(Reading time: 37 - 73 minutes)

றையின் வாசலில் கோமதி பரபரப்போடு நின்றிருந்தார்.. விஜியை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருக்க, ஏதும் பெரிய பிரச்சனையோ என்று குறுக்கும் நெடுக்குமாக பரிதவித்துக் கொண்டிருந்தார். திருமணத்திற்கு மறுநாள் விஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்து, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி தேறி வந்தவருக்கு, திடீரென்று இன்று விடியற்காலை திரும்ப உடல்நலம் கொஞ்சம் மோசமாகிவிட்டது..

தலை தீபாவளிக்குச் சென்ற மகனும் மருமகளும் இன்று இரவு வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்ததால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாமென்று நினைத்த கோமதி.. மருத்துவர் முன்பு கொடுத்திருந்த மருந்துகளையே விஜிக்கு கொடுத்துப் பார்த்தார்.. முதலில் அந்த மருந்துகள் வேலை செய்து விஜி நல்லப்படியாக தூங்க, இனி பிரச்சனையில்லை என்று அவர் கொஞ்சம் கவலையில்லாமல் இருந்தார்.. பின் திரும்பவும் விஜிக்கு உடல்நலம் மோசமானது… அதனால் கொஞ்சம் அதிகமாகவே பயந்தவர், உடனே செல்வாக்கு போன் செய்து விஷயத்தை கூறினார்.

“அம்மா பதட்டப்படாதீங்க.. அத்தைக்கு ஒன்னும் ஆகாது… நான் கொஞ்சம் வேலையா சிட்டிய விட்டு வெளியே வந்திருக்கேன்.. ஒன்னும் பிரச்சனையில்லை, நம்ம டாக்டர்க்கு போன் போட்டு உடனே வரச் சொல்றேன்.. நர்மதாவையும் உடனே வரச் சொல்றேன்.. ஏதாச்சும் ப்ராப்ளம்னா ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போய் ட்ரீட்மென்ட் கொடுக்கலாம், நீங்க பயப்படாதீங்க..” என்று அலைபேசியில் செல்வா சமாதானம் கூறினான். அவன் பேசிய 15நிமிடத்திலேயே மருத்துவர் வீட்டுக்கு வந்தார்..

விஜியை பரிசோதித்துவிட்டு மருத்துவர் வெளியே வந்தார்.. “ டாக்டர் இப்போ விஜிக்கு எப்படி இருக்கு…. கொஞ்சம் கொஞ்சமா நல்லாயிக்கிட்டே தானே வந்தா.. திடிர்னு என்னாச்சு..??”என்று பதட்டம் குறையாமல் கோமதி கேள்விகளை அடுக்கினார்.

“திரும்ப பி.பி அதிகமாயிருக்கு.. இப்போ அது குறைய ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கேன்.. இருந்தாலும் அவங்களுக்கு இப்படி அடிக்கடி பி.பி ஏறி ஏறி இறங்கறது சரியில்ல.. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்கம்மா..”

“நீங்க கொடுத்த மருந்தெல்லாம் அவளுக்கு சரியா தான் கொடுக்கிறோம் டாக்டர்.. அப்புறம் ஏன் இப்படி ஆகுது..??”

“வெறும் மாத்திரை மருந்து மட்டும் நம்மள நல்லா வச்சிருக்காதும்மா.. மனசும் சந்தோஷமா இருக்கனும்.. அவங்க மனசுல ஏதோ விஷயத்தை போட்டு குழம்பிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.. அது என்னன்னு கேட்டு சரி செய்ங்க.. இப்படியே விட்டா, இதனால பக்கவாதம், இதயநோய் எல்லாம் வர சான்ஸ் இருக்கு.. இப்போ முன்ன விட கொஞ்சம் பவரா மாத்திரை எழுதியிருக்கேன்.. அதை கரெக்டா கொடுங்க.. நான் நாளைக்கு வந்துப் பார்க்கிறேன்.. முடிஞ்சவரைக்கும் அவங்கக்கிட்ட மனசு விட்டு பேசி என்னன்னு தெரிஞ்சிக்க பாருங்க.. இப்போதைக்கு ஹாஸ்பிட்டல்க்கு போக வேண்டிய அவசியமில்லை.. நானே ரிஷப் சார்க்கிட்ட பேசிட்றேன்..” என்று அவர் விடைப் பெற்றார்.

மருத்துவர் சொன்னது போல் விஜி மனதில் என்ன இருக்கும் என்று கோமதி யோசிக்க ஆரம்பித்தார்.. துஷ்யந்தின் திருமணம் நின்ற கவலை விஜிக்கு இருக்கிறது என்று தான் ஆரம்பத்தில் நினைத்தார்.. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான், “செல்வா, நர்மதா நல்ல ஜோடில்ல அண்ணி.. பார்க்கவே கண்ணுக்கு நிறைவா இருக்கு..” என்று விஜி சொல்ல அவர் கேட்டார்.. இருந்தும் அப்படி என்ன கவலை விஜிக்கு என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பினார்.

துவரையில்  குன்னூர் வந்ததிலிருந்து கங்காவுடன் இருந்த இனிமையான நினைவுகளோடு தான் துஷ்யந்த் பயணித்தான்.. ஆனால் இன்று அந்த பெண் சொன்ன முகவரிக்கு அவன் கார் சென்றுக் கொண்டிருந்தாலும் அவன் மனம் அங்கே செல்ல விரும்பவில்லை.. ஏனென்றால் அந்த இடம் தான் கங்காவின் வசிப்பிடம்.. அவள் முன்பு அங்கு தான் வசித்து வந்தாள்..

