(Reading time: 37 - 73 minutes)

ருத்துவர் சென்றதும் கோமதி அறைக்குள் வரும்போது விஜி விழித்திருந்தார்.. “இப்போ எப்படி இருக்கு விஜி.. கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு..”

“இல்ல அண்ணி.. காலையில தானே தூங்கினேன்.. இப்போ தூக்கம் வரல.. கொஞ்ச நேரம் உக்காருங்க பேசிக்கிட்டு இருக்கலாம்..”

“அப்போ சரி.. ஆனாலும் என்ன பயமுறுத்திட்ட விஜி.. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. அப்புறம் செல்வாக்கு போன் பண்ணதும், அவன் தான் டாக்டருக்கு போன் பண்ணான்..”

“நர்மதா இல்லாத நேரத்துல உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன் இல்ல அண்ணி.. “

“என்ன விஜி இதுல என்ன எனக்கு கஷ்டம்.. எனக்கு முடியாத நேரத்துல நீ என்னைப் பார்த்துக்கலயா..?? ஆனா விஜி உனக்கு இப்படி அடிக்கடி பி.பி ஏறி ஏறி இறங்கறது நல்லதில்ல.. உனக்கு என்ன கஷ்டம் விஜி.. எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு.. உன் மனசுல போட்டு கஷ்டப்படுத்திக்காத.. நாங்க ஏதாச்சும் உன்னை சங்கடப்படுத்துற மாதிரி நடந்திக்கிட்டோமா??”

“அய்யோ அண்ணி ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க.. உங்க தம்பி பொண்டாட்டி மாதிரியா என்ன நடத்துறீங்க.. உங்க கூடப் பொறந்த தங்கச்சி மாதிரில்ல என்னப் பார்த்துக்கிறீங்க.. ராஜாவும் செல்வாவும் உங்க மேல எவ்வளவு மரியாதையும் பாசமும் வச்சிருக்காங்களோ.. அதே அளவுக்கு என்மேலயும் வச்சிருக்காங்க.. இப்போ வந்த நர்மதா கூட என்கிட்ட மரியாதையும் அக்கறையும் காட்றா.. அப்புறம் எனக்கு என்ன சங்கடம் வரப்போகுது அண்ணி..”

“அப்புறம் என்ன பிரச்சனை உன்னோட மனசை போட்டி அரிச்சிட்டிருக்கு விஜி.. வெளிப்படையா அதை சொல்லேன்..”

“வேண்டாம் அண்ணி.. அதை சொன்னா உங்களால தாங்கிக்க முடியாது..”

“என்ன விஜி.. எவ்வளவோ பிரச்சனைகளை நாம கடந்து வந்துட்டோம்.. இன்னும் தாங்கிக்க முடியாத அளவு பிரச்சனை என்ன இருக்கப் போகுது.. என்கிட்ட சொன்னா நான் தாங்கிக்க மாட்டேன்னு என்கிட்ட சொல்லாம நீயே மனசுல போட்டு புழுங்கிக்கிட்டு இருக்கப் போறியா?? எதுவா இருந்தாலும் சொல்லு விஜி..”

“அண்ணி நம்ம ராஜாக்கு இனி கல்யாணமே நடக்காதாம் அண்ணி..”

“என்ன சொல்ற விஜி.. உன்கிட்ட யார் அப்படி சொன்னது..??”

“ஜோசியர் தான் அண்ணி.. ராஜா ஜாதகத்துல பிரச்சனை இருக்கு.. கல்யாணம் ஏற்பாடு செஞ்சாலும் அது நின்னு தான் போகும்.. இனி அவனுக்கு கல்யாணமே நடக்காதுன்னு ஜோசியர் சொன்னாரு..” என்றவர், அன்று ஜோசியர் கூறியதை நினைவு கூர்ந்தார்.

ர்மதா ஜாதகம் கைக்கு கிடைத்ததும், துஷ்யந்த் ஜாதகமும், அந்த ஜாதகமும் பொருந்துகிறதா?? என்று ஜோசியரிடம் கேட்டுவிட்டு, பொருந்தியிருந்தால் கையோடு ஜோசியரை கூட்டிக்கொண்டு வந்து திருமணத்திற்கு நாள் குறித்துவிடலாம் என்று கோமதி சொன்னதற்கேற்ப, விஜி இரு ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் சென்றார்..

ஜோசியர் இரு ஜாதகங்களையும் சிறிது நேரம் பார்த்துவிட்டு, பின் துஷ்யந்தின் ஜாதகத்தை மட்டும் எடுத்து கை விரல்களால் கணக்குப் போட்டப்படி அமர்ந்திருந்தார்.. துஷ்யந்தின் ஜாதகத்தை மட்டும் வைத்து கணக்குப் போடவே, அதில் ஏதோ பிரச்சனையோ என்று சிந்தித்த விஜி கொஞ்சம் கலக்கத்தோடு ஜோசியரை பார்த்தப்படி நின்றிருந்தார்.. பின் பொறுமை குறைந்து ஜோசியரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டே விட்டார்..

விஜி கேட்டதும் அவரை ஒருப்ப்பார்வை பார்த்த ஜோசியர், பின் திரும்பவும் ஜதகத்தைப் பார்த்து கைவிரல்களால் திரும்ப கணக்குப் போட்டப்படி இருந்தவர், சில நிமிடங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்.

“உங்க மகனோட ஜாதகத்தை இதுக்கு முன்னாடி எந்த ஜோசியரிடமாவது காட்டி பலன் பார்த்திருக்கீங்களாம்மா..??”

“இல்லங்க.. சின்ன வயசுல ஜாதகம் எழுதினதோட சரி.. அதோட இப்ப தான் பார்க்கிறோம்..”

“பையனுக்கு வயசு 31 முடியப் போகுதே.. இப்போ தானா அவருக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்கிறீங்க..??”

“அது பையனோட அப்பா இறந்ததுக்குப் பிறகு குடும்பத்தில் சில பிரச்சனைங்க.. தொழிலில் நஷ்டம்.. அதனால அதெல்லாம் சரி செய்யறவரைக்கும் பையனுக்கு கல்யாணம் செஞ்சுக்கறதுல இஷ்டம் இல்ல.. இப்போ தான் கல்யாணத்துக்கு அவன் சம்மதிச்சான்.. அதான் வரன் பார்க்க ஆரம்பிச்சோம்..”

“குடும்பத்துல பிரச்சனை, தொழிலில் நஷ்டம்னு சொல்றீங்க.. அப்போல்லாம் குடும்பத்துல உள்ளவங்க ஜாதகத்துல ஏதாச்சும் பிரச்சனை இருக்கான்னு நீங்க பார்க்கலையாமா??”

“அது…. வீட்டு ஆம்பிளைங்களுக்கு இந்த ஜாதகம் ஜோசியத்துலல்லாம் நம்பிக்கையில்லை.. அதனால அண்ணியும் இதெல்லாம் பார்க்கமாட்டாங்க.. ரொம்ப நாள் கழிச்சு வீட்ல ஒரு நல்லது நடக்கப் போகுதேன்னு நான்தான் ஜாதக பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்யலாம்னு அவங்களை ஒத்துக்க வச்சேன்.. ஏன் ஜோசியரே, எங்க ராஜா ஜாதகத்துல ஏதாச்சும் பிரச்சனை இருக்கா..??”

“பிரச்சனைன்னு எதுவும் இல்லம்மா.. ஆனா பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டா மாதிரி கட்டம் சொல்லுது.. அதாவது உங்க பையன் ஜாதகப்படி அவருக்கு 25 வயசுலேயே கல்யாணம் ஆகியிருக்கனுமே..” என்றதும் விஜி அதிர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.