(Reading time: 38 - 75 minutes)

ராஜா, செல்வாவோட கொள்ளு தாத்தாக்கு ரெண்டு குடும்பம்.. ராஜாவோட கொள்ளுப் பாட்டி தான் அவரோட முதல் மனைவி.. அழகானவங்க, தங்கமான குணம், வசதியான குடும்பத்துக்கு ஒரே வாரிசு, ராஜாவோட கொள்ளு தாத்தாக்கும் வசதிக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. அவரும் அவங்க வீட்டுக்கு ஒரே மகன்.. அதாவது அவரோட அண்ணன் வாலிப வயசுல பாம்பு கடிச்சு இறந்துப் போயிட்டாரு.. அதனால இவர் மட்டும் தான் அந்த வீட்டு வாரிசுன்னு ஆகிப் போனார்..

ரெண்டு வீட்டுக்காரங்களும் வசதியப் பார்த்து சம்மந்தம் செஞ்சாங்க..  தம்பதிங்க ரெண்டுப்பேரும் சந்தோஷமா அன்னியோன்மா வாழ்ந்தாங்க.. ஆனா அவங்களுக்கு சில வருஷங்கள் ஆகியும் குழந்தையில்லை.. ரெண்டு குடும்பத்துக்கும் இவங்களுக்கு பிறக்க போற குழந்தை தான் வாரிசு.. அதனால ரெண்டுக் குடும்பமும் எப்போ அவங்களுக்கு குழந்தை பிறக்கும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அதுலயும் தாத்தாவோட அம்மா, தன் மகனுக்கு வாரிசு வரனும்னு ரெண்டாவது கல்யாணம் செய்ய தயாராய் இருந்தாங்க..

ராஜாவோட கொள்ளுப் பாட்டியும் அதுக்கு மனசார சம்மதிச்சாங்க.. அவருக்கு அவ்வளவா விருப்பம் இல்லன்னாலும் அம்மாவும், மனைவியும் வற்புறுத்தவே அவரும் ஒத்துக்கிட்டாரு.. ஒரு சாதாரண குடும்பத்து பொண்ணை அவருக்கு ரெண்டாவதா கல்யாணம் செஞ்சு வச்சாங்க.. அவங்க வீட்டுக்கு வந்ததை எப்படி எடுத்துக்கறதுன்னு தெரியல.. ஏன்னா அவங்க வந்த கொஞ்ச நாளில் ராஜாவோட கொள்ளுப் பாட்டி கர்ப்பமானாங்க.. விஷயம் கேள்விப்பட்டு எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.. ஆனா ரொம்ப வருஷத்துக்குப் பிறகு குழந்தை உண்டானதுல பிரசவத்துல சிக்கலாகி, ராஜாவோட தாத்தாவை பெத்துக் கொடுத்துட்டு அவங்க இறந்து போயிட்டாங்க.. அப்புறம் அவரோட ரெண்டாவது மனைவிக்கு, ஆணு பொண்ணுன்னு அடுத்தடுத்து 5 பசங்க பிறந்தாங்க.. குடும்பம் நல்லா தான் போய்கிட்டு இருந்தது..

ஆனா அந்த வீட்டுச் சூழ்நிலை தாத்தாவோட ரெண்டாவது மனைவி மனசை கொஞ்சம் கொஞ்சமா மாத்த ஆரம்பிச்சுது.. ராஜாவோட தாத்தா அந்த வீட்டு முதல் வாரிசு, அதுவும் ரொம்ப நாள் கழிச்சு அந்த வீட்டுக்கு வந்த வாரிசுங்கிறதால, அவர்க்கிட்ட எல்லோரும் ஒருப்படி அதிகமா பாசம் காட்டினாங்க.. எல்லோருக்கும் செல்ல பிள்ளையா இருந்தாரு.. அதுவும் அவரோட அம்மா வழி தாத்தா, பாட்டிக்கும் அவர் தான் வாரிசு, தங்களோட பொண்ணும் உயிரோடு இல்லங்கிறதால, ரொம்ப பாசமா அவர் கேக்கறதை வாங்கிக் கொடுத்து பார்த்துப்பாங்க.. ஆனா எல்லாத்தையும் தம்பி, தங்கைகளோட பகிர்ந்துக்கனும்னு அவரோட அப்பா சொல்லிக் கொடுத்தே வளர்த்ததால, அவரும் நல்லப்படியா தான் வளர்ந்தாரு..

இருந்தும் அவருக்கு கிடைக்கும் சலுகை, முன்னுரிமை எல்லாம் பார்க்க பார்க்க, தாத்தாவோட ரெண்டாவது மனைவிக்கு மனசுக்குள்ள அவர் மேல ஒரு பொறாமை உண்டாச்சு.. அதை வெளிக்காட்டாம உள்ளுக்குள்ளேயே வச்சிருந்தாங்க.. இதுல யாரும் கண்டுப்பிடிக்க முடியாதபடி தன் பசங்க மனசுலயும் கொஞ்சம் கொஞ்சமா அந்த விஷத்தை விதைக்க ஆரம்பிச்சாங்க..