அந்த பெண் இருக்கும் வீடு குறுகலான பாதை என்பதால் வண்டியை தூரமாகவே நிறுத்திவிட்டான்.. அத்தோடு அப்பெண்ணிடம் விடைபெற நினைத்தான்.. அந்த இடத்தை பார்த்தாலே அவன் இதயம் கணத்தது.. அன்று கங்காவை அரை உயிராக தூக்கிக் கொண்டு கார் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தது அவன் ஞாபகத்திற்கு வந்தது.. அதை என்றும் நினைவுப்படுத்திப் பார்க்க அவன் விரும்பியதில்லை.. ஆனால் அந்த இடத்தை பார்க்கவும் அவையெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது..

என்னவோ பாதுகாப்பாய் வீடு வரை கொண்டு வந்து விட்டவனை அப்படியே வழி அனுப்ப அந்த பெண்ணிற்கு மனசு வரவில்லை.. வீட்டிற்கு அழைத்தாள்.. இவன் மறுக்கப் பார்த்தாலும், அவள் தன் கணவனிடம் இவனை அறிமுகப்படுத்துவதாக கூறினாள்.. அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவனும் அந்த பெண்ணுடன் அவள் வீட்டிற்குச் சென்றான்.. கங்கா இருந்த வீடு வலப்பக்கம் என்றால், அந்த பெண் அவனை இடப்பக்கமாக இருக்கும் வீடுகளின் பக்கம் கூட்டிச் சென்றாள்.

அந்த பெண் தன் வீட்டின் முன் நின்று கதவை தட்டிய சில நொடிகள் கழித்து ஒருவன் வந்து கதவை திறந்தான்.. அவன் தான் அந்தப் பெண்ணின் கணவன் போலும் என்று துஷ்யந்த் நினைத்த நொடியே,

“மாமா..” என்று அந்த ஆடவனின் மார்பில்  சாய்ந்தவள், “மாமா இன்னிக்கு கடைக்கு போய்ட்டு திரும்பி வரப்போ அந்த அயோக்கியன் என்ன பார்த்துட்டான்.. அதுமட்டுமில்ல என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் மாமா..” என்று அழுதாள்..

அந்த பெண்ணின் கணவனை எங்கோ பார்த்திருப்பதாக துஷ்யந்திற்கு தோன்றியது.. ஆனால் ஞாபகத்துக்கு வரவில்லை.. இதில் அந்த பெண் கூறிய விஷயம் வேறு அவனை யோசிக்க வைத்தது.. யாருமில்லாத இடத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த பெண்ணிடம் இவர்கள் எஸ்டேட் மேனேஜர் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தான் அவன் நினைத்தான்.. ஆனால் அப்படியில்லை போலவே என்று  குழம்பினான்..

அந்த பெண் அவ்விஷயத்தை சொன்ன நொடி அவள் கணவன் பதறினான்.. “என்ன சொல்ற மீனா.. அந்த ராஸ்கல் உன்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தானா?? அவனுக்கு என்ன தைரியம்.. அதுக்கு தான் உன்னை தனியா வெளிய போக வேண்டாம்னு சொல்றது.. நான் இப்படி போனதும், நீ கடைக்கு போய்ட்ட, வந்து பார்த்தா உன்னை காணோம்.. வீட்டுக்கு வந்து நீயில்லன்னதுமே என் மனசு பதறுச்சு.. ஏதோ தப்பா பட்டுச்சு.. கடைசியில நான் நினைச்சா மாதிரியே நடந்துடுச்சு பாரு.. ஆமா அவன்கிட்ட இருந்து எப்படி தப்பிச்ச..” என்றுக் கேட்டான்.. கதவைத் திறந்ததும் மனைவி அழுததில் அந்தப் பெண்ணின் கணவன் துஷ்யந்தை கவனிக்க தவறினான் என்றால், அந்த பெண்ணோ.. வீடு வந்து கணவனை பார்த்த நொடி,  தன்னை பாதுகாப்பாக வீடு வரை அழைத்து வந்தவனை மறந்துப் போனாள்.. இப்போது கணவன் கேட்டதும் தான் துஷ்யந்தின் ஞாபகம் வந்தது, உடனே அந்நியன் ஒருவனின் முன் கணவன் மார்பில் சாய்ந்திருக்கிறோமே என்று தோன்றி கணவனிடம் இருந்து விலகினாள்.

“நல்லவேளை மாமா.. அந்த நேரம் இவர் அந்த பக்கமா வந்ததால, அவன் ஓடிட்டான்.. இவர் தான் பத்திரமா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு..” என்று கணவனிடம் துஷ்யந்தை காட்டியவள்,

“சார் இவர் தான் என் வீட்டுக்காரர்..” என்று தன் கணவனை அறிமுகப்படுத்தினாள்.. ஆனால் அவன் கணவனுக்கோ, துஷ்யந்தின் அறிமுகம் தேவையில்லை என்பதை போல கண்ணில் ஆச்சர்யத்தை காட்டி, “சார் நீங்களா..?? என்ன சார் வெளியே நிக்கிறீங்க, உள்ள வாங்க.. என்ன சார் என்னை தெரியலையா?? நான் தான் சார் உங்க எஸ்டேட் சூப்பர்வைசர் சுந்தர்..” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, அதுவரை குழப்பமாய் அந்த சுந்தரை பார்த்துக் கொண்டிருந்த துஷ்யந்தும் உடனே அவனை அடையாளம் கண்டுக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.