(Reading time: 37 - 73 minutes)

சாரி மிஸ்டர் சுந்தர்.. உங்களை பார்த்ததும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல..”

“அதனால என்ன சார்.. நீங்க உள்ள வாங்க..” என்று அழைத்தவன், தன் மனைவியிடம்.. “மீனா இவர் தான் நான் வேலைப் பார்க்கும் எஸ்டேட்டோட ஓனர் துஷ்யந்த் சார்..” என்று அறிமுகப்படுத்தியதும், அவள் வணக்கம் வைத்தாள்..

“சரி மீனா சார்க்கு ஏதாச்சும் சாப்பிட எடுத்துட்டு வா..” என்று சுந்தர் கட்டளை பிறப்பிக்க,

“அதெல்லாம் வேணாம் சுந்தர்.. நான் விடியற்காலையில கிளம்பி ஊட்டிக்கு போனவன், இப்போ தான் வரேன்.. இனி பங்களாக்குப் போய் ஃப்ரஷ் ஆயிட்டு தான் சாப்பிடனும்..” என்றப்படி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

“சார் நீங்க இருக்கவே தான் என்னோட மனைவி எனக்கு பத்திரமா திரும்ப கிடைச்சிருக்கா… நீங்க எதுவும் சாப்பிடமா போறது கஷ்டமா இருக்கு சார்”

“அதுப்பரவாயில்ல சுந்தர்..  இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.. ஆனா சுந்தர், உங்க மனைவிக்கு நடக்க இருந்தது எதிர்பாராம நடந்த ஒரு இன்ஸிடன்ட்னு நினைச்சேன்.. ஆனா நீங்க பேசறதை பார்த்தா, இதை சாதாரணமா எடுத்துக்க முடியல. ஏதோ பிரச்சனைன்னு தெரியுது.. என்னப் பிரச்சனைன்னு நான் தெரிஞ்சிக்கலாமா??” என்றுக் கேட்டதும், கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்,

“இது உங்க பர்சனல்னு எனக்கு புரியுது சுந்தர்.. ஆனா என்னால அப்படி எடுத்துக்க முடியல.. ஏன்னா உங்க மனைவிக்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தது நம்ம எஸ்டேட் மேனேஜர் முரளி..  நான் அவனை நல்லா பார்த்தேன்..” என்றதும் சுந்தரும் மீனாவும் அதிர்ந்தனர்.

“என்னோட எஸ்டேட் மேனேஜர், என்னோட எஸ்டேட் சூப்பர்வைசரோட மனைவிக்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சத, என்னால அது அவங்க பர்சனல்னு எடுத்துக்க முடியல.. அதுவும் நீங்க பேசறதை வச்சு பார்க்கும்போது, அந்த மேனேஜரால உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு புரியுது.. அது என்னன்னு தெரிஞ்சா நான் அதை சரி செய்ய முயற்சிப்பேன்..” என்றதும்,

“மீனா நீ போய் சமயலை கவனி..” என்று தன் மனைவியை அனுப்பிவிட்டு பிரச்சனையை சொல்ல தயாரானான் சுந்தர்.. சமயலைறை ஒன்றும் அங்கிருந்து தூரம் இல்லை, அந்த வரவேற்பறையிலேயே ஒரு பகுதியை தடுத்து சமயலறையாய் மாற்றியிருந்தனர்.. இருந்தும் தன் மனைவியை அருகே வைத்துக் கொண்டு தங்கள் பிரச்சனையை அவன் சொல்ல விரும்பவில்லை… அதை புரிந்தவனாக, “நாம வேணும்னா வெளிய போய் பேசலாமா சுந்தர்..” என்று துஷ்யந்த் கேட்டான்.

“இல்லை சார் பரவாயில்ல, என் மனைவி தப்பா எடுத்துக்கமாட்டா.. உங்க மூலமா எங்கப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைச்சா சந்தோஷம் தான்..” என்றவன், தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

“மீனாவும் முரளியும் கோயம்புத்தூர்ல ஒரே காலேஜ்ல படிச்சவங்க சார்.. மீனாவ விட அவன் ஒரு வருஷம் சீனியர்.. மீனாவை பார்த்ததுல இருந்தே அவளோட அழகு அவன் கண்ணை உறுத்தியிருக்கு.. அதை அடையும் ஆசையில, காதல் நாடகத்தை அரங்கேற்றினான்.. மீனாவும் அவனோட காதலை உண்மைனு நம்பி அவனை மனசார விரும்ப ஆரம்பிச்சிட்டா.. காதலனா அவளை அடைய அவன் முயற்சி செய்ய, அவளோ கல்யாணம் வரைக்கும் கட்டுப்பாடா இருக்க நினைச்சா.. அவனோட ஆசைக்கு அவ ஒத்துக்கல.. அதனால யாருக்கும் தெரியாம கல்யாண நாடகத்தையும் அவன் அரங்கேற்றினான்.. அவள் படிப்பும் முடியற வரை, அவனுக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை இது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொல்லியிருக்கான்..

இவளும் அப்பாவியாய் அதை நம்பி, கணவன் என்கிற உரிமையில் தன்னையே முழுசா அவனுக்கு கொடுத்திட்டா.. கொஞ்ச நாள் கணவனா இவக்கிட்ட நடந்துக்கிட்டவன், அப்புறம் இவளை பார்க்கக் கூட வரல.. இவளும் அவன் மேல இருக்கும் நம்பிக்கையில மனசுக்குள்ள ஆயிரம் சமாதானம் சொல்லிக்கிட்டு அவனுக்காக காத்திருந்தா.. இதுல அவ படிப்பு முடிஞ்சதும் அவளுக்கு கல்யாணம் செய்ய வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போது தான், நடக்கப் போற விபரீதம் புரிஞ்சு தனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு வீட்ல விஷயத்தை சொல்லியிருக்கா..

பெண்ணோட வாழ்க்கைக்காக அந்த முரளிய தேடி மீனாவோட அப்பா,அம்மா முரளி வீட்டுக்கு போயிருக்காங்க.. ஆனா அவனோ “மீனாக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கல.. அவ பொய் சொல்றான்னு சொல்லியிருக்கான்.. நடந்த கல்யாணத்துக்கு சாட்சி கேட்ருக்கான்.. காதலிச்சது உண்மை, ஆனா மீனா இப்படி என்மேல பழி போட்டதால அவ நடத்தையையே சந்தேகப்பட்றதா சொல்லி அவளை கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு சொல்லியிருக்கான்.. முரளி அப்பாக்கு பெரிய இடத்து ஆளுங்களோட செல்வாக்கு அதிகமா இருக்கு.. ஆனா மீனா அப்பாவோ ஒரு சாதாரண கம்பெனில வேலை செய்றவர், அதனால இவங்க உண்மை அங்கு செல்லுப்படி ஆகல.. மீனாவை ஏமாத்தவே கவனமா திட்டம்போட்டு அவன் வேலை செஞ்சுருக்கான்.. அதனால அவங்க கல்யாணம் நடந்ததுக்கோ, அவங்க கணவன் மனைவியா வாழ்ந்ததுக்கோ ஆதாரம் இல்லை. அதனால அவங்க அதை அப்படியே விட்டுட்டாங்க..

நான் மீனா அப்பா வேலை செய்த கம்பெனில தான் முதலில் சூப்பர்வைசரா வேலை செய்தேன்.. எனக்கு அப்பா, அம்மா யாருமில்ல.. ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்கல.. அதனால மீனா வீட்ல ஒரு ரூம்ல பேயிங் கெஸ்ட் மாதிரி தங்கியிருந்தேன்.. அதனால சாப்பாடு அவங்க வீட்ல இருந்து தான் வரும்.. மீனா பார்க்க பாவமா இருப்பா.. கழுத்துல தாலியோட ஒரு உற்சாகமில்லாம எப்பவும் சோகமா இருப்பா.. அவளுக்கு என்ன பிரச்சனையா இருக்கும்னு யோசிச்சிருக்கேன்.. ஆனா அதுக்கு மேல நான் யோசிச்சதில்ல..

ஒருநாள் மீனாவோட அப்பா தான் அவளை பத்தி என்கிட்ட சொன்னாரு.. கழுத்துல தாலியோட புருஷன் யாருன்னு கூட சொல்ல முடியாத ஒரு நிலையில் என் பொண்ணு இருக்கா...ஊர்ல இருக்கவங்க அவளை தப்பா பேசறாங்கன்னு வருத்தப்பட்டு பேசினார்.. முரளி ஏமாத்தினதை பத்தி சொன்னார்.. அதுல இருந்து என் மனசு மீனாவை பத்தி அடிக்கடி யோசிக்கும்..  மீனாவோட வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடனுமான்னு நினைப்பேன்.. நாம ஏன் அவளைப் பத்தியே யோசிக்கிறோம்னு நினைப்பேன்… அப்புறம் தான் என் மனசு எனக்கு புரிய ஆரம்பிச்சுது.. அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்குன்னு நான் நினைச்ச வரைக்கும் என் மனசுல அவளை பத்தி எந்த எண்ணமும் இல்லை.. ஆனா அவளோட கதை தெரிஞ்சதுக்கு பின்னாடி, மீனாவை நானே கல்யாணம் செய்துக்கிட்டா என்னன்னு தோனுச்சு.. கண்டிப்பா அவ மேல இரக்கப்பட்டு இல்ல.. அதுக்காக அவ மேல காதல்ன்னும் சொல்ல முடியாது.. மீனாவை சந்தோஷமா வச்சிக்கனும்னு தோனுச்சு..

மனசுல அப்படி ஒரு யோசனை வந்ததுமே மீனா அப்பா, அம்மாக்கிட்ட பேசிட்டேன்.. ஆரம்பத்துல அது என்னமோ தப்புன்னு யோசிச்சாங்க.. அப்புறம் மகளோட எதிர்காலத்தை யோசிச்சு ஒத்துக்கிட்டாங்க.. அப்புறம் மீனா மனசை மாத்தி அவளை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க கொஞ்ச நாளாச்சு.. அவ ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் அவ கழுத்துல இருந்த தாலியை கோவில் உண்டியலில் போட்டுட்டு, பிறகு எங்க கல்யாணம் நல்லப்படியா நடந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.