆனால் துஷ்யந்த் அந்த ஆளை நன்றாக பார்த்திருந்தான்.. அது வேறு யாருமில்லை அவர்கள் எஸ்டேட்டின் மேனேஜர் தான் அவன்.. ஒருப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவனா இவர்கள் எஸ்டேட்டின் மேனேஜர்.. இப்படி ஒருவனை வேலைக்கு வைத்திருப்பதை நினைத்து வருந்தினான்..

திரும்ப  மேனேஜர் தள்ளி விட்டிருந்த அந்த பெண் விழுந்துக் கிடக்கும் இடத்திற்கு அவன் வரவும், அந்த பெண் எழுந்து தன் ஆடைகளை சரி செய்துக் கொண்டிருந்தாள்.. அதனால் கொஞ்சம் தள்ளியே நின்றிருந்தவன்.. அவள் தன்னை சரி செய்ததும் அவள் அருகே வந்தான்.. அவள் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு, அவளுக்கு திருமணமானதை சுட்டிக் காட்டியது..

“கீழே விழுந்ததுல உங்களுக்கு எங்கயாச்சும் அடிபட்டிருக்கா ம்மா..”

“இல்லங்க அப்படி ஒன்னுமில்ல.. கொஞ்சம் தண்ணி வேணும்..”

“இருங்க எடுத்துட்டு வரேன்..” என்றவன் காரை நோக்கி விரைந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்துக் கொடுத்தான்..

அவன் கொடுத்த தண்ணீரை  வாங்கி குடித்தவள், பாட்டிலை அவனிடம் கொடுத்துவிட்டு இரு கைகூப்பி அவனுக்கு நன்றி சொன்னாள்..

“ரொம்ப நன்றிங்க.. நல்ல சமயத்துல இந்தப் பக்கம் வந்தீங்க.. நீங்க வரலன்னா அந்த அயோக்கியன் என்னை..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினாள்.

“அழாதீங்க.. அதான் ஒன்னும் நடக்கல இல்ல.. ஆனா இந்த இடத்துல தனியா ஏன் வந்தீங்க..?”

“அது வீட்டுக்கு இந்த பக்கம் போனா சீக்கிரம் போய்டலாம்னு வந்தேன்.. பொதுவா இங்க ஆள் நடமாட்டம் இருக்கும்.. அதை நம்பி இந்தப் பக்கமா வந்தேன்..”

“சரி நீங்க எங்க போகனும்னு சொல்லுங்க.. நான் உங்களை வீட்ல ட்ராப் செய்றேன்.”

என்னத்தான் அவன் பேச்சில் அக்கறை இருந்தாலும், அவனும் ஒரு ஆண் என்பதால் அந்த பெண் தயங்கினாள்.

“இங்கப்பாருங்க.. உங்க பயம் எனக்கு புரியுது.. என்னை நினைச்சு நீங்க பயப்பட வேண்டாம்.. இப்போ நீங்க தனியா இருக்கறது தெரிஞ்சு, அந்த ராஸ்கல் திரும்ப வந்தா என்ன செய்வீங்க..?” என்றுக் கேட்டதும் அந்த பெண் பயந்துப் போனாள். பின் அவனுடன் வர சம்மதித்தாள்.. அவள் வீடு எங்கே இருக்கிறது என்று அவன் கேட்டதும், அந்த பெண் தன் வீட்டு முகவரியை சொல்ல, அதைக் கேட்டு அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.