ராஜாவோட தாத்தாக்கு கல்யாண வயசு வந்த நேரம் அவரோட அம்மா வழி தாத்தா இறந்தாரு.. பாட்டி முன்னாடியே இறந்துட்டாங்க.. தன்னோட சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசு தன்னோட பேரன் தான்னு சொல்லி, உயில் எழுதி.. அதை பேரன் கைல ஒப்படைக்கிற பொறுப்பை தன் மருமகனிடம் கொடுத்துட்டு தான் அவர் இறந்தாரு..

அந்த உயில்படி தன்னோட மகன் கல்யாணத்துக்கு முன்னயே தன் மாமனாருக்கு கொடுத்த வாக்குப்படி அவரோட சொத்துக்களை தன்னோட மகன் பேர்ல எழுத தாத்தா முடிவு செஞ்சாரு.. அப்பத்தான் பிரச்சனை வெடிக்க ஆரம்பிச்சுது..

தாத்தா சொத்து முழுசும் பேரனுக்கு தானே, அதனால நம்ம சொத்துக்களை நம்ம 5 பசங்களுக்கு மட்டும் பங்கு போடனும்னு அவரோட மனைவி கோரிக்கை வச்சாங்க!! ஆனா அவரால அப்படி எப்படி செய்ய முடியும்?? தன் வீட்டுக்கு வந்த முதல் வாரிசு, அவரும் அவர் முதல் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்ததுக்கான சாட்சி, தன் மனைவியோட ஞாபக சின்னம்.. தன் சொத்துல தன்னோட மூத்த மகனுக்கு பங்கு கொடுக்காம எப்படி இருக்க முடியும்? அந்த கேள்வியை தன் மனைவிக்கிட்ட சொன்னப்ப,

“அப்போ உங்க மாமனாரோட சொத்துல நம்ம பசங்களுக்கும் ஏதாச்சும் கொஞ்சம் கொடுங்க.. அவருக்கு தெரிய போகுதா? உங்க மகன் மட்டும் பணக்காரனா இருக்கனும்? நம்ம பசங்க மட்டும் இருக்கறதை பங்குப் போட்டுக்கிட்டு இருக்கனுமான்னு பிரிச்சு பேச ஆரம்பிச்சாங்க..

இந்தப் பிரச்சனை கணவன், மனைவி ரெண்டுப்பேருக்கிடையே கொஞ்ச நாளா போயிட்ருந்தது.. ராஜாவோட தாத்தா, தன் அப்பாக்கும் சித்திக்கும் இடையில போய்க்கிட்டு இருந்த பிரச்சனையை கவனிச்சு என்னன்னு கேட்டதும், அவரோட அப்பா எல்லாம் விஷயத்தையும் சொன்னாரு.. சித்தி சொல்ற மாதிரி செய்ங்க, இதுல எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லன்னு பெருந்தன்மையா தான் சொன்னாரு..

ஆனா அவரோட அப்பா அதுக்கு ஒத்துக்கல, எது நியாயமோ அதை தான் செய்யப் போறேன்.. அதுக்கப்புறம் நீ உன்னோட தம்பி, தங்கைகளுக்கு செய்யாமலா போய்டப் போற.. அதனால இது தான் என் முடிவுன்னு சொன்னவர்.. அப்பவே மாமனார் விருப்பப்படி அவரோட சொத்துக்களை மகன் மேல எழுதி வைக்க முடிவெடுத்தவர், தன்னோட சொத்துக்களையும் பிரிச்சு கொடுத்திட முடிவு செயதார்..

விஷயம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சுது.. மனைவி தான் இப்படி இருக்கா.. ஆனா பசங்க எல்லாம் புரிஞ்சிப்பாங்கன்னு அவர் தப்பு கணக்குப் போட, அம்மா பேச்சை கேட்டு பசங்களும் அவரை எதிர்த்து நின்னாங்க.. அதுமட்டுமில்ல அவங்க அம்மா வீட்டு சொந்தப்பந்தங்களோட பேச்சைக் கேட்டு, அப்பாவை அவமானப்படுத்துற அளவுக்குப் போயிட்டாங்க..

பிள்ளைங்களும் அப்படி நடக்கறதை பார்த்து மனசு உடைஞ்சு போனவரு.. தீவிரமா தான் நினைச்ச காரியத்தை முடிச்சிட்டாரு.. அப்பா நியாயமா தான் செஞ்சாருன்னாலும், அதை புரிஞ்சிக்காத பசங்க, அநியாயமா கோர்ட்ல கேஸ் போட்டாங்க.. பிள்ளைங்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய அம்மாவும் அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாங்க..

தாத்தாவோ தான் செஞ்சது நியாயம் தான் என்கிற நம்பிக்கையில தைரியமாகவே அவங்க போட்ட கேஸை எதிர்கொண்டார்.. தீர்ப்பும் அவருக்கு சாதகமா தான் வந்துச்சு.. சொத்துக்களை பிரிச்சுக் கொடுத்தவர், இனி பிள்ளைங்கக்கிட்ட தனக்கு மரியாதை இருக்காதுன்னு தன் மூத்த பிள்ளையோட இங்க சென்னைக்கு தன்னோட மாமனார் வீட்டுக்கு வந்துட்டாரு.. அவரோட மனைவியோ தன் பிள்ளைங்களோட அங்கேயே இருந்துட்டாங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